Revised Common Lectionary (Complementary)
22 பின்னிரவில் எழுந்து அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். அவன் தனது இரண்டு மனைவிகளையும், இரண்டு வேலைக்காரிகளையும், பதினொரு குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்தான். 23 முதலில் தன் குடும்பத்தை ஆற்றைக் கடக்க அனுப்பினான். பிறகு தனக்குரிய அனைத்தும் கடக்க உதவினான்.
தேவனோடு போராடுதல்
24 யாக்கோபு ஆற்றைக் கடந்தவர்களில் கடைசி நபர். அவன் ஆற்றைக் கடக்குமுன், தனியாக நிற்கும்போது தேவதூதனைப் போன்ற ஒருவர் வந்து அவனோடு போராடினார். சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் போராடியும், 25 அந்த மனிதரை யாக்கோபு விடுவதாயில்லை. எனவே, அவர் யாக்கோபின் தொடையைத் தொட்டார். அப்போது யாக்கோபின் கால் சுளுக்கிக்கொண்டது.
26 அந்த மனிதர் யாக்கோபிடம், “என்னைப் போக விடுகிறாயா? சூரியன் உதித்துவிட்டது” என்று கேட்டார்.
அதற்கு யாக்கோபு, “நான் உம்மைப் போகவிடமாட்டேன். நீர் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும்” என்றான்.
27 அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான்.
28 பிறகு அந்த மனிதர், “உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. உன் பெயர் இஸ்ரவேல். நீ தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டபடியால் நான் உனக்கு இந்தப் பெயரை வைக்கிறேன். உன்னைத் தோற்கடிக்க மனிதர்களால் முடியாது” என்றார்.
29 யாக்கோபு அவரிடம், “உமது பெயரைத் தயவு செய்து சொல்லும்” என்றான்.
ஆனால் அவர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். அதே சமயத்தில் அவர் யாக்கோபை ஆசீர்வதித்தார்.
30 எனவே, யாக்கோபு அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயர் வைத்தான். “இந்த இடத்தில் நான் தேவனை முகமுகமாய்ப் பார்த்தேன். உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்றான். 31 அவன் பெனியேலைக் கடந்து போகையில் சூரியன் உதயமாகிவிட்டது. அவனது தொடை சுளுக்கிக்கொண்டதால் நொண்டி, நொண்டி நடந்தான்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
3 தேவன் உன்னை விழவிடமாட்டார்.
உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
தேவன் ஒருபோதும் உறங்கார்.
5 கர்த்தர் உன் பாதுகாவலர்.
அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
14 நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். 15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். 16 அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். 17 வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.
4 தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன். 2 மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி.
3 மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். 4 மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர். 5 ஆனால் நீ எப்பொழுதும் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்க. நற்செய்தியைச் சொல்லும் வேலையைச் செய்க. தேவனின் ஊழியனாக அனைத்து கடமைகளையும் செய்க.
பலன் தரும் தேவன்
18 சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: 2 “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். 3 அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். 4 அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். 5 ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.
6 “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். 7 தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். 8 நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.
2008 by World Bible Translation Center