Revised Common Lectionary (Complementary)
21 கர்த்தாவே, நீரே என் ஆண்டவர்.
எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும்.
உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.
22 நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன்.
நான் உண்மையிலேயே கவலையடைகிறேன்.
என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
23 என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன்.
சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.
24 நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன.
நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
25 தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.
26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்!
உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
27 நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள்.
உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
28 அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும்.
அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும்.
அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
29 என் பகைவர்களை வெட்கப்படுத்தும்!
அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.
30 நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன்.
பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
31 ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார்.
அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம்மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள்.
2 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 3 “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மூப்பர்களிடம் (தலைவர்கள்) கூறு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறீர்களா? அது அவ்வாறானால் நான் அதனைத் தரமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.’ 4 அவர்களை நியாயம்தீர்க்க வேண்டுமா? மனுபுத்திரனே, நீ அவர்களை நியாயம்தீர்க்கிறாயா? அவர்கள் பிதாக்கள் செய்த அருவருப்பான பாவங்களைப்பற்றி நீ சொல்ல வேண்டும். 5 நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில், நான் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என் கையை உயர்த்தி, நான் அவர்களுக்கு முன்னால், எகிப்தில், என்னை வெளிப்படுத்தினேன். என் கையை உயர்த்தி நான் சொன்னேன்: “நானே உமது தேவனாகிய கர்த்தர்.” 6 அந்நாளில் உன்னை எகிப்தைவிட்டு வெளியே எடுத்துச்செல்வேன் என்று வாக்களித்தேன்: நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். இது பல நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. இது எல்லா நாடுகளையும்விட அழகான நாடு!
7 “‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். “நானே உங்களது தேவனாகிய கர்த்தர்.” 8 ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி என் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் தம் அருவருப்பான விக்கிரகங்களை எறியவில்லை. ஆனால் அவர்கள் எகிப்தியரின் அந்த ஆபாசமான சிலைகளை விடவில்லை. எனவே நான் (தேவன்) எகிப்தில் அவர்களையும் அழித்திட முடிவு செய்தேன். எனது கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணருமாறுச் செய்தேன். 9 ஆனால் நான் அவர்களை அழிக்கவில்லை. அவர்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவருவேன் என்று அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டில் ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். நான் எனது நல்ல பெயரை அழிக்கவில்லை. எனவே, மற்ற ஜனங்களின் முன்பு இஸ்ரவேலை நான் அழிக்கவில்லை. 10 நான் இஸ்ரவேல் குடும்பத்தாரை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தினேன். 11 பிறகு நான் எனது சட்டங்களைக் கொடுத்தேன். எனது விதிகளை எல்லாம் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் அந்த விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். 12 நான் அவர்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களைப்பற்றியும் சொன்னேன். அவ்விடுமுறை நாட்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள அடையாளங்கள் ஆகும். நானே கர்த்தர். நான் அவர்களை எனக்குப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருந்தேன் என அவை காட்டும். எனக்குரிய சிறப்பாக அவற்றைச் செய்தேன்.
13 “‘ஆனால் இஸ்ரவேல் குடும்பத்தார் வனாந்தரத்தில் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவை நல்ல விதிகள். ஒருவன் அவ்விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை எல்லாம் முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் அந்நாட்களில் பலமுறை வேலை செய்தனர். நான் அவர்களை வனாந்தரத்திலேயே அழிக்கவேண்டுமென முடிவெடுத்தேன். என் கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். 14 ஆனால் அவர்களை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்ததை மற்ற நாடுகள் பார்த்தன. நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை எனவே மற்றவர்கள் முன்பு நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 15 வனாந்தரத்தில் அந்த ஜனங்களுக்கு இன்னொரு வாக்கு கொடுத்தேன். நான் கொடுத்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வரமாட்டேன் என்று சொன்னேன். அது நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. எல்லா நாடுகளையும் விட அது அழகான நாடு!
16 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். என் சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் எனது ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் செய்தனர். ஏனென்றால், அவர்கள் இருதயங்கள் அந்த அசுத்த விக்கிரங்களுக்குச் சொந்தமாயிருந்தன. 17 ஆனால் நான் அவர்களுக்காக வருத்தப்பட்டேன். நான் அவர்களை அழிக்கவில்லை. நான் வனாந்தரத்தில் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை.
நாம் தேவனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்
7 பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
8 வனாந்திரத்தில் நீங்கள் தேவனைச் சோதித்தபோது, தேவனுக்கு எதிராக நீங்கள்
கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.
9 நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் நான் செய்ததை உங்கள் மக்கள் பார்த்தார்கள்.
ஆனால் அவர்கள் என்னையும் என் பொறுமையையும் சோதித்தனர்.
10 எனவே நான் அவர்களிடம் கோபம் கொண்டேன்.
‘அம்மக்களின் சிந்தனைகள் எப்போதும் தவறாகவே இருக்கின்றன.
அம்மக்கள் என் வழிகளை எப்போதும் புரிந்துகொண்டதில்லை’ என்று நான் சொன்னேன்.
11 எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள்
நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்.”(A)
12 எனவே சகோதர சகோதரிகளே! பாவம் நிறைந்தவராகவும், ஜீவனுள்ள தேவனிடமிருந்து விலகுகிற நம்பிக்கையற்ற இருதயமுள்ளோராகவும் உங்களில் யாரும் இல்லாதபடி கவனமாயிருங்கள். 13 ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். “இன்று” எனப்படும் நிலை இருக்கிறபோதே இதைச் செய்யுங்கள். உங்களில் யாரும் பாவத்தால் முட்டாளாக்கப்படாதிருக்கவும் உறுதியாக இருக்கவும் இதைச் செய்யுங்கள். 14 இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும். 15 இதைத் தான்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள்
கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்”(B)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
16 யார் தேவனுடைய செய்தியைக் கேட்டு அவருக்கு எதிராக மாறினார்கள்? எகிப்திலிருந்து மோசேயால் வழிநடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்படியே இருந்தார்கள். 17 மேலும் நாற்பது வருடங்களாக தேவன் யார் மீது கோபம் கொண்டார்? பாவம் செய்தவர்கள் மீது அல்லவா? அவர்களனைவரும் வனாந்திரத்திலேயே மடிந்து போனார்கள். 18 எனது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்று யாரிடம் தேவன் கூறினார்? அவருக்குக் கீழ்ப்படியாத மக்களிடம் மட்டும் தானே கூறினார். 19 எனவே, அந்த மக்கள் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது என்றார். ஏன்? அவர்கள் விசுவாசம் உடையவர்களாக இருக்கவில்லை.
4 தேவன் அந்த மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இன்றும் நம்மிடம் உள்ளது. தேவனுடைய இளைப்பாறுதலில் நாம் பிரவேசிக்க முடியும் என்பதே அந்த வாக்குறுதி. ஆகையால் உங்களில் யாரும் இவ்வாக்குறுதியைப் பெறுவதில் தவறக் கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். 2 இரட்சிக்கப்படும் வழி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே நமக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன்படாமல் போயிற்று. ஏன்? ஏனென்றால் அவர்கள் அதனை விசுவாசமில்லாமல் கேட்டனர். 3 விசுவாசித்த நம்மால் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியும். தேவன் சொன்னதுபோல,
“எனவே நான் கோபத்தோடு,
‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்”(C)
தேவன் இதைச் சொன்னார். ஆனால் இவ்வுலகத்தை உருவாக்கின நேரமுதல் தம் வேலையை தேவன் முடித்தார். 4 வாரத்தின் ஏழாவது நாளைப் பற்றி தேவன் பேசினார் என்று எழுதப்பட்டிருக்கிறது, “ஏழாவது நாளில் தேவன் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு எடுத்தார்.” 5 மேலும் அதே பகுதியில், மீண்டும், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியாது” என்றும் தேவன் கூறியிருக்கிறார்.
6 சிலர் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையப் போகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முதலில் நற்செய்தியைக் கேட்டவர்கள் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையவில்லை. அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பது தான் காரணம். 7 எனவே தேவன் இன்னொரு நாளைத் திட்டமிட்டார். அது “இன்று” என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாளைக் குறித்து தாவீதின் மூலமாக ஏற்கெனவே மேற்கோள் காட்டிய பகுதியில் தேவன் பேசுகிறார்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.”(D)
8 தேவனுடைய வாக்குறுதிப்படி அவரது இளைப்பாறுதலுக்குள் யோசுவா மக்களை வழி நடத்தவில்லை என்பது தெரியும். ஏனென்றால் பின்னர் இளைப்பாறுதலுக்கு தேவன் “இன்று” என இன்னொரு நாளைப் பற்றிக் கூறியிருக்கிறாரே. 9 தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. 10 தேவன் தனது வேலைகளை முடித்த பிறகு ஓய்வெடுத்தார். தேவனைப் போன்று தம் பணிகளை முடித்தவர்களே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க முடியும். 11 எனவே தேவனுக்குக் கீழ்ப்படியாததற்காகப் பாலைவனத்தில் விழுந்து இறந்த உதாரணங்களைப் பின்பற்றி நம்மில் யாரும் விழுந்து விடாதபடி நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழையக் கடினமாக முயற்சிப்போம்.
2008 by World Bible Translation Center