Revised Common Lectionary (Complementary)
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
61 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
என் ஜெபத்தைக் கேளும்.
2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
6 ராஜாவுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
அவர் என்றென்றும் வாழட்டும்!
7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
15 நாகமானும் அவனது குழுவும் தேவ மனிதனிடம் (எலிசாவிடம்) திரும்பி வந்தனர். நாகமான் எலிசாவின் முன் நின்று, “உலகம் முழுவதிலும் பாரும், இஸ்ரவேலைத் தவிர வேறெங்கும் தேவன் இல்லை என்பதைத் தெரிந்துக்கொண்டேன்! இப்போது உமது வேலையாளான என்னிடமிருந்து அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்றான்.
16 ஆனால் எலிசாவோ, “நான் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன். நான் எவ்வித அன்பளிப்புகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், என்று கர்த்தர் மீது ஆணையிட்டுள்ளேன்” என்றான்.
நாகமான் எவ்வளவோ முயன்று பார்த்தான். எலிசாவோ அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 17 பிறகு நாகமான், “எனது அன்பளிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனக்காக இதைச் செய்யுங்கள். நான் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கும்படி இஸ்ரவேலிலிருந்து மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இனிமேல் நான் கர்த்தரைத் தவிர வேறு எந்த தெய்வங்களுக்கும் காணிக்கையும் பலிகளையும் தகன பலியையும் அளிக்கமாட்டேன்! 18 இதற்காக என்னை மன்னிக்கும்படி இப்போழுது கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன். என் எஜமான் (ராஜா) போலித் தெய்வமான ரிம்மோனின் ஆலயத்திற்குள் போய் தொழுகைச் செய்யும்போது நானும் அவனோடு போகவேண்டியதிருக்கும். என் மீது சாய்ந்துக்கொள்ள ராஜா விரும்புவான். எனவே அந்த ரிம்மோனின் ஆலயத்திற்குள் வணங்கிக் குனியவேண்டியதிருக்கும் அதற்காக இப்போதே கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.
19 பிறகு எலிசா நாகமானிடம், “சமாதானமாகப் போ” என்றான். எனவே அவன் எலிசாவை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் போனான்.
அகிரிப்பாவை தன் சார்பாக்க முனைவது
24 பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான்.
25 பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும். 26 அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே. 27 அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான்.
28 அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.
29 பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான்.
2008 by World Bible Translation Center