Revised Common Lectionary (Complementary)
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
8 தீயவர்கள் கொடுக்கிற பலிகளை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களைக் கேட்பதில் கர்த்தர் மகிழ்கிறார்.
9 தீயவர்களின் வாழ்க்கை முறையை கர்த்தர் வெறுக்கிறார். நல்லவற்றைச் செய்ய முயல்கிறவர்களை கர்த்தர் நேசிக்கிறார்.
10 ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான்.
11 கர்த்தருக்கு எல்லாம் தெரியும். மரண இடத்திலும் என்ன நடக்கும் என்பதையும் அவர் அறிவார். எனவே கர்த்தர் ஜனங்களின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை நிச்சயமாகவே அறிவார்.
24 வாழ்விக்கும் வழியைக் கடைபிடித்துத் வாழ்வடையும் நல்லவன், கீழ் நோக்கிச் செல்லும் மரணத்தின் பாதையைத் தவிர்த்துவிடுகிறான்.
25 வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
26 கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.
27 ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக்கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை.
28 நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.
29 தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார்.
30 ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக்கொள்ளச் செய்கின்றன.
31 நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.
32 ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான்.
33 கர்த்தரை மதிக்கிறவன் அறிவுள்ளவனாகக் கற்றுக்கொள்கிறான். ஒருவன் உண்மையாகவே கர்த்தரை மதிப்பதற்கு முன்பு அவன் பணிவுள்ளவனாக இருக்கவேண்டும்.
1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, நான் அப்போஸ்தலன் ஆனேன். ஏனென்றால் நான் அவ்விதம் ஆவதையே தேவன் விரும்பினார். கிறிஸ்துவில் நமது சகோதரனாகிய தீமோத்தேயுவிடமிருந்தும்
கொரிந்து நகரின் தேவனுடைய சபைக்கும் அகாயா நாடெங்கும் உள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது,
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்
3 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான். 4 நாம் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஆறுதல் வழங்குகிறார். இது எந்த வகையிலாவது மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்போது நாம் ஆறுதல் வழங்கத் துணையாயிருக்கும். நம்மை தேவன் ஆறுதல்படுத்துவதைப் போலவே நாம் அவர்களையும் ஆறுதல்படுத்த வேண்டும். 5 கிறிஸ்துவின் அநேக துன்பங்களில் நாம் பங்கு கொண்டால் கிறிஸ்துவிடமிருந்து நமக்கு மிகுந்த ஆறுதலும் கிடைக்கும். 6 நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும். 7 உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.
8 சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம். 9 உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர். 10 இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். 11 நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.
2008 by World Bible Translation Center