Revised Common Lectionary (Complementary)
ஒரு துதிப்பாடல்.
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் ராஜாவாகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
10 பிறகு நான் கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த கிண்ணம் போன்ற வட்டத்தைப் பார்த்தேன். அது இந்திர நீல ரத்தினம் போன்று காணப்பட்டது. அதற்குமேல் ஒரு சிங்காசனம் இருப்பது போலவும் தோன்றியது. 2 பிறகு சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் சணல் நூலாடை அணிந்த மனிதனிடம் சொன்னார்; “சக்கரங்களுக்கு இடையில் வா, கேருபீனின் கீழ் உள்ள பகுதிக்கு வா, கேருபீன்களின் நடுவிலே எரிந்துகொண்டிருந்த நெருப்புத் தழலைக் கை நிறைய எடு. அவற்றை எருசலேம் நகரத்தின் மேல் ஏறி.”
அந்த மனிதன் என்னைக் கடந்து போனான். 3 அந்த மனிதன் மேகங்களுக்குள் நடந்துப் போனபோது கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன. அந்த மேகம் உட்பிரகாரத்தை நிரப்பியது. 4 பிறகு பிரகாரத்திலும் ஆலயத்தின் வாசலிலும் நின்றுகொண்டிருந்த கேருபீன்களின் மேலிருந்து கர்த்தருடைய மகிமை எழும்பியது. பிறகு மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் ஆலயப் பிரகாரம் நிரம்பியது. 5 பின்னர் நான் கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தத்தைக் கேட்டேன். அச்சத்தமானது, சர்வ வல்லமையுள்ள தேவன் பேசும்போது ஏற்படும் இடியோசை போன்றிருந்தது. சிறகுகளின் சத்தத்தை வெளிப்பிரகாரம்வரை கேட்கமுடிந்தது.
6 தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான். 7 அப்போது ஒரு கேருபீன் தன் கையை கேருபீன்களுக்கிடையில் உள்ள நெருப்புவரை நீட்டி எடுத்தது. அம்மனிதனின் கைகளில் நெருப்புத் துண்டுகளை இட்டது. அம்மனிதன் போனான். 8 (கேருபீனின் சிறகுகளுக்கடியில் மனித கையைப்போன்று காணப்பட்டது)
9 பிறகு நான் நான்கு சக்கரங்கள் இருப்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு கேருபீனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒளிமிக்க மஞ்சள் நிற இரத்தினக்கல் போலிருந்தது. 10 அங்கே நான்கு சக்கரங்கள் இருந்தன. அனைத்து சக்கரங்களும் ஒன்றுபோல காணப்பட்டன. ஒரு சக்கரத்திற்குள் இன்னொரு சக்கரம் இருப்பதுபோல் தோன்றியது. 11 அவை நகரும் போதெல்லாம் நான்கும் ஒரே நேரத்தில் நகர்ந்தன. ஆனால் அவை நகரும்போது கேருபீன் திரும்பாது. தலைபார்க்கும் திசையிலேயே அவை சென்றன. அவை நகரும்போது திரும்பவில்லை. 12 அவற்றின் உடலெல்லாம் கண்கள் இருந்தன. அவற்றின் பின்புறத்திலும், கைகளிலும் சிறகுகளிலும் சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. ஆம், நான்கு சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. 13 சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என்று அழைக்கப்படுவதை நான் கேட்டேன்.
14-15 ஒவ்வொரு கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதல் முகம் கேருபீன் முகமாக இருந்தது. இரண்டாவது முகம் மனிதமுகமாக இருந்தது. மூன்றாவது முகம் சிங்கமுகமாக இருந்தது. நான்காவது முகம் கழுகின் முகமாக இருந்தது. நான் கேபார் ஆற்றருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்கள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
கேருபீன்கள் மேலே எழும்பின. 16 அவற்றோடு சக்கரங்களும் எழும்பின. கேருபீன்கள் மேலே எழும்பிக் காற்றில் பறந்தபோது சக்கரங்கள் திசை மாறவில்லை. 17 கேருபீன்கள் காற்றில் பறக்கும்போது சக்கரங்கள் அவற்றோடு சென்றன. கேருபீன்கள் அசையாமல் நின்றபோது சக்கரங்களும் நின்றன. ஏனென்றால், ஜீவனுடைய ஆவி (வல்லமை) அவற்றில் இருந்தது.
18 பிறகு கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியில் இருந்து கேருபீன்களின் மேலிருந்த இடத்திற்குச் சென்று நின்றது. 19 அப்பொழுது கேருபீன்கள் தம் சிறகுகளை விரித்துக் காற்றில் பறந்தன. அவை ஆலயத்தை விட்டுப் போவதைப் பார்த்தேன். சக்கரங்கள் அவற்றோடு சென்றன. பின்னர் அவை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலில் நின்றன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமையானது அவற்றின்மேல் காற்றில் இருந்தது.
உங்களுக்குள் தேவராஜ்யம்
(மத்தேயு 24:23-28,37-41)
20 பரிசேயர்களில் சிலர் இயேசுவை நோக்கி, “தேவனின் இராஜ்யம் எப்போது வரும்?” என்று கேட்டார்கள்.
இயேசு பதிலாக, “தேவனுடைய இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் கண்களால் பார்க்கும்படியான வகையில் அல்ல. 21 ‘பாருங்கள், தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது’ அல்லது ‘அங்கே இருக்கிறது’ என்று மக்கள் சொல்லமாட்டார்கள். இல்லை, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்றார்.
22 பின்பு இயேசு அவரது சீஷர்களை நோக்கி, “மனித குமாரனின் நாட்களில் ஒன்றை நீங்கள் காண விரும்பும் காலம் வரும். ஆனால் உங்களால் அதைப் பார்க்க இயலாது. 23 மக்கள் உங்களிடம், ‘பாருங்கள், அது அங்கே இருக்கிறது’ அல்லது ‘பாருங்கள், இங்கே அது இருக்கிறது’ என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள்” என்றார். 24 “மனித குமாரன் திரும்ப வருவார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வரும் நாளில் வானில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஒளிவிடும் மின்னலைப்போல அவர் ஒளிவீசுவார். 25 ஆனால் முதலில் மனித குமாரன் பல துன்பங்களைத் தாங்கி இந்தக் காலத்து மக்களால் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது.
26 “நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். 27 நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது.
28 “தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 29 லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது. 30 மனித குமாரன் மீண்டும் வரும்போதும் இதே விதமாக நடக்கும்.
31 “அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. 32 லோத்தின் மனைவிக்கு[a] என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்!
33 “தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக்கொள்வான். 34 இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான். 35 இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்” என்றார். 36 [b]
37 சீஷர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, இது எங்கே நடக்கும்?” என்று கேட்டார்கள். பதிலாக இயேசு, “வட்டமிடுகிற கழுகுகளைப் பார்ப்பதின் மூலம் இறந்த சடலத்தை மக்கள் எப்போதும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.
2008 by World Bible Translation Center