Revised Common Lectionary (Complementary)
இஸ்ரவேல் வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள்
4 எனக்குச் செவி கொடுங்கள்! நீங்கள் உதவியற்ற ஜனங்கள் மீது நடக்கிறீர்கள்:
நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களை அழிக்க முயற்சி செய்கிறீர்கள்.
5 வியாபாரிகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்:
“நாங்கள் தானியம் விற்க அமாவாசை எப்பொழுது முடியும்?
நாங்கள் கோதுமையை விற்கக் கொண்டு வர
ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?
எங்களால் விலையை ஏற்றி அளவைக் குறைக்க முடியும்.
அளவுக் கருவிகளை நமக்கு அதிகம் லாபம் கிடைக்கிற விதத்தில் மாற்றி ஜனங்களை ஏமாற்றுவோம்.
6 ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது,
எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம்.
நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால்
அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம்.
ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற
கோதுமைகளை விற்க முடியும்.”
7 கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.
“நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன்.
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள்
2 எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள். 2 ராஜாக்களுக்காகவும், அதிகாரம் உள்ளவர்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முழுக்க, முழுக்க சேவையும், தேவனைக் குறித்த மரியாதையும் அமைதியும் சமாதானமும் உள்ள வாழ்வை நாம் பெறும்பொருட்டு அத்தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 3 இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது.
4 அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார். 5 ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது. 6 அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார். 7 அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.
உண்மையான செல்வம்
16 இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. 2 எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான்.
3 “பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். 4 நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.
5 “எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். 6 அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.
7 “பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.
8 “பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
9 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 11 உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். 12 யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.
13 “ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார்.
2008 by World Bible Translation Center