Revised Common Lectionary (Complementary)
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
இஸ்ரவேல் பயனற்ற பொருள் போலாகிறது
17 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, பித்தளை, தகரம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை வெள்ளியோடு ஒப்பிடும்போது அவை பயன் குறைந்தவை. வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பிலே போடுவார்கள். வெள்ளி உருகிய பின் அதிலுள்ள அசுத்தத்தை வேலைக்காரர்கள் நீக்குவார்கள். இஸ்ரவேல் நாடு அந்த உதவாத மீதியான அழுக்கைப் போலாயிற்று. 19 எனவே எனது ஆண்டவரும் கர்த்தருமானவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் எல்லோரும் பயனற்றவர்களாவீர்கள். நான் உங்களை எருசலேமிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். 20 வேலைக்காரர்கள் வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் போன்றவற்றை நெருப்பிலே போடுவார்கள். அது வெப்பம் அடைய காற்றை ஊதுவார்கள். பிறகு அந்த உலோகங்கள் உருக ஆரம்பிக்கும். அதுபோலவே, நான் உங்களை என் நெருப்பில்போட்டு உருகவைப்பேன். அந்நெருப்புதான் என் கோபம். 21 நான் உன்னை அந்நெருப்பில் போடுவேன். என் கோபத்தீயில் காற்று ஊதுவேன். நீ உருகத் தொடங்குவாய். 22 வெள்ளி நெருப்பில் உருகும். வேலைக்காரர்கள் வெள்ளியை மட்டும் தனியே ஊற்றி அதனைக் காப்பாற்றுவார்கள். அது போலவே நகரில் நீ உருகுவாய். பிறகு நானே கர்த்தர் என்பதை அறிவாய். அதோடு என் கோபத்தை உனக்கு எதிராக ஊற்றியதையும் நீ அறிவாய்.’”
எசேக்கியேல் எருசலேமிற்கு எதிராகப் பேசியது
23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலிடம் பேசு. அவள் பரிசுத்தமாக இல்லை என்பதைக் கூறு. அந்நாட்டின் மீது நான் கோபமாக இருக்கிறேன். எனவே அந்நாடு அதன் மழையைப் பெறவில்லை. 25 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் பாவத் திட்டங்களை இடுகிறார்கள். அவர்கள் சிங்கத்தைப் போன்றவர்கள். அது தான் பிடித்த விலங்கைத் தின்னத் தொடங்கும்போது கெர்ச்சிக்கும். அத்தீர்க்கதரிசிகள் பலரது வாழ்வை அழித்திருக்கின்றனர். அவர்கள் பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்திருக்கின்றனர். எருசலேமில் பல பெண்கள் விதவையாவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றனர்.
26 “ஆசாரியர்கள் உண்மையில் எனது போதனைகளை சிதைத்துவிட்டனர். எனது பரிசுத்தமானவற்றை அவர்கள் சரியாக வைத்துக்கொள்ளவில்லை. அவற்றை அவர்கள் முக்கியமானதாகக் காண்பிப்பதில்லை. பரிசுத்தமானவற்றை பரிசுத்தமற்றவைபோன்று நடத்துகிறார்கள். அவர்கள் சுத்தமானவற்றைச் சுத்தமற்றவற்றைப்போல் நடத்துகிறார்கள். அவர்கள் ஜனங்களுக்கு இதைப்பற்றி கற்றுத் தரவில்லை. எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களுக்கு மதிப்பு மறுக்கிறார்கள். அவர்கள் என்னை முக்கியமற்றவராக நடத்தினார்கள்.
27 “எருசலேமில் தலைவர்கள் எல்லாம் தான் பிடித்த இரையைத் தின்கிற ஓநாய்களைப் போன்றவர்கள். அத்தலைவர்கள் செல்வம் பெறுவதற்காக ஜனங்களைப் பிடித்துக் கொல்கின்றனர்.
28 “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!
29 “பொது ஜனங்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள்: ஒருவரை ஒருவர் திருடுகின்றனர். அவர்கள் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் பிச்சைக்காரர்களையும் தங்கள் உபயோகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் அந்நிய நாட்டவரை ஏமாற்றுகின்றனர், அவர்களுக்கு எதிராக எந்த நியாயமும் இல்லை என்பதுபோன்று நடந்து கொள்கின்றனர்!
30 “நான் ஜனங்களிடம் அவர்களது வாழ்க்கையை மாற்றும்படியும் நாட்டைக் காப்பாற்றும்படியும் கேட்டேன். நான் ஜனங்களிடம் சுவரை இணைக்கும்படி கேட்டேன். அவர்கள் திறப்புகளில் நின்று பகைவருடன் சண்டையிட்டு நகரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை! 31 எனவே, நான் என் கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களை முழுமையாக அழிப்பேன். அவர்கள் செய்திருக்கிற தீயவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிப்பேன். இதெல்லாம் அவர்களுடைய தவறு!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
தேவனின் அன்பு
31 எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. 32 தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார். எனவே இயேசு கிறிஸ்து இப்போது நம்மோடு இருப்பதால், தேவன் எல்லாவற்றையும் தருவார். 33 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார். 34 தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். 35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க இயலுமா? பிரச்சனைகளும், தண்டனைகளும் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்குமா? இயலாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
36 “எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம்.
வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்”(A)
என எழுதப்பட்டுள்ளது.
37 தேவன் நம்மீது அன்புகொண்டவர். அவரால் நாம் அனைத்திலும் பெரும் வெற்றி பெறுகிறோம். 38-39 தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது.
2008 by World Bible Translation Center