Revised Common Lectionary (Complementary)
தேத்
65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
71 துன்புறுவது எனக்கு நல்லது.
நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
12 கர்த்தர் ஒரு சிறப்பு நாளுக்குத் திட்டமிட்டார். அன்று, கர்த்தர் பெருமிதம் கொண்டவர்களையும் வீண் பெருமை பேசுபவர்களையும் தண்டிப்பார். பிறகு அவர்கள் முக்கியமற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். 13 அவர்கள் லீபனோனிலுள்ள உலர்ந்த கேதுரு மரங்களைப்போலிருக்கிறார்கள். அவர்கள் பாசானில் உள்ள கர்வாலி மரங்களைப்போன்றவர்கள். ஆனாலும் தேவன் அவர்களைத் தண்டிப்பார். 14 அவர்கள் உயர்ந்த மலைகளையும் உயர்ந்த சிகரங்களையும் போன்றவர்கள். 15 அவர்கள் உயர்ந்த கோபுரங்களைப்போன்றவர்கள். பலமான சுவர்களைப்போன்றவர்கள். ஆனால் தேவன் அவர்களைத் தண்டிப்பார். 16 அவர்கள் தர்ஷீசின் கப்பல்களைப்போன்றவர்கள். (அக்கப்பல்கள் முக்கியமான பொருட்களால் நிறைந்தவை) எனினும் தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
17 அப்போது, ஜனங்கள் பெருமை அடைவதை நிறுத்துவார்கள். இப்போது பெருமிதம் கொள்பவர்கள் தரைமட்டும் பணிவார்கள். அப்போது கர்த்தர் மட்டுமே உயரமாக நிற்பார்.
1 தேவனுடைய ஒரு ஊழியனும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் எழுதிக்கொள்வது: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் விசுவாசத்துக்கு உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டேன். மக்கள் உண்மையை அறிந்துகொள்ள உதவுவதற்கே நான் அனுப்பப்பட்டேன். எவ்வாறு தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை அந்த உண்மை நமக்குக் காட்டுகிறது. 2 அந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வுக்கான நம்பிக்கையின் மூலமே வருகின்றது. அவ்வாழ்க்கையை நமக்குத் தருவதாக தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார். தேவன் பொய் சொல்வதில்லை. 3 சரியான நேரத்தில் உலகம் அவ்வாழ்வை அறிந்துகொள்ளுமாறு தேவன் செய்தார். தேவன் தம் போதனைகள் மூலம் இதனைச் செய்தார். அப்பணியில் என்னை நம்பியிருக்கிறார். அவற்றை நான் போதித்து வருகிறேன். ஏனென்றால், நமது இரட்சகராக இருக்கிற தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
4 தீத்துவுக்கு எழுதிக்கொள்வது: நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிற விசுவாசத்தில் நீ எனக்கு உண்மையான குமாரனைப் போன்றவன்.
கிருபையும், சமாதானமும் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உண்டாவதாக.
கிரேத்தாவில் தீத்துவின் பணி
5 இன்னும் செய்யவேண்டிய பல செயல்களை நீ செய்யும்பொருட்டும் உன்னை நான் கிரேத்தாவில் ஏற்கெனவே உன்னிடம் சொன்னபடி ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிக்கும் பொருட்டும் உன்னை அங்கே விட்டுவந்தேன். 6 மூப்பராக இருக்கிறவன் எந்தத் தவறுகளையும் செய்யாத குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும். அவனது பிள்ளைகள் விசுவாசிகளாக இருக்கவேண்டும். கொடுமைக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடாது. 7 ஒரு மூப்பர் தேவனுடைய பணியைக் கவனிக்கும் கடமையை உடையவர். எனவே, அவருக்குத் தவறு செய்தோம் என்ற குற்ற உணர்வு இருக்கக் கூடாது. தற்பெருமையும், சுயநலமும், முன் கோபமும் இல்லாதவராக இருக்கவேண்டும். அவர் குடிகாரனாக இருக்கக் கூடாது. சண்டைப் பிரியனாக இருக்கக் கூடாது. பிறரை ஏமாற்றிச் செல்வம் சேர்ப்பவராகவும் இருக்கக்கூடாது. 8 தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். 9 நாம் போதிக்கின்றவற்றை மூப்பர் உண்மையிலேயே பின்பற்றுபவராக இருக்கவேண்டும். உண்மையான போதனையின் மூலம் மக்களை உற்சாகப்படுத்த முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். உண்மையான போதனைகளுக்கு எதிரானவர்களை அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வல்லமையும் வேண்டும்.
2008 by World Bible Translation Center