Revised Common Lectionary (Complementary)
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி
அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
6 தேவனே என் அரண்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
அவர் எனக்குப் பலமான அரண்.
தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
9 மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.
8 எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது சொந்த நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி கொடுத்தார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இந்த வாக்குறுதியை அளித்தார்.
“நான், யாக்கோபு பெருமைக்கொள்கிற காரியங்களை வெறுக்கிறேன்.
நான் அவனது பலமுள்ள கோபுரங்களை வெறுக்கிறேன்.
எனவே நான் பகைவன் இந்த நகரத்தையும்
அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள விடுவேன்.”
கொஞ்சம் இஸ்ரவேலர்களே உயிரோடு விடப்படுவர்
9 அப்போது, சில வீடுகளில் பத்துபேர் உயிர் பிழைக்கலாம், ஆனால் அவர்களும் மரித்துப்போவார்கள். 10 ஒருவன் மரிக்கும் போது ஒரு உறவினன் வந்து உடலைப் பெற்று வெளியே எடுத்துக்கொண்டு எரிக்க வருவான். உறவினன், எலும்பை வெளியே கொண்டுபோக வருவான். வீட்டின் உட்புறத்திலே மறைந்திருக்கிற யாரையாவது அழைப்பான்.
“உன்னோடு வேறு மரித்த உடல்கள் உள்ளனவா?” என்று கேட்பான். அந்த மனிதன், “இல்லை” என்று பதில் சொல்லுவான். ஆனால் அந்த உறவினன், “நீ மௌனமாயிரு! நாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லக் கூடாது” என்று சொல்வான்.
11 பார், தேவனாகிய கர்த்தர் கட்டளை கொடுப்பார்.
பெரிய வீடுகள் துண்டுகளாக உடைக்கப்படும்.
சிறிய வீடுகள் சிறிய துண்டுகளாக உடைக்கப்படும்.
12 ஜனங்கள் குதிரைகளைத் தளர்ந்த பாறைகளின் மேல் ஓடும்படிச் செய்வார்களா? இல்லை.
ஜனங்கள் பசுக்களைப் உழுவதற்கு பயன்படுத்துவார்களா? இல்லை.
ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தலை கீழாகத் திருப்பினீர்கள்.
நீங்கள் நன்மையையும் நேர்மையையும் விஷமாக மாற்றினீர்கள்.
13 நீங்கள் லோடேபரில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
நீங்கள், “நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் கர்ணாயீமை எடுத்துக் கொண்டோம்” என்று சொல்கிறீர்கள்.
14 “ஆனால் இஸ்ரவேலே, நான் உங்களுக்கு எதிராக ஒரு நாட்டைக் கொண்டு வருவேன். அந்நாடு உன் முழு நாட்டுக்கும் அது லெபோ ஆமாத் முதல் அரபா ஓடைவரை துன்பங்களைக் கொண்டுவரும்.” சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறினார்.
லவோதிக்கேயா சபைக்கு இயேசுவின் நிருபம்
14 “லவோதிக்கேயா சபைக்கு எழுத வேண்டியது: “ஆமென்[a] என்பவர் உங்களுக்கு இவற்றைக் கூறுகிறார். அவரே உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சி. தேவனால் படைக்கப்பட்டவற்றையெல்லாம் ஆள்பவர் அவர்.
15 “அவர் கூறுவது: நீ செய்பவற்றை நான் அறிவேன். நீ அனலானவனும் அல்ல, குளிர்ந்தவனும் அல்ல. ஆனால் நீ குளிராகவோ அனலாகவோ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 16 நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன். 17 உன்னைச் செல்வன் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். உன்னிடம் எல்லாம் உள்ளது. உனக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் நீ பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், நிர்வாணி. 18 நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து வாங்குமாறு உனக்கு நான் அறிவுறுத்துகிறேன். பின்னரே நீ உண்மையான செல்வந்தன் ஆவாய். வெண்ணிற ஆடையை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நிர்வாணத்தை மூடிக்கொள்ளலாம். உங்கள் கண்களுக்கான மருந்தை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு உங்களால் உண்மையாகப் பார்க்க முடியும்.
19 “நான் நேசிக்கிற மக்களைத் திருத்துவேன், தண்டிப்பேன். எனவே கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளுங்கள். 20 இதோ நான் கதவருகில் நின்று தட்டுகிறேன். எனது குரலைக் கேட்டு ஒருவன் கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவனோடு உணவு உண்பேன். அவனும் என்னோடு உணவு உண்பான்.
21 “வெற்றி பெறுகிற ஒவ்வொருவனையும் என் சிம்மாசனத்தில் என்னோடு அமரச் செய்வேன். அதுபோலவே நான் வெற்றிகொண்டு என் பிதாவோடு சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன். 22 கேட்கிற சக்திகொண்ட ஒவ்வொருவனும் ஆவியானவர் சபைகளுக்குக் கூறுவதைக் கேட்பானாக.”
2008 by World Bible Translation Center