Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 37:1-9

தாவீதின் பாடல்.

37 தீயோரைக் கண்டு கலங்காதே,
    தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
    தீயோர் காணப்படுகிறார்கள்.

கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
    பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
    அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
    செய்யவேண்டியதை அவர் செய்வார்.
நண்பகல் சூரியனைப்போன்று
    உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.

கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
    தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
    தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
கோபமடையாதே!
    மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
    ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.

2 இராஜாக்கள் 18:1-8

யூதாவில் எசேக்கியா அரசாள தொடங்கியது

18 எசேக்கியா என்பவன் யூத ராஜா ஆகாஸின் குமாரன் ஆவான். இவன் ஆளத்தொடங்கும்போது இஸ்ரவேலில் ஏலாவின் குமாரன் ஓசெயா என்பவனின் மூன்றாம் ஆட்சியாண்டு நிகழ்ந்தது. எசேக்கியா அரசாள வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் ஆபி ஆகும். இவள் சகரியாவின் மகளாவாள்.

எசேக்கியா தனது முற்பிதாவான தாவீதைப்போன்றே கர்த்தர் சொன்ன சரியான செயல்களைச் செய்துவந்தான்.

எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர்.

அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் ராஜாக்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை. எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான். கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான்.

எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் ராஜாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான். எசேக்கியா பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தான். காசாவரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் வென்றான். பெலிஸ்தியரின் சிறியதும் பெரியதுமான (கோட்டையமைந்த) நகரங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டான்.

2 இராஜாக்கள் 18:28-36

28 பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக,

“இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய ராஜா உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான். 29 ராஜா, ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான். 30 அதுபோல் கர்த்தர் மீது நம்பிக்கையை அவன் ஏற்படுத்தும்படியும் விடாதீர்கள். ஏனென்றால் எசேக்கியா, ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்! இந்நகரத்தை அசீரிய ராஜாவால் தோற்கடிக்க முடியாது!’ என்று கூறுகிறான்.

31 “ஆனால் அவன் கூறுவதைக் கேட்கவேண்டாம்! அசீரிய ராஜா: என்னோடு சமாதானமாக இருங்கள். என்னோடு வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைபழங்களைத் தின்னலாம், அத்திப்பழங்களைத் தின்னலாம், சொந்தக் கிணற்றிலுள்ளத் தண்ணீரைக் குடிக்கலாம். 32 நீங்கள் இதனை நான் உங்களை அழைத்துப்போய் இதுபோன்ற இன்னொரு நாட்டில் குடியேற்றும்வரை செய்யலாம். அந்த நிலம் தானியங்களும் திராட்சைரசமும் நிறைந்தது, அப்பமும் திராட்சைக் கொடிகளும் நிறைய ஒலிவமரமும் தேனும் நிறைந்தது. பிறகு நீங்கள் மரிக்க வேண்டாம், வாழலாம்.

“எசேக்கியா கூறுவதை கேளாதீர்கள். அவன் உங்கள் மனதை மாற்ற முயல்கிறான். அவனோ, ‘கர்த்தர் நம்மைக் காப்பார்’ என்கிறான். 33 இது போல் வேறு எந்த நாட்டிலாவது அங்குள்ள தேவர்கள் அந்த நாட்டை அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றி இருக்கிறதா? இல்லையே! 34 ஆமாத் மற்றும் அர்பாத் எனும் தெய்வங்கள் என்ன ஆனார்கள்? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என்றைக்காவது காப்பாற்றியதுண்டா? இல்லை! 35 வேறு எந்த நாட்டிலேனும் வேறு எந்த தெய்வங்களும் என்னிடமிருந்து அந்நாட்டைக் காப்பற்றியதுண்டா? இல்லை! கர்த்தர் என்னிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவாரா? காப்பாற்ற முடியாது” என்றான்.

36 ஆனால் ஜனங்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் தளபதிக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஏனென்றால் ராஜாவாகிய எசேக்கியா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவன், “நீங்கள் அவனுக்கு எதையும் சொல்லவேண்டாம்” என்று கூறி இருந்தான்.

வெளி 2:8-11

சிமிர்னா சபைக்கு இயேசுவின் நிருபம்

“சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

“துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர்.

“உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர். 10 உங்களுக்கு நிகழ்வதைக் குறித்து அச்சப்படவேண்டாம். பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் போடுவான். அவன் உங்களைச் சோதிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். நீங்கள் பத்து நாட்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் இறக்க வேண்டியதாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருங்கள். நீ இறுதிவரை உண்மையாயிருந்தால் ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.

11 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவன் இரண்டாவது மரணத்தினால் பாதிக்கப்படமாட்டான்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center