Revised Common Lectionary (Complementary)
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
9 எனது தலை தண்ணீரால் நிறைக்கப்பட்டால்,
எனது கண்கள் கண்ணீரின் ஊற்றாக இருந்தால் நான் இரவும் பகலும்,
அழிந்துப்போன எனது ஜனங்களுக்காக அழ முடியும்!
2 வழிபோக்கர்கள் இரவிலே தங்குவதற்கு,
வனாந்தரத்திலே எனக்கென்றொரு வீடு இருந்திருக்குமானால் நல்லது.
அப்பொழுது நான் எனது ஜனங்களை விட்டுப்போவேன்.
நான் அந்த ஜனங்களிலிருந்து தூரப் போய்விடுவேன்.
ஏனென்றால், அவர்கள் தேவன் மேல் விசுவாசம் இல்லாதவர்கள்.
அவர்கள் அனைவரும் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
3 “அந்த ஜனங்கள் தங்களது நாக்குகளை வில்லைப்போன்று பயன்படுத்துகின்றனர்.
அவர்களது வாய்களிலிருந்து பொய்கள் அம்புகளைப்போன்று பறக்கின்றன.
இந்த நாட்டில் உண்மைகளல்ல பொய்கள் மிகப் பலமாக வளர்ந்திருக்கின்றன.
ஜனங்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போகிறார்கள்.
அவர்களுக்கு என்னைத் தெரியாது”
கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்.
4 கர்த்தர், “உனது அண்டை வீட்டாரை கவனியுங்கள்!
உனது சொந்தச் சகோதரர்களையும் நம்பாதீர்கள்!
ஏனென்றால், ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான்.
ஒவ்வொரு அண்டைவீட்டானும், உனது முதுகுக்குப் பின்னால் பேசுகிறான்.
5 ஒவ்வொருவனும் தனது அண்டை வீட்டானுக்கு பொய்யனாக இருக்கிறான்.
எவனும் உண்மையைப் பேசுவதில்லை.
யூதாவின் ஜனங்கள் தம் நாக்குகளுக்கு
பொய்யையே கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
சோர்ந்துபோகிற அளவுக்கு
பாவம் செய்தார்கள்.
6 ஒரு கெட்டச் செயலை இன்னொன்று தொடர்கிறது.
பொய்கள், பொய்களைத் தொடர்கின்றன.
ஜனங்கள் என்னை அறிய மறுக்கின்றனர்”
என்று கர்த்தர் கூறினார்.
7 எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“ஒரு வேலையாள், ஒரு உலோகத்தை அது சுத்தமாயிருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக நெருப்பிலே சூடுபடுத்துகிறான்.
அதுபோல நான் யூதா ஜனங்களை சோதனைச் செய்கிறேன்.
எனக்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை.
எனது ஜனங்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.
8 யூதா ஜனங்கள் அம்புகளைப் போன்ற கூர்மையான நாக்குகளை வைத்திருக்கிறார்கள்.
அவர்களது வாய்கள் பொய்யைப் பேசுகின்றன.
ஒவ்வொரு நபரும் தனது அயலானிடம் சமாதானமாய் பேசுகிறான்.
ஆனால், அவன் இரகசியமாக தனது அயலானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான்.
9 யூதா ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“அந்த வகையான ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும் என்று நீ அறிவாய்.
அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.”
10 நான் (எரேமியா) மலைகளுக்காக உரக்க அழுவேன்.
காலியான வயல்களுக்காக நான் ஒப்பாரிப் பாடலைப் பாடுவேன்.
ஏனென்றால், உயிர் வாழ்வன அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும்.
இப்பொழுது எவரும் அங்கு பயணம் செய்யமாட்டார்கள்.
ஆடுமாடுகளின் சத்தத்தை அங்கே கேட்கமுடியாது.
பறவைகள் பறந்து போயிருக்கின்றன.
மிருகங்கள் போய்விட்டன.
11 “நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன்.
அது ஓநாய்களின் வீடாகும்.
யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன்,
அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.”
12 இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளுகிற அளவிற்கு ஒரு ஞானமுள்ள மனிதன் அங்கே இருக்கிறானா?
கர்த்தரால் கற்பிக்கப்பட்டிருக்கிற சிலர் அங்கே இருக்கிறார்களா?
கர்த்தருடைய செய்தியை எவரொருவராலும் விளக்கமுடியுமா?
அந்தப் பூமி ஏன் வீணாயிற்று?
எந்த மனிதரும் போகமுடியாத அளவிற்கு அது ஏன் வெறுமையான வனாந்தரமாயிற்று?
13 கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார்.
அவர் கூறினார்:
“இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள்.
நான் எனது போதனைகளைக் கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர்.
14 யூதாவின் ஜனங்கள் தங்கள் சொந்த வழியிலேயே வாழ்ந்தார்கள்.
அவர்கள் பிடிவாதக்காரர்கள்,
அவர்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொள்கிறார்கள்.
அவர்களின் தந்தைகள் அந்தப் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள சொல்லித் தந்தனர்.”
15 “எனவே, இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்:
நான் விரைவில் யூதா ஜனங்களைத் தண்டிப்பேன்.
16 நான் யூதாவின் ஜனங்களை பல நாடுகளிலும் சிதறும்படி செய்வேன்.
அவர்கள் புற ஜாதிகளுக்குள் வாழ்வார்கள்.
அவர்களும் அவர்களது தந்தைகளும் அந்த நாடுகளைப்பற்றி எப்பொழுதும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நான் பட்டயங்களுடன் ஆட்களை அனுப்புவேன்.
அவர்கள் யூதாவின் ஜனங்களைக் கொல்வார்கள்.
ஜனங்கள் முடிந்து போகுமட்டும் அவர்கள் அவர்களைக் கொல்வார்கள்.”
இறுதி நாட்கள்
3 இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். 2 அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். 3 அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். 4 இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். 5 அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு.
6 சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். 7 அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். 8 யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். 9 ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது.
2008 by World Bible Translation Center