Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆபகூக் 1:1-4

ஆபகூக் தேவனிடம் முறையிடுகின்றான்

ஆபகூக் எனும் தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்பட்ட செய்தி இதுதான்.

கர்த்தாவே, நான் தொடர்ந்து உம்முடைய உதவியை வேண்டுகிறேன். எப்பொழுது எனக்கு செவிகொடுப்பீர். நான் வன்முறையைப்பற்றி உம்மிடம் அழுதேன். ஆனால் நீர் எதுவும் செய்யவில்லை. ஜனங்கள் திருடிக்கொண்டும், மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டும், விவாதித்துக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும், இருக்கிறார்கள், நீர் ஏன் என்னை இவற்றையெல்லாம் பார்க்கும்படிச் செய்கிறீர். சட்டமானது பலவீனமுடையதாகவும், ஜனங்களுக்கு நேர்மையில்லாததாகவும் உள்ளது. தீய ஜனங்கள், நல்ல ஜனங்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறுகிறார்கள். எனவே, சட்டம் எப்பொழுதும் நேர்மையானதாக இருப்பதில்லை. நீதி எப்பொழுதும் வெற்றி பெறுகிறதில்லை.

ஆபகூக் 2:1-4

“நான் ஒரு காவலாளியைப்போன்று நின்று கவனிப்பேன்.
    கர்த்தர் என்னிடம் என்ன சொல்லப் போகிறார் என்று காண நான் காத்திருப்பேன்.
அவர் எவ்வாறு என் வினாக்களுக்கு பதில் சொல்கிறார் என்பதைக் காத்திருந்து கவனிப்பேன்.”

தேவன் ஆபகூக்குக்கு பதிலளிக்கிறார்

கர்த்தர் எனக்குப் பதிலாக, “நான் உனக்குக் காண்பிக்கின்றவற்றை கற்பலகையில் எழுது. அதனை ஜனங்கள் எளிதாகப் படிக்க முடியும்படி அவற்றை தெளிவாக எழுது. இச்செய்தியானது வருங்காலத்தில் உள்ள ஒரு சிறப்பான காலம் பற்றியது. இந்தச் செய்தி முடிவை பற்றியது; இப்பொழுது இது உண்மையாகும். அது என்றென்றும் வராது என்பது போல தோன்றுகிறது. ஆனால் பெறுமையாக அதற்குக் காத்திரு. அந்த நேரம் வரும். இது தாமதம் ஆகாது. இச்செய்தி ஜனங்களுக்கு கேட்க மறுக்கின்றவர்களுக்கு உதவாது. ஆனால் ஒரு நல்லவன் இச்செய்தியை நம்புவான். நல்லவன் தனது விசுவாசத்தினால் ஜீவிப்பான்” என்றார்.

சங்கீதம் 37:1-9

தாவீதின் பாடல்.

37 தீயோரைக் கண்டு கலங்காதே,
    தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
    தீயோர் காணப்படுகிறார்கள்.

கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
    பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
    அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
    செய்யவேண்டியதை அவர் செய்வார்.
நண்பகல் சூரியனைப்போன்று
    உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.

கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
    தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
    தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
கோபமடையாதே!
    மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
    ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.

2 தீமோத்தேயு 1:1-14

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பவுல் எழுதுவது: தேவனின் விருப்பப்படியே நான் அப்போஸ்தலனானேன். கிறிஸ்து இயேசுவிலுள்ள வாழ்க்கையின் வாக்குறுதியைப் பற்றி மக்களிடம் கூறுமாறு தேவன் என்னை அனுப்பினார்.

தீமோத்தேயுவே! நீ எனக்குப் பிரியமுள்ள குமாரனைப் போன்றவன். கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவற்றை நீ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் பெறுவாய் என்று நம்புகிறேன்.

நன்றி செலுத்துதலும் உற்சாகமூட்டுதலும்

இரவிலும் பகலிலும் என் பிரார்த்தனைகளில் உன்னை எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுகிறேன். என்னுடைய முன்னோர் சேவை செய்த தேவன் அவரே. நான் உனக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அறிந்த அளவில் சரியானதை மட்டுமே செய்கிறேன். நீ எனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் உன்னைக் காண மிகவும் விரும்புகிறேன். அதனால் நான் முழு மகிழ்ச்சியை அடைய முடியும். நான் உனது உண்மையான விசுவாசத்தை நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய விசுவாசம் முதலில் உன் பாட்டியான லோவிசாளுக்கும் உன் தாயான ஐனிக்கேயாளுக்கும் இருந்தது. அவர்களைப் போன்றே உனக்கும் விசுவாசம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன். அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார்.

எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார்.

தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார். 10 அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார்.

11 அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவரது அப்போஸ்தலனாகவும், நற்செய்திக்கான போதகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 12 நற்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால் இப்போது துன் பப்படுத்தப்படுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் நம்புகிற இயேசுவைப்பற்றி எனக்குத் தெரியும். என்னிடத்தில் நம்பி ஒப்படைத்தவற்றை அந்த நாள்வரைக்கும் காத்துக்கொள்ளும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.

13 என்னிடமிருந்து நீங்கள் கேட்ட உண்மையான போதனைகளைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பும் விசுவாசமும் கொண்டு அப்போதனைகளைப் பின்பற்றுங்கள். அப்போதனைகள் நீங்கள் போதிக்க வேண்டியவற்றைப் பற்றி உங்களுக்குச் சான்றாகக் காட்டும். 14 உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.

லூக்கா 17:5-10

விசுவாசத்தின் மேன்மை

சீஷர்கள் இயேசுவை நோக்கி, “இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள்” என்றார்கள்.

கர்த்தர், “உங்கள் விசுவாசம் ஒரு கடுகளவு பெரியதாக இருந்தால் இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘நீ தானாகவே பெயர்ந்து கடலில் விழு’ என்று கூறினால் அந்த மரமானது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

நல்ல ஊழியர்கள்

“வயலில் வேலை செய்கிற ஊழியன் ஒருவன் உங்களில் ஒருவனுக்கு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் நிலத்தை உழுது கொண்டோ, ஆடுகளை மேய்த்துக்கொண்டோ இருக்கிறான். அவன் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வந்து சாப்பிட உட்கார் என்பீர்களா? இல்லை. நீங்கள் அந்த ஊழியனிடம், ‘நான் உண்பதற்கு ஏதேனும் தயார் செய். நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பரிமாறுவதற்கான ஆடைகளை அணிந்துகொள். பிறகு நீ சாப்பிடவும், பருகவும் செய்யலாம்’ என்பீர்கள். தன் வேலையைச் செய்வதற்காக அவனுக்கு விசேஷமாக நன்றி செலுத்த வேண்டியது இல்லை. அவனது எஜமானன் சொல்வதை மட்டும் அவன் செய்துகொண்டிருக்கிறான். 10 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செய்யும்படியாக கூறப்பட்ட காரியங்களை நீங்கள் செய்யும்போது நீங்கள், ‘எந்த விசேஷ நன்றியறிதலுக்கும் நாங்கள் தகுதியுடையவர்கள் அல்ல. நாங்கள் செய்யவேண்டிய வேலையையே செய்து முடித்தோம்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center