Revised Common Lectionary (Complementary)
தேத்
65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
71 துன்புறுவது எனக்கு நல்லது.
நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமைத் தாக்குகிறான்
12 ரெகொபெயாம் ஒரு பலமிக்க ராஜா ஆனான். அவன் தனது ஆட்சியையும் பலமுள்ளதாக்கினான். பின்னர் அவனும், அவனது யூதா கோத்திரத்தினரும் கர்த்தருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். 2 சீஷாக் எருசலேம் நகரத்தை ரெகொபெயாமின் ஐந்தாவது ஆட்சியாண்டில் தாக்கினான். இவன் எகிப்தின் ராஜா. ரெகொபெயாமும், அவனுடன் ஆட்சி செய்தவர்களும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால் இவ்வாறு நடந்தது. 3 சீஷாக்கிடம் 12,000 இரதங்களும், 60,000 குதிரை வீரர்களும், எவராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுடைய படைவீரர்களும் இருந்தனர். இவனது பெரியப் படையில் லிபியன் வீரர்களும், சூக்கிய வீரர்களும், எத்தோப்பிய வீரர்களும் இருந்தனர். 4 சீஷாக் யூதாவிலுள்ள பலமிக்க நகரங்களை வென்றான். பிறகு தனது படையை எருசலேமிற்கு கொண்டு வந்தான்.
5 பிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொபெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’” என்றான்.
6 பிறகு யூதத் தவைர்களும், ரெகொபெயாம் ராஜாவும் வருத்தத்துடனும், பணிவுடனும் இருந்தனர். “கர்த்தர் சொல்வது சரிதான்” என்றனர்.
7 யூதத் தலைவர்களும், ராஜாவும் அடங்கிப் போனதைக் கர்த்தர் கவனித்தார். பிறகு கர்த்தரிடமிருந்து செமாயாவுக்குச் செய்தி வந்தது. கர்த்தர் செமாயாவிடம், “யூதத் தலைவர்களும், ராஜாவும் அடக்கமாயினர். எனவே நான் அவர்களை அழிக்கமாட்டேன். நான் விரைவில் அவர்களைக் காப்பேன். எனது கோபத்தை தீர்க்க சீஷாக்கை எருசலேமின் மீது அனுப்பமாட்டேன். 8 ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து ராஜாக்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார்.
9 சீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான். 10 அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் ராஜா வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான். 11 ராஜா கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள்.
12 ரெகொபெயாம் தனக்குள்ளே அடக்கமாகத் தாழ்வாக இருந்தபோது கர்த்தர் அவன் மீதுள்ள கோபத்தை விலக்கிக்கொண்டார். எனவே, கர்த்தர் ரெகொபெயாமை முழுவதுமாக அழிக்கவில்லை. ஏனென்றால் யூதாவில் சிலவற்றை நன்மையானதாகக் கண்டார்.
7 உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். 8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர். 9 எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.
10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. 11 பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. 12 எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். 13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். 15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.
17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது.
18 எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம். 19 உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன்.
20-21 சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
2008 by World Bible Translation Center