Revised Common Lectionary (Complementary)
15 “இன்று நான் வாழ்வையும், மரணத்தையும், நன்மையையும், தீமையையும் உனக்கு முன்பாகத் தெரிந்துகொள்ளும்படியாகக் கொடுக்கிறேன். 16 உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார். 17 ஆனால் கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்தால். 18 நீ அழிக்கப்படுவாய். நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்த்தரிடமிருந்து விலகினால், உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைந்து கொண்டிருக்கிற யோர்தானைக் கடந்து போகிற நாட்டில் நீண்டகாலம் வாழமாட்டாய்.
19 “இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால் அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந்தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம். 20 நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம் வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”
புத்தகம் 1
1 தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
2 ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
3 அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.
4 ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
5 ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
6 ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
தீயோரை அவர் அழிக்கிறார்.
1 இயேசு கிறிஸ்துவுக்காக சிறைப்பட்டிருக்கிற பவுலும் சகோதரனாகிய தீமோத்தேயுவும் எழுதுவது,
எங்கள் அன்புக்குரிய நண்பனும் எங்களோடு பணியாற்றுகிறவனுமாகிய பிலேமோனுக்கு எழுதுவது: 2 எங்கள் சகோதரியாகிய அப்பியாவுக்கும், எங்களோடுள்ள ஊழியனாகிய அர்க்கிப்புவுக்கும் உங்கள் வீட்டிலே கூடி வருகிற சபைக்கும் எழுதுவது:
3 நமது பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாகட்டும்.
பிலேமோனின் அன்பும் விசுவாசமும்
4 என் பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொள்கிறேன். நான் எப்போதும் உங்களுக்காக தேவனிடம் நன்றி செலுத்துகிறேன். 5 கர்த்தராகிய இயேசுவிடம் நீங்கள் கொண்ட விசுவாசத்தையும் தேவனுடைய பரிசுத்தமான அனைத்து மக்களிடமும் நீங்கள் கொண்ட அன்பையும் பற்றி நான் கேள்விப்படுகிறேன். உங்கள் விசுவாசத்துக்கும் அன்புக்கும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 6 இயேசுவில் நாம் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் நீங்கள் புரிந்துகொள்ள, நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விசுவாசம் உதவட்டும் என நான் பிரார்த்திக்கிறேன். 7 எனது சகோதரனே! தேவனுடைய மக்களிடம் நீ அன்பாக இருந்தாய். அவர்களை மகிழ்ச்சிகொள்ளச் செய்தாய். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது.
சகோதரனைப் போல ஏற்றுக்கொள்
8 நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன. நான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். கிறிஸ்துவில் நம்முடைய உறவானது அப்படிச் செய்யும் உரிமையைக் கொடுக்கிறது என நான் உணருகிறேன். 9 ஆனால், நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக அன்பினிமித்தம் நான் இவற்றைச் செய்யுமாறு உங்களை கேட்கிறேன். நான் பவுல். இப்போது நான் ஒரு முதியவன். இயேசு கிறிஸ்துவுக்காகச் சிறைப்பட்டவன். 10 என் குமாரன் ஒநேசிமுக்காக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் சிறையில் இருந்தபோது அவன் எனக்கு விசுவாசத்தில் குமாரன் ஆனான். 11 கடந்த காலத்தில் அவன் உங்களுக்குப் பயனற்றவனாக இருந்தான். ஆனால் இப்பொழுதோ அவன் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவன்.
12 நான் அவனை உங்களிடம் மீண்டும் அனுப்புகிறேன். அவனுடன் என் இதயத்தையும் சேர்த்து அனுப்புகிறேன். 13 நற்செய்திக்காகச் சிறைப்பட்டிருக்கிற எனக்கு சேவை செய்வதற்காக அவனை என்னோடு வைத்திருக்க விரும்பினேன். எனக்குக் கிடைக்கும் அவன் உதவி எனக்கு உதவுவதன்மூலம் உண்மையில் உங்களிடமிருந்து வருகிறது. 14 ஆனால் முதலில் உங்களைக் கேட்டுக்கொள்ளாமல் நான் எதையும் செய்ய விரும்பவில்லை. அதற்குப் பின்பு எனக்காக நீங்கள் செய்கிற நல்ல காரியங்கள், என்னுடைய வற்புறுத்தலுக்காக அல்லாமல் நீங்களாகவே விரும்பிச் செய்தவையாக இருக்கும்.
15 கொஞ்சக் காலமாக ஒநேசிமு உங்களை விட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை என்றென்றைக்குமாக நீங்கள் அவனைத் திரும்பப் பெறும் பொருட்டு இது நிகழ்ந்தது. 16 இனிமேல் ஒரு அடிமையாக அல்ல, அடிமைக்கும் மேலானவனாக, அன்புகுரிய சகோதரனாக இருப்பான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அதைவிட மேலாக நேசிக்க வேண்டும். கர்த்தருக்குள் அவனை மனிதனாகவும் நல்ல சகோதரனாகவும் நீங்கள் நேசிக்கவேண்டும்.
17 நீங்கள் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால், பிறகு அவனையும் திரும்பவும் ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை வரவேற்பது போலவே அவனையும் வரவேற்றுக்கொள்ளுங்கள். 18 அவன் உங்களிடம் ஏதாவது ஒருவகையில் செய்த குற்றங்களையும் கடன்களையும், என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். 19 நான் பவுல். நானே என் கையால் உங்களுக்கு இதனை எழுதுகிறேன். நான் ஒநேசிமுவின் கடனைத் தீர்த்துவிடுவேன். உங்கள் வாழ்வுக்காக நீங்கள் என்னிடம் கடன்பட்டுள்ளதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன். 20 எனவே என் சகோதரனே! ஒரு கிறிஸ்தவன் என்கிற முறையில் எனக்குச் செய்யப்படும் ஒரு உதவியாக நீங்கள் அதைச் செய்யவேண்டும் எனக் கேட்கிறேன். கிறிஸ்துவுக்குள் என் இதயத்தை ஆறுதல்படுத்துங்கள். 21 நான் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்று அறிவேன். இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்ற உறுதி எனக்கு இருப்பதால் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
முதலில் திட்டமிடுங்கள்
(மத்தேயு 10:37-38)
25 இயேசுவோடு பலர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இயேசு மக்களை நோக்கி, 26 “என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும்! 27 ஒருவன் என்னைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் எனக்குச் சீஷனாக முடியாது.
28 “ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிப்பீர்கள். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். 29 அதைச் செய்யாவிட்டால் நீங்கள் வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்க உங்களால் முடியாது. நீங்கள் அதை முடிக்க முடியாவிட்டால் அதைக் கவனிக்கிற எல்லா மக்களும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். 30 அவர்கள், ‘இந்த மனிதன் கட்ட ஆரம்பித்தான். ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்வார்கள்.
31 “ஓர் ராஜா மற்றோர் ராஜாவுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். ராஜாவிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற ராஜாவைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான். 32 அவனால் மற்ற ராஜாவைத் தோற்கடிக்க முடியாதென்றால், எதிரி இன்னும் தொலைவான இடத்தில் இருக்கும்பொழுதே சில ஆட்களை அனுப்பி அந்த ராஜாவிடம் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவான்.
33 “அதைப்போலவே முதலில் நீங்கள் திட்டமிட வேண்டும். என்னைப் பின்பற்ற வேண்டுமானால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால், நீங்கள் எனது சீஷராக இருக்க முடியாது!”
2008 by World Bible Translation Center