Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 1

புத்தகம் 1

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
    தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
    அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
    தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
    அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.

ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
    அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
    அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரை அவர் அழிக்கிறார்.

ஆதியாகமம் 39

யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான்

39 யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான்.

கர்த்தர் யோசேப்போடு இருப்பதையும், அவன் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியால் வெற்றி பெறுவதையும் பார்த்தான். அதனால் யோசேப்பைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எனவே, தனக்காக யோசேப்பு வேலை செய்வதை அனுமதித்ததுடன், தன் வீட்டைக் கவனித்துக்கொள்ளவும் வைத்தான். போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பு ஆளுகை செய்தான். யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

யோசேப்பு போத்திபாரின் மனைவியுடன் பாவம் செய்ய மறுத்தல்

யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள்.

ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். “என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார். என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான்.

10 அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான். 11 ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான். 12 அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது.

13 அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள். 14 அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து “பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான். 15 நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள். 16 அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, 17 அவனிடமும் அதே கதையைக் கூறினாள். “நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான். 18 அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள்.

19 யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான். 20 ராஜாவினுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான்.

சிறையில் யோசேப்பு

21 ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான். 22 யோசேப்பை கைதிகளைக் கண்காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான். 23 அந்த அதிகாரி அவனை முழுமையாக நம்பினான். கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் இது இவ்வாறு நடந்தது. அவன் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக்க கர்த்தர் உதவினார்.

பிலிப்பியர் 2:25-30

25 எப்பாப்பிரோதீத்து கிறிஸ்துவுக்குள் என் சகோதரன், கிறிஸ்துவின் சேவையில் அவன் என்னோடு பணியாற்றி வருகிறான். எனக்கு உதவி தேவைப்பட்டபோது அவனை என்னிடம் அனுப்பினீர்கள். இப்போது அவனை உங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். 26 உங்கள் அனைவரையும் பார்க்க அவன் விரும்புகிறான். அதனால் உங்களிடம் அவனை அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவன் நோயுற்றதை நீங்கள் கேள்விப்பட்டதால் சங்கடப்படுகிறான். 27 அவன் நோயால் சாவுக்கு அருகில் இருந்தான். தேவன் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட உதவினார். ஆகவே எனக்கு துக்கத்தின் மேல் துக்கம் உண்டாகவில்லை. 28 எனவே, அவனை நான் உங்களிடம் அனுப்பி வைக்கப் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் அவனைப் பார்க்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நானும் உங்களைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்த முடியும். 29 கர்த்தருக்குள் நீங்கள் அவனைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொள்ளுங்கள். எப்பாப்பிரோதீத்து போன்றவர்களுக்கு மரியாதை செய்யுங்கள். 30 அவன் கிறிஸ்துவுக்கான பணியால் ஏறக்குறைய இறந்தான். அதனால் அவனுக்குக் கனம் தாருங்கள். அவன் தன் வாழ்வை ஆபத்துக்கு உட்படுத்தினான். அவன் இதனைச் செய்தான். எனவே அவன் எனக்கு உதவ முடிந்தது. இது போன்ற உதவியை உங்களால் எனக்கு செய்ய முடியாது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center