Revised Common Lectionary (Complementary)
தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு.
3 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.
3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.
5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
7 கர்த்தாவே, எழும்பும்!
எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.
8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.
12 “ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக ஜனங்களுக்குத் தீமைச் செய்து அவர்களைக் கொலை செய்கிற தலைவனுக்குப் பெருங்கேடு ஏற்படும். 13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நகரைக் கட்டுவதற்காக ஜனங்கள் உழைத்த உழைப்பை தீயினால் எரித்துப்போடும்படி தீர்மானம் செய்திருக்கிறார். அவர்களது அனைத்து வேலைகளும் வீணாகும். 14 பிறகு எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் கர்த்தருடைய மகிமையை அறிவார்கள். கடலுக்குள் தண்ணீர் பரவுவதுபோல இச்செய்தி பரவும். 15 தன்னுடைய நண்பர்களுக்குப் போதை ஏற்றுகிறவனுக்குக் கேடு விளையும். அவன் திராட்சைரசத்தோடு விஷத்தைக் கலக்கிறான். பிறகு அவர்களது நிர்வாணத்தைப் பார்க்கிறான்.
16 “ஆனால், அந்த மனிதன் கர்த்தருடைய கோபத்தை அறிவான். அக்கோபமானது கர்த்தருடைய வலதுகையில் உள்ள விஷம் நிறைந்த கிண்ணத்தைப் போன்றது. அம்மனிதன் அக்கோபத்தைச் சுவைப்பான். அவன் குடிக்காரனைப்போன்று கீழே தரையில் விழுவான்.
“தீமையான ராஜாவே, நீ அக்கிண்ணத்திலிருந்து குடிப்பாய். நீ மகிமையை அல்ல அவமானத்தைப் பெறுவாய். 17 லீபனோனில் உள்ள பல ஜனங்கள் உன்னால் பாதிக்கப்பட்டனர். நீ அங்கே பல மிருகங்களைத் திருடினாய். எனவே, நீ அஞ்சுகிறாய். ஏனென்றால் மரித்துப்போன ஜனங்களும் அந்நாட்டில் நீ செய்த அக்கிரமங்களும், இதற்கு காரணமாகும். நீ அந்த நகரங்களுக்கும், அவற்றில் வாழ்ந்த ஜனங்களுக்கும் பயப்படுவாய்” என்றார்.
விக்கிரகங்கள் பற்றிய செய்தி
18 அந்த நபரின் விக்கிரகங்கள் அவனைக் காப்பாற்றுவதில்லை. ஏனென்றால், அது வெறுமனே உலோகத்தால் மூடப்பட்ட சிலைதான். அது சிலை மட்டும்தான். எனவே, அந்தச் சிலையைச் செய்த நபர் அந்த சிலையினிடத்திலிருந்து உதவிகிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தச் சிலையால் பேசக்கூட முடியாது. 19 மரச்சிலையைப் பார்த்து “எழும்பு!” என்று சொல்கிறவன் மிகவும் மோசமானவன். பேசமுடியாத ஒரு கற்சிலையிடம் ஒருவன் “விழித்தெழு!” என்று கூறுவது அவனுக்கு மிகவும் கேடானது. அவை அவனுக்கு உதவாது. அச்சிலை வேண்டுமானால் பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருக்கலாம், ஆனால் அச்சிலைக்குள் உயிரில்லை.
20 ஆனால் கர்த்தர் வித்தியாசமானவர். கர்த்தர் தனது பரிசுத்தமான ஆலயத்தில் உள்ளார். எனவே, பூமிமுழுவதும் அமைதியாக இருந்து கர்த்தருக்கு முன் மரியாதை காட்டட்டும்.
அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்
(மத்தேயு 21:18-19)
12 மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. 13 இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. 14 ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
விசுவாசத்தின் வல்லமை
(மத்தேயு 21:20-22)
20 மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. 21 பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.
22 அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள். 23 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார். 24 ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும்.
2008 by World Bible Translation Center