Revised Common Lectionary (Complementary)
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
3 ராஜா ஏழைகளுக்குத் துன்பம் செய்தால், பயிரை அழிக்கிற பெருமழை போன்று இருப்பான்.
4 நீ சட்டத்திற்கு அடிபணிய மறுத்தால் தீயவர்களைச் சார்ந்தவனாவாய். ஆனால் நீ சட்டத்திற்கு அடிபணிந்தால் அவர்களுக்கு எதிரானவனாவாய்.
5 தீயவர்கள் நேர்மையைப்பற்றிப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் கர்த்தரை நேசிப்பவர்கள் அதனை அறிந்துகொள்வார்கள்.
6 ஒருவன் செல்வந்தனாகவும் தீயவனாகவும் இருப்பதைவிட நல்லவனாகவும் ஏழையாகவும் இருப்பது நல்லது.
7 சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.
8 ஏழைகளை ஏமாற்றி அதிக அளவில் வட்டியை வாங்கி நீ செல்வந்தன் ஆனால், அச்செல்வத்தை நீ விரைவில் இழந்துவிடுவாய். இரக்கம் உள்ளவனிடம் அச்செல்வம் போய்ச் சேர்ந்துவிடும்.
9 ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்.
10 ஒரு தீயவன், ஒரு நல்லவனைப் புண்படுத்தவே பல திட்டங்களைத் தீட்டமுடியும். ஆனால் அத்தீயவன் தனது சொந்த வலையிலேயே விழுவான். நல்லவனுக்கு நன்மையே ஏற்படும்.
இறப்பிலிருந்து வாழ்வுக்கு
2 கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம் 2 ஆம், கடந்த காலத்தில் பாவங்களில் வாழ்ந்தீர்கள். உலகம் வாழ்கிறபடி வாழ்ந்தீர்கள். பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய மறந்த அந்த மக்களுக்குள் தீய ஆவி வேலை செய்கிறது. 3 கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.
4 ஆனால் தேவனுடைய இரக்கம் மிகப் பெரியது. தேவன் நம்மை மிகுதியாக நேசித்தார். 5 ஆன்மீகப்படி நாம் இறந்துபோனோம். தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்ததால் இறந்து போனோம். தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். 6 கிறிஸ்துவோடு நம்மையும் தேவன் உயிர்த்தெழச் செய்தார். பரலோகத்தில் நமக்கென்று இருக்கைகளையும் ஏற்படுத்தினார். இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிற நமக்காக தேவன் இதைச் செய்தார். 7 தேவன் இதைச் செய்ததால் எதிர்காலம் முழுவதும் அவர் தனது செல்வம் மிக்க இரக்கத்தையும் உயர்ந்த தயவையும் காட்டுவார். அவர் இதையும் கிறிஸ்துவுக்குள் நமக்குச் செய்வார்.
8 தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள். உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது. இது தேவனிடமிருந்து கிடைக்கும் பரிசு. 9 நீங்கள் செய்த செயல்களால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. எனவே தன்னைத்தானே இரட்சித்துக்கொண்டதாக ஒருவனும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. 10 நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்றே தேவன் திட்டமிட்டிருக்கிறார்.
2008 by World Bible Translation Center