Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
37 தீயோரைக் கண்டு கலங்காதே,
தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
2 விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
தீயோர் காணப்படுகிறார்கள்.
3 கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
4 கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
5 கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
செய்யவேண்டியதை அவர் செய்வார்.
6 நண்பகல் சூரியனைப்போன்று
உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.
7 கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
8 கோபமடையாதே!
மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
9 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.
ஆராமுக்கு ஏற்பட்ட தொல்லைகள்
7 ஆகாஸ் யோதாமின் குமாரன், யோதாம் உசியாவின் குமாரன், ரேத்சீன் ஆராமின் ராஜா. ரெமலியாவின் குமாரனான பெக்கா இஸ்ரவேலின் ராஜா. ஆகாஸ் யூதாவின் ராஜாவாக இருந்த காலத்திலே, ரேத்சீனும் பெக்காவும் எருசலேமிற்குப்போய் அதற்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களால் அந்நகரத்தைத் தோற்கடிக்க முடியவில்லை.
2 “ஆராமின் படையும் இஸ்ரவேலின் படையும் சேர்ந்துகொண்டு அவை இரண்டும் போருக்கு வந்துள்ளன” என்ற செய்தி தாவீதின் குடும்பத்திற்குச் சொல்லப்பட்டது.
ஆகாஸ் ராஜா இதனைக் கேள்விப்பட்டதும், அவனும் ஜனங்களும் மிகவும் பயந்தனர். அவர்கள் புயல் காற்றில் அகப்பட்ட மரங்களைப்போன்று நடுங்கினார்கள்.
3 பிறகு கர்த்தர் ஏசாயாவிடம், நீயும் உனது குமாரனான சேயார் யாசூபும் வெளியே போய் ஆகாசிடம் பேசுங்கள். மேல் குளத்தில் தண்ணீர் பாய்கிற இடத்துக்குப்போங்கள். இது வண்ணார நிலத்துக்குப்போகும் தெரு.
4 “ஆகாசிடம், ‘எச்சரிக்கையாக இரு, ஆனால் அமைதியாக இரு. அஞ்சாதே, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் உனக்கு அச்சம் ஏற்படுத்தும்படிவிடாதே! அவர்கள் இருவரும் இரண்டு எரிந்த கட்டைகளைப்போன்றவர்கள். முன்பு எரிந்தார்கள். இப்போது அவர்கள் வெறுமனே புகைகிறார்கள். ரேத்சீன், ஆராம், ரெமலியாவின் குமாரன் ஆகிய அனைவரும் கோபமாக இருக்கிறார்கள். 5 அவர்கள் உனக்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள். 6 அவர்கள்: “நாம் போய் யூதாவிற்கு எதிராகச் சண்டையிடுவோம். நாம் யூதாவை நமக்காகப் பங்கிட்டுக்கொள்வோம். நாம் தாபேயாலின் குமாரனை யூதாவின் புதிய ராஜாவாக்குவோம் என்றனர்.”’”
7 எனது கர்த்தராகிய ஆண்டவர், “அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. அது நிறைவேறாது. 8 தமஸ்குவின் ராஜாவாக ரேத்சீன் இருக்கும்வரை இது நடக்காது. எப்பிராயீம் (இஸ்ரவேல்) இப்போது ஒரு தேசம். ஆனால் எதிர்காலத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு நாடாக இருக்காது. 9 சமாரியா எப்பீராயீமின் (இஸ்ரவேலின்) தலைநகரமாக இருக்கும்வரை இது நடக்காது. ரெமலியாவின் குமாரன் சமாரியாவின் ராஜாவாக இருக்கும் அவர்களின் திட்டம் நிறைவேறாது. நீங்கள் இந்தச் செய்தியை நம்பாவிட்டால் பிறகு ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள்” என்றார்.
இரண்டு குருடர்களை இயேசு குணமாகுதல்
(மாற்கு 10:46-52; லூக்கா 18:35-43)
29 இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். 30 சாலையோரம் அமர்ந்திருந்த இரு குருடர்கள், இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று உரக்கக் கூவினார்கள்.
31 அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும், மேலும் சத்தமாக, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று கூவினார்கள்.
32 இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
33 அதற்குக் குருடர்கள், “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்” என்றார்கள்.
34 அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
2008 by World Bible Translation Center