Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
3 தேவன் உன்னை விழவிடமாட்டார்.
உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
தேவன் ஒருபோதும் உறங்கார்.
5 கர்த்தர் உன் பாதுகாவலர்.
அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
3 யாக்கோபின் சகோதரனான ஏசா, சேயீர் பகுதியில் வாழ்ந்து வந்தான். அது ஏதோம் நாட்டைச் சேர்ந்தது. யாக்கோபு ஏசாவிடம் தூதுவர்களை அனுப்பினான். 4 யாக்கோபு அவர்களிடம், “எனது எஜமானனான ஏசாவிடம் இதைச் சொல்லுங்கள்: ‘உங்கள் வேலைக்காரனான யாக்கோபு இந்த நாள்வரை லாபானோடு வாழ்ந்தேன். 5 என்னிடம் நிறைய பசுக்களும், கழுதைகளும், ஆடுகளும், ஆண் வேலைக்காரர்களும், பெண் வேலைக்காரர்களும் உள்ளனர். ஐயா நீர் எங்களை ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த தூதுவரை அனுப்பினேன்’” என்றான்.
6 தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உங்கள் சகோதரர் ஏசாவிடம் சொன்னோம். அவர் உங்களைச் சந்திக்க 400 பேரோடே வருகிறார்” என்றனர்.
7 அதனால் யாக்கோபு பயந்தான். தன்னோடு இருந்தவர்களையும் மிருகங்களையும் இரு பிரிவாகப் பிரித்தான். 8 “ஏசா வந்து ஒரு பிரிவை அழித்தால் இன்னொரு பிரிவு தப்பி ஓடிப் பிழைத்துக்கொள்ளும்” என்று நினைத்தான்.
9 “என் தந்தையாகிய ஆபிரகாமின் தேவனே! என் தந்தையாகிய ஈசாக்கின் தேவனே, கர்த்தாவே, என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகுமாறு சொன்னீர். எனக்கு நன்மை செய்வதாகவும் சொன்னீர். 10 என் மீது நீர் வைத்த மிகுதியான கருணைக்கும் நன்மைகளுக்கும் நான் தகுதியுடையவனில்லை. நான் யோர்தான் ஆற்றை முதல் முறையாகக் கடந்து சென்றபோது, என்னிடம் எதுவுமில்லை. ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. இப்போது என்னிடம் இரு குழுக்களாகப் பிரிக்கும் அளவிற்கு எல்லாம் உள்ளது. 11 இப்போது என்னை என் சகோதரனாகிய ஏசாவிடமிருந்து காப்பாற்றும். அவனைக் குறித்து நான் அஞ்சுகிறேன். அவன் வந்து அனைவரையும் கொன்றுவிடுவான். 12 கர்த்தாவே, ‘நான் உனக்கு நன்மை செய்வேன் என்று சொன்னீர். உனது குடும்பத்தையும் ஜனங்களையும் கடற்கரையிலுள்ள மணலைப் போன்று பெருகச் செய்வேன்’ என்று சொன்னீர்” என்று பிரார்த்தித்தான்.
13 யாக்கோபு இரவு முழுவதும் அங்கே தங்கி இருந்தான். ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க சில பொருட்களைத் தயார் செய்து வைத்தான். 14 200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும், 15 பால் கொடுக்கும் 30 ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும், 40 கடாரிகளையும், 10 காளைகளையும் 20 பெண் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தான். 16 வேலைக்காரனிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்புவித்து, “எனக்கு முன்னால் போங்கள். ஒவ்வொரு மந்தைக்கும் இடைவெளி இருக்கட்டும்” என்றான். 17 யாக்கோபு அவர்களுக்குச் சில ஆணைகளையும் இட்டான். முதல் குழுவிடம், “என் சகோதரன் வந்து, ‘யாருடைய மிருகங்கள் இவை? எங்கே போகின்றன? யாருடைய வேலைக்காரர்கள் நீங்கள்’ என்று கேட்டால் நீங்கள், 18 ‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் மிருகங்கள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
19 யாக்கோபு இரண்டாம் வேலைக்காரனுக்கும், மூன்றாம் வேலைக்காரனுக்கும், மற்ற வேலைக்காரர்களுக்கும் இவ்வாறே கட்டளையிட்டான். “நீங்கள் ஏசாவைச் சந்திக்கும்போது. 20 இவ்வாறே சொல்ல வேண்டும். ‘இவை உங்களுக்கான பரிசுகள். உங்கள் அடிமையான யாக்கோபு பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’, என்று சொல்லவேண்டும்” என்றான்.
யாக்கோபு, “இவர்களையும் பரிசுகளையும் முதலில் அனுப்பி வைத்ததால் என் சகோதரன் ஏசா இவற்றை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடலாம்” என்று எண்ணினான். 21 எனவே, யாக்கோபு பரிசுகளை அனுப்பிவிட்டு அன்று இரவு கூடாரத்திலேயே தங்கிவிட்டான்.
குருடன் குணமாக்கப்படுதல்
(மத்தேயு 20:29-34; லூக்கா 18:35-43)
46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் குமாரன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். 47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான்.
48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான்.
49 அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார்.
எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர். 50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான்.
51 இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.
அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான்.
52 “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.
2008 by World Bible Translation Center