Revised Common Lectionary (Complementary)
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.
57 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
2 மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
3 பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
4 என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்,
அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.
5 தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
6 அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.
7 ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
8 என் ஆத்துமாவே, எழுந்திரு.
வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
9 என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
10 உமது உண்மையான அன்பு
வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
2 மாகோனில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் 3,000 ஆடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் இருந்துக் கொண்டு தன் வியாபாரத்தைக் கவனித்து வந்தான். அவன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க அங்கே போய் வருவான். 3 இவனது பெயர் நாபால். இவன் காலேபின் குடும்பத்தவன். இவனது மனைவி அபிகாயில் புத்திசாலித்தனமும் அழகும் கொண்டவள். ஆனால் நாபால் அற்பனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான்.
4 பாலைவனத்தில் நாபால் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதாக தாவீது அறிந்து கொண்டான். 5 அவனோடு பேச, தாவீது 10 இளைஞர்களை அனுப்பினான். அவர்களிடம், “கர்மேலுக்குப் போங்கள், நாபாலைக் கண்டு எனக்காக வாழ்த்துச் சொல்லுங்கள்” என்றான். 6 தாவீது நாபாலுக்கு இந்த செய்தியையும் சொல்லி அனுப்பினான்,
“நீயும் உனது குடும்பத்தாரும் நலமென்று நம்புகிறேன். உனக்குரிய அனைத்தும் நலமென்று நம்புகிறேன். 7 நீ மயிர் கத்தரிப்பதாக அறிந்தேன். கொஞ்ச நேரம் உனது மேய்ப்பர்கள் எங்களோடு இருக்கையில், அவர்களுக்கு நாங்கள் தீங்கு செய்யவில்லை. அவர்கள் கர்மேலில் இருக்கும்வரை அவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை. 8 உன் வேலைக்காரரிடம் கேட்டுப்பார். அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். என் இளைஞரிடம் கருணையோடு இரு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உன்னிடம் வந்திருக்கிறோம். உன்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடு. இதை எனக்காகவும் உனது நண்பன்[a] தாவீதிற்காகவும் செய்” என்றான்.
9 தாவீதின் ஆட்கள் நாபாலிடம் சென்றனர். தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். 10 ஆனால் நாபால் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டான். அவன், “தாவீது யார்? இந்த ஈசாயின் குமாரன் யார்? இந்நாட்களில் பல அடிமைகள் தம் எஜமானர்களைவிட்டு ஓடிப்போகிறார்கள்! 11 என்னிடம் அப்பமும் தண்ணீரும் உள்ளன. மயிர் கத்தரித்தவர்களுக்காக, நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். ஆனால், அதை எனக்கு முன்-பின் அறியாதவர்களுக்காக கொடுக்கமாட்டேன்!” என்றான்.
12 தாவீதின் இளைஞர் திரும்பி வந்து நாபால் சொன்னவற்றை சொன்னார்கள். 13 அதற்கு தாவீது, “உங்கள் பட்டயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றான். தாவீதும் அவனது ஆட்களும் தங்கள் பட்டயங்களை எடுத்தனர். அவனோடு 400 பேர் சென்றனர். மீதி 200 பேர் தங்கள் பொருட்களுக்கருகில் அங்கேயே தங்கினார்கள்.
அபிகாயில் ஆபத்தைத் தவிர்க்கிறாள்
14 நாபாலின் வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் பேசி, “நமது எஜமானர் நாபாலைப் பாராட்டும்படி தாவீது தன் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் நாபால் அவர்களிடம் அற்பமாக நடந்துக்கொண்டான். 15 அவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நாம் வயல்களில் ஊருக்கு வெளியே இருந்தோம். தாவீதின் ஆட்கள் எப்போதும் நம்மோடு தங்கி இருக்கையில் அவர்கள் நமக்கு தீமை செய்யவில்லை! நமக்குரியவற்றை ஒருபோதும் திருடவில்லை! 16 இரவும் பகலும் தாவீதின் ஆட்கள் நம்மைக் காப்பாற்றினார்கள். நம்மைச் சுற்றிலும் அவர்கள் சுவர்களைப் போன்று காவலாக இருந்தார்கள். நாம் மந்தைகளை நடத்திச் செல்லும்போது உதவுவார்கள். 17 இப்போது சிந்தித்துப் பார்த்து நாம் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யுங்கள். நாபால் தன் காரியங்களைப் பேசினது அறிவீனமாய் இருக்கிறது! இப்போது நமது எஜமானனுக்கும் அவனது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது” என்றான்.
18 இதைக் கேட்டதும், அபிகாயில் அவசரமாக 200 அப்பத்துண்டுகளையும், 2 திராட்சைரசப்பைகளையும், 5 சமைத்த ஆடுகளையும், 5 படி வறுத்த பயிரையும், வற்றலான 100 திராட்சைக் குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கழுதையின் மேல் ஏற்றினாள். 19 பின் அவள் தன் வேலைக்காரனிடம், “நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்” என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை.
20 அவள் கழுதையின் மேல் சவாரி செய்து மலையின் அடுத்தப் பகுதிக்கு வந்தாள். எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த தாவீதையும் அவனது ஆட்களையும் சந்தித்தாள்.
21 தாவீது அபிகாயிலை சந்திக்கும் முன், “நான் இந்தப் பாலைவனத்தில் நாபாலின் சொத்துக்களைக் காப்பாற்றினேன். அவனது ஆடுகள் எதுவும் தவறிப்போகாது என நான் உறுதி செய்தேன். நான் பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யவில்லை! அவனுக்கு நன்மைகளைச் செய்தேன். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டான். 22 நாளைக் காலைக்குள் நாபாலின் குடும்பத்தில் உள்ள ஒருவரையாவது உயிரோடுவிட்டு வைத்தால் தேவன் என்னைத் தண்டிப்பார்” என்று சொல்லியிருந்தான்.
பிரச்சனைகளைத் தீர்த்தல்
6 உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? 2 தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். 3 எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். 4 எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். 5 நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். 6 ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?
7 உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். 8 ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.
9-10 தவறிழைக்கும் மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கு இல்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஏமாற்றப்படாதீர்கள். பாலுறவில் பாவம் செய்யும் மக்களும், உருவங்களை வழிபடும் மக்களும், பிற பெண்களை நாடும் மனிதர்களும் மற்ற மனிதர்கள் தம்மை பாலுறவுக்காப் பயன்படுத்த அனுமதிக்கும் மனிதர்களும், பிற மனிதர்களோடு பாலுறவு கொள்ளும் மனிதர்களும், களவு செய்வோரும், தன்னலம் உடையோரும், குடிப்பழக்கம் உள்ளவர்களும், தீயவற்றை பிறருக்குச் சொல்லும் மனிதர்களும், ஏமாற்றுவோர்களுமாகிய மனிதர்களும் தேவனுடைய இராஜ்யத்தை அடையமாட்டார்கள். 11 முன்னர் உங்களில் சிலரும் அவ்வாறு வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் தூய்மையாய்க் கழுவப்பட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். கர்த்தரின் பெயரால் தேவனோடு சரியானவர்களாக நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.
2008 by World Bible Translation Center