Revised Common Lectionary (Complementary)
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி
அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
6 தேவனே என் அரண்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
அவர் எனக்குப் பலமான அரண்.
தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
9 மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.
இஸ்ரவேல் பாவத்துக்கு விலை கொடுக்கும்
9 இஸ்ரவேலே நீ கிபியாவின் காலத்திலிருந்து பாவம் செய்தாய். (அந்த ஜனங்கள் அங்கே தொடந்து பாவம் செய்துக்கெண்டிருக்கிறார்கள்.) கிபியாவில் அப்பொல்லாத ஜனங்களை யுத்தம் உண்மையாகவே கைப்பற்றும். 10 நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள்.
11 எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான்.
12 நீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார்.
13 ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய். 14 எனவே உனது படைகள் யுத்தத்தின் பேரொலியைக் கேட்கும். உனது எல்லா அரண்களும் அழிக்கப்படும். இது பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல் இருக்கும். அப்போர்க்காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளோடு கொல்லப்பட்டார்கள். 15 உனக்கு அது பெத்தேலில் ஏற்படும். ஏனென்றால் நீ ஏராளமான பாவங்களைச் செய்தாய். அந்த நாள் தொடங்கும்போது இஸ்ரவேலின் ராஜா முழுமையாக அழிக்கப்படுவான்.
சுய நலமிக்க பணக்காரர்கள் தண்டிக்கப்படுவர்
5 பணக்காரர்களே! கவனியுங்கள், கதறுங்கள், துக்கமாயிருங்கள். ஏனென்றால் பெரும் துன்பம் உங்களுக்கு வரப்போகிறது. 2 உங்கள் செல்வம் அழுகியது, எதற்கும் பயனற்றது. உங்கள் ஆடைகள் செல்லரித்துப் போகும். 3 உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துப் போகும். அந்தத் துருவே நீங்கள் தவறானவர்கள் என்பதை நிரூபிக்கும். அது உங்கள் சரீரத்தை நெருப்பு போல எரித்துவிடும். உங்கள் கடைசி நாட்களில் செல்வத்தைச் சேர்த்தீர்கள். 4 மக்கள் உங்கள் வயல்களில் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் கூலி கொடுக்கவில்லை. அவர்கள் கூலிகளை நீங்கள் வைத்துக்கொண்டீர்கள். இப்போது அவர்கள் மீண்டும் உங்களைப் பார்த்து கூக்குரலிடுகிறார்கள். கூலிக்காரர்களின் கதறல்களை அனைத்து அதிகாரமுமுள்ள கர்த்தர் கேட்டார்.
5 பூமியில் உங்கள் வாழ்வானது செல்வமிக்கது. உங்கள் விருப்பத்தின்படி கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைகிறீர்கள். உங்களை நீங்கள் கொழுக்க வைத்து வெட்டப்படப்போகிற மிருகங்களைப்போல் ஆகிறீர்கள். 6 நல்ல மக்களுக்கு நீங்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களை எதிர்த்து நிற்காத நல்ல மக்களை நீங்கள் தண்டித்துக் கொலை செய்தீர்கள்.
2008 by World Bible Translation Center