Revised Common Lectionary (Complementary)
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.
57 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
2 மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
3 பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
4 என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்,
அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.
5 தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
6 அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.
7 ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
8 என் ஆத்துமாவே, எழுந்திரு.
வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
9 என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
10 உமது உண்மையான அன்பு
வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
23 அந்த நேரத்தில் தான் அபிகாயில் வந்து சேர்ந்தாள். அவள் தாவீதைப் பார்த்ததும் கழுதையிலிருந்து இறங்கி தரையில் முகம்படும்படி குனிந்து தாவீதின் முன்பு நின்றாள். 24 அபிகாயில் அவன் காலில் விழுந்து, “ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நடந்தவற்றிற்கு என்னைப் பழிவாங்குங்கள். 25 நீங்கள் அனுப்பினவர்களை நான் பார்க்கவில்லை. பயனற்றக் கொடிய மனிதனாகிய நாபாலிடம் கவனம் செலுத்தாதிருங்கள். அவன் தன் பெயரைப் போலவே அறிவீனனாக இருக்கிறான். 26 அப்பாவி ஜனங்களைக் கொல்வதினின்றும் கர்த்தர் உங்களை விலக்கட்டும். கர்த்தருடைய ஜீவன் பேரிலும் உங்கள் ஜீவன் பேரிலும், உங்களுடைய பகைவர்களும், நாபாலைப் போன்று உமக்குத் தீமை செய்பவர்களும் அழிந்து போவார்கள் என நம்புகிறேன். 27 இப்போது, உங்களுக்கு இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை உங்கள் மனிதர்களுக்கு கொடுங்கள். 28 நான் தவறு செய்தால் மன்னித்துவிடும். உங்கள் குடும்பத்தை கர்த்தர் பெலப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தில் இருந்து பல ராஜாக்கள் புறப்படுவார்கள். நீங்கள் கர்த்தருக்காகப் போர் செய்து வருவதால் அவர் இதனை உமக்காகச் செய்வார்! நீங்கள் வாழ்கின்ற காலம் வரை ஜனங்கள் உங்களிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள். 29 எவராவது உங்களைக் கொல்வதற்குத் தொடர்ந்து வந்தால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்! ஆனால் உங்கள் பகைவர்களை கர்த்தர் கவணில் உள்ள கல்லைப் போன்று தூர எறிவார்! 30 உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப்போவதாக கர்த்தர் வாக்கு செய்துள்ளார். கர்த்தர் தமது வாக்கைக் காப்பாற்றுவார்! தேவன் உம்மை இஸ்ரவேலரின் தலைவராக்குவார். 31 அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.
32 தாவீது அபிகாயிலிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்று. என்னிடம் உன்னை அனுப்பியதற்காக தேவனைப் போற்று. 33 உனது நல்ல தீர்ப்புக்காக தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இன்று அப்பாவிகளைக் கொன்றுப்போடாமல் என்னைக் காப்பாற்றினாய். 34 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியமாகக் கூறுகிறேன். நீ இவ்வளவு விரைவாக வந்து என்னை சந்திக்காமல் இருந்தால் நாளை விடிவதற்குள் நாபாலின் குடும்பத்தில் ஒருவன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள்” என்றான்.
35 பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டான். அவளிடம், “வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்” என்றான்.
பொறுமையாய் இருங்கள்
7 சகோதர சகோதரிகளே, பொறுமையாக இருங்கள். கர்த்தராகிய இயேசு வருவார். காலம் வரும்வரை பொறுமையாக இருங்கள். ஒரு விவசாயி தன் பயிர் வளர்ந்து அறுவடையாகும்வரை காத்திருக்கிறான். தன் பயிருக்காக வேண்டி முதல் மழைக்கும் இறுதி மழைக்கும் அவன் மிகப் பொறுமையாக காத்திருக்கிறான். 8 நீங்களும் கூடப் பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கர்த்தராகிய இயேசு சீக்கிரம் வருவார். 9 சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே குற்றவாளியாக நியாயம் தீர்த்துக்கொள்ளாதபடிக்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து புகார்கள் செய்வதை நிறுத்துங்கள். பாருங்கள், கதவுக்கு வெளியே நீதிபதி நின்றுகொண்டிருக்கிறார்.
10 துன்பப்படுதலுக்கும் பொறுமைக்கும் ஒரு உதாரணமாகக் கர்த்தரின் பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். 11 சகித்துக்கொண்டதால் இப்போது நாம் அவர்களை “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறோம். நீங்கள் யோபின் பொறுமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவரது அனைத்துத் துன்பங்களுக்கும் பிறகு கர்த்தர் உதவினார். இது, தேவன் கிருபையும், இரக்கமும் உடையவர் என்பதைக் காட்டும்.
நீங்கள் சொல்வதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
12 எனது சகோதர சகோதரிகளே, இது மிகவும் முக்கியமானது. பரலோகம் அல்லது பூமியின் பெயரைப் பயன்படுத்தி ஆணையிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் எந்த ஆணையுமே இடாதீர்கள். உங்கள் “ஆமாம்” என்பது “ஆமாமாகவே” இருக்க வேண்டும். மேலும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” யாகவே இருக்கவேண்டும். நீங்கள் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு இதை மட்டுமே சொல்லுங்கள்.
2008 by World Bible Translation Center