Revised Common Lectionary (Complementary)
புத்தகம் 1
1 தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
2 ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
3 அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.
4 ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
5 ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
6 ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
தீயோரை அவர் அழிக்கிறார்.
12 “உன்னோடு செய்த உடன்படிக்கையின்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டுமென்றால் இந்த சட்டங்களை நீ கவனமாகப் பின்பற்றி அவைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதைத் தேவன் உங்கள் முற்பிதாக்களுடன் உறுதி செய்துள்ளார். 13 தேவன் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் தேசத்தை தேவன் வளர்ச்சியடையச் செய்வார். உங்கள் பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பார். உங்கள் வயல்வெளிகளை வள மாக்குவார். உன் நிலத்தில் தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் தேவன் தந்தருளுவார். உங்கள் பசுக்களையும், கன்றுகளையும், ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் தேவன் ஆசீர்வதிப்பார். கொடுப்பேன் என்று உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்களித்த அந்த தேசத்தில் அவர் உங்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.
14 “மற்ற எல்லா ஜனங்களை விடவும் நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஒவ்வொரு கணவனும் மனைவியும் குழந்தைச் செல்வம் பெறுவீர்கள். உங்கள் மாடுகளும் கன்றுகளைப் பெறும். 15 உங்களிடம் உள்ள எல்லா நோய்களையும் கர்த்தர் நீக்கிவிடுவார். உங்களுக்குத் தெரிந்துள்ள எகிப்தியர்களின் கொடிய நோய்களில் ஒன்று கூட உங்கள் மீது வந்துவிடாமல் கர்த்தர் காத்துக்கொள்வார். ஆனால் உங்கள் எதிரிகளுக்கு அவ்வித நோய்கள் பிடிக்குமாறு செய்வார். 16 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உதவியோடு தோற்கடித்த எல்லா எதிரிகளையும் அழித்துவிட வேண்டும். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ளாதீர்கள். ஏனென்றால் அவை உங்களைப் பிடிக்கும் கண்ணியாகிவிடும். அவை உங்கள் வாழ்வை நாசமாக்கிவிடும்.
கர்த்தர் அவரது ஜனங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார்
17 “‘நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். 18 நீங்கள் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படத் தேவையில்லை. அன்று எகிப்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தின் அனைத்து ஜனங்களுக்கும் செய்ததை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 19 அவர்களுக்கு தேவன் செய்த பெரிய இடையூறுகளை நீங்கள் பார்த்தீர்கள். தேவன் செய்த அற்புதச் செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். எகிப்திலிருந்து உங்களை மீட்க கர்த்தர் தமது பலத்த கைகளையும் ஓங்கிய புயத்தையும் பயன்படுத்தியதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் மீண்டும் அதே ஆற்றலைப் பயன்படுத்தி, நீங்கள் பயப்படுகின்ற அனைத்து ஜனங்களுக்கு எதிராகவும் அப்படியே செய்வார்.
20 “அவ்வாறு செய்தபின்பும், மீதியுள்ளவர்களான உங்களுக்குத் தப்பி ஒளிந்து கொள்பவர்களையும் கண்டுபிடித்து அழித்துவிடுவதற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் குளவிகளை அனுப்புவார். தேவன் அவர்கள் அனைவரையும் அழித்துவிடுவார். 21 அவர்களைக் கண்டு பயப்படாதீர்கள். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருக்கின்றார். அவர் வல்லமையும் பயங்கரமும் கொண்ட தேவனாவார். 22 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்கள் தேசத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் துரத்திவிடுவார். நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் அழித்துவிட வேண்டாம். நீங்கள் அப்படிச்செய்தால் காட்டு மிருகங்கள் உங்களைச் சுற்றி எண்ணிக்கையில் பெருகிவிடும். 23 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்களிடம் தோற்கச் செய்வார். அவர்கள் அழியும் வரையில் அவர்களைத் திணறச் செய்வார். 24 அவர்களது ராஜாக்கள் உங்களிடம் தோற்றுப்போக கர்த்தர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் அவர்களை அழித்துவிடுவீர்கள்! உலகம் அவர்கள் வாழ்ந்ததை மறந்துவிடும். அவர்களில் ஒருவனும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் அனைவரையும் நீங்கள் அழித்துவிடுவீர்கள்.
25 “நீங்கள் அவர்களது தெய்வங்களின் சிலைகளைத் தீயிலிட்டுக் கொளுத்திவிட வேண்டும். நீங்கள் அந்தச் சிலைகளில் உள்ள வெள்ளி அல்லது தங்கத்தின் மீது சிறிதளவும் ஆசை கொள்ளாமலும், எடுத்துக்கொள்ளாமலும் இருக்க வேண்டும். அவர்களின் வெள்ளி அல்லது தங்கத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால் அது உங்களை சிக்க வைத்து, உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிவிடும். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை அருவெருத்து வெறுப்பவர் ஆவார். 26 எனவே, அங்கு அருவெருக்கத்தக்க விக்கிரகங்களை நீங்கள் உங்கள் வீட்டுக்குள் கொண்டுவரக்கூடாது, நீங்களும் அவற்றைக் கண்டிப்பாக வெறுத்து ஒதுக்கவேண்டும். அவை அனைத்தையும் அழித்துவிட வேண்டும்!”
பவுலோடிருந்த மக்களைப் பற்றிய செய்தி
7 தீகிக்கு கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதரன். கர்த்தருக்குள் அவன் நம்பிக்கைக்கு உரிய ஊழியன். என்னோடு பணியாற்றும் கர்த்தரின் வேலையாள். என் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். 8 அதற்காகத் தான் அவனையும் அனுப்புகிறேன். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்த அவனை அனுப்புகிறேன். 9 ஒநேசிமுவோடு அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவும் கிறிஸ்துவுக்குள் எனது அன்பான நம்பிக்கைக்கு உரிய சகோதரன். அவன் உங்கள் கூட்டத்திலிருந்து வந்தவன். எங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் தீகிக்குவும், ஒநேசிமுவும் உங்களிடம் கூறுவார்கள்.
10 அரிஸ்தர்க்கு தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறான். அவன் என்னோடு சிறையில் இருக்கிறான். பர்னபாவின் உறவினனான மாற்கும் வாழ்த்து கூறுகிறான். நான் ஏற்கெனவே சொன்ன தகவல்களின்படி இவன் வந்தால் வரவேற்றுக்கொள்ளுங்கள். 11 இயேசுவும் வாழ்த்து கூறுகிறான். (யுஸ்து என்பது அவனது மறு பெயர்) யூதர்களாகிய இவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்காக என்னோடு பாடுபடுகிறார்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள்.
12 எப்பாப்பிராவும் வாழ்த்து கூறுகிறான். அவன் இயேசு கிறிஸ்துவின் ஊழியன். அவனும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவன் எப்போதும் உங்களுக்காகவே பிரார்த்தனை செய்கிறான். நீங்கள் ஆன்மீக வாழ்வில் முழுமை பெறவும், தேவன் விரும்புகிறவைகளை நீங்கள் பெற வேண்டும் என்றும் அவன் பிரார்த்திக்கிறான். 13 அவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும் கடுமையாகப் பாடுபட்டான் என அவனுக்காக நான் சான்றுரைக்கிறேன். 14 தேமாவும் நமது அன்பான நண்பனும் மருத்துவனுமான லூக்காவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
15 லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள். 16 உங்களிடத்தில் இந்த கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா சபைக்கும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் லவோதிக்கேயா சபைக்கு எழுதிய நிருபத்தையும் வாசியுங்கள். 17 அர்க்கிப்பைக் கண்டு, “கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை முழுமையாய் செய்வதில் உறுதியாய் இரு” என்று சொல்லுங்கள்.
2008 by World Bible Translation Center