Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
3 தேவன் உன்னை விழவிடமாட்டார்.
உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
தேவன் ஒருபோதும் உறங்கார்.
5 கர்த்தர் உன் பாதுகாவலர்.
அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
யாக்கோபும் லாபானும் செய்த ஒப்பந்தம்
43 லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் குமாரத்திகள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது குமாரத்திகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது. 44 எனவே நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். நாம் இங்கே ஒரு கற்குவியலை அமைத்து அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவு சின்னமாகக் கருதுவோம்” என்றான்.
45 அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தான். 46 மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர். 47 லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர்.
48 லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.
49 பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது.
50 மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார். 51 நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது. 52 நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது. 53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்களது முற்பிதாக்களின் தேவனுமானவர், நாம் இந்த ஒப்பந்தத்தை உடைத்தால், குற்றவாளி யாரென்று நியாயந்தீர்க்கட்டும்” என்றான்.
யாக்கோபின் தந்தையான ஈசாக்கு தேவனை “பயபக்திக்குரியவர்” என்று அழைத்தார். யாக்கோபு அந்தப் பெயரிலேயே வாக்குறுதி செய்தான். 54 பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர். 55 மறு நாள் அதிகாலையில், லாபான் எழுந்து தன் குமாரத்திகளையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.
ஏசாவோடு திரும்ப சேருதல்
32 யாக்கோபும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். வழியில் அவன் தேவ தூதர்களைக் கண்டான். 2 அவர்களைப் பார்த்ததும், “இதுவே தேவனின் முகாம்” என்று எண்ணினான். அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பேர் வைத்தான்.
அங்கீகரிக்கப்பட்ட வேலையாள்
14 மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும். 15 தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்.
16 தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும். 17 அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே. 18 அவர்களின் போதனைகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. மரணத்திலிருந்து எழுங்காலம் ஏற்கெனவே நடந்து முடிந்துபோனது என்று அவர்கள் போதிக்கிறார்கள். அந்த இருவரும் சில மனிதர்களின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.
19 ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, “கர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும்.” “கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்”(A) என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.
20 ஒரு பெரிய வீட்டில் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. அதோடு மரத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட பொருட்களும் உள்ளன. சில பொருட்கள் சில விசேஷ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை பிற காரியங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உள்ளன. 21 எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான்.
22 ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். 23 இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 24 கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். 25 தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். 26 பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.
2008 by World Bible Translation Center