Revised Common Lectionary (Complementary)
23 “நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா?
என விரும்புகிறேன்.
என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா?
என விரும்புகிறேன்.
24 நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி
ஈயத்தின்மேல் ஒரு இரும்புக் கருவியால் பொறிக்கப்படவோ அல்லது பாறையில் செதுக்கப்படவோ வேண்டுமென விரும்புகிறேன்.
25 என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!
முடிவில் அவர் பூமியின்மேல் எழுந்து நின்று என்னைக் காப்பாற்றுவார்!
26 நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும்,
பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்!
27 என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்!
நானே, வேறெவருமல்ல, தேவனைக் காண்பேன்!
நான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டவனாக உணருகிறேன் என்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது.
தாவீதின் ஒரு ஜெபம்.
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
தீயசெயல்கள் நிகழும்
2 சகோதர, சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது பற்றிச் சில காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. நாம் எப்போது அவரோடு ஒன்று சேருவோம் என்பது பற்றிப் பேச நாங்கள் விரும்புகிறோம். 2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம். 3 எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் குமாரனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன். 4 அவன் தேவனுக்கும் மனிதர்களின் வழிபாடுகளுக்கும் எதிரானவன். அவன் தேவனுடைய ஆலயத்திற்கும் சென்று அங்கே உட்காருவான். பிறகு, தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்வான்.
5 இக்காரியங்கள் நிகழும் என்பது பற்றி முன்னரே நான் உங்களிடம் கூறினேன், ஞாபகம் இருக்கிறதா?
மீட்கப்படுவதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்
13 சகோதர, சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே, உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவராலும், உண்மையின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தாலும் இரட்சிக்கப்படுகிறீர்கள். 14 அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார். 15 சகோதர சகோதரிகளே! ஆகையால் உறுதியாய் நில்லுங்கள். எங்கள் போதனைகளில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அவற்றை நாங்கள் பிரசங்கங்கள் மூலமும், நிருபங்களின் மூலமும் உங்களுக்குப் போதித்திருக்கிறோம்.
16-17 நம்மை நேசித்தும், நமக்கு நல்ல விசுவாசத்தைக் கொடுத்தும், எக்காலத்திலும் தொடர்கிற ஆறுதலை வழங்கியும் வருகிற இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தரும், நம் பிதாவாகிய தேவனும் தொடர்ந்து உங்களை ஆறுதல்படுத்தவும், நீங்கள் சொல்கிற, மற்றும் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் உங்களை வலிமையுறச் செய்யவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
சதுசேயர்களின் தந்திரம்
(மத்தேயு 22:23-33; மாற்கு 12:18-27)
27 சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி, 28 “போதகரே, திருமணமான மனிதன் குழந்தைகளின்றி இறந்துபோனால், அவனது சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மோசே எழுதி இருந்தார். அப்படியானால் இறந்த சகோதரனுக்காகக் குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கும். 29 ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான். 30 பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான். 31 மூன்றாமவனும் அவளை மணந்து பின்னர் இறந்தான். ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். 32 அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள். 33 எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள்.
34 இயேசு சதுசேயரை நோக்கி, “பூமியில் மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்கின்றனர். 35 சிலர் மரணத்தினின்று எழும்பி அடுத்த உலகத்தில் பங்கு பெறும் தகுதியைப் பெறுவர். அந்த வாழ்வில் அவர்கள் மணம் செய்துகொள்ளமாட்டார்கள். 36 அந்த வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். அவர்களால் சாகமுடியாது. அவர்கள் மரணத்தினின்று எழுந்ததால் தேவனின் மக்களாவர். 37 மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவர் என்பதை மோசே தெளிவாகக் காட்டினான். எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன்(A) என்றும் கூறினான். 38 அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.
2008 by World Bible Translation Center