Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
15 யூதாவில் அந்தக் காலத்தில், ஜனங்கள் ஓய்வுநாளில் வேலை செய்வதை நான் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைரசத்தைச் செய்ய திராட்சைகளை மிதிப்பதைப் பார்த்தேன். ஜனங்கள் தானியங்களைக் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமை ஏற்றுவதைப் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் நகரத்தில் சுமந்து செல்வதைப் பார்த்தேன். ஓய்வுநாளில் அவர்கள் இவை எல்லாவற்றையும் எருசலேமிற்குள் கொண்டுவந்தனர். எனவே, நான் இதைப்பற்றி அவர்களை எச்சரித்தேன். நான் அவர்களிடம் ஓய்வுநாளில் உணவை விற்கக்கூடாது என்று சொன்னேன்.
16 எருசலேமில் தீரு நகரத்திலுள்ள சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வுநாளில் மீனையும் மற்றும் சில பொருட்களையும் எருசலேமிற்குள் கொண்டுவந்து விற்றனர். அவற்றை யூதர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். 17 யூதாவில் உள்ள முக்கியமான ஜனங்களிடம் நான் அவர்கள் தவறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். நான் அந்த முக்கிய மனிதர்களிடம், “நீங்கள் மிக மோசமான செயலைச் செய்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை மற்ற நாட்களைப் போன்று ஆக்கிவிட்டீர்கள். 18 உங்கள் முற்பிதாக்கள் இதைப் போன்றே செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அதனால்தான் நமது தேவன் எல்லாத் துன்பங்களையும் அழிவுகளையும் நமக்கும் இந்த நகருக்கும் கொண்டுவந்தார். இப்பொழுது அதையே நீங்கள் செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இதைவிட அதிகமாக இஸ்ரவேலருக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால் நீங்கள் ஓய்வுநாளை அசுத்தம் செய்து, இது ஒரு முக்கியமான நாளல்ல என கருதுகிறீர்கள்” என்றேன்.
19 எனவே நான் இதைத்தான் செய்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் இருட்டுவதற்கு முன்னால், வாசல் காவலாளர்களிடம் எருசலேமின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போடுமாறு கட்டளையிட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை அவர்கள் கதவைத் திறக்கக்கூடாது. வாசல்களில் நான் எனது சொந்த மனிதர்கள் சிலரை நியமித்தேன். அவர்களுக்கு உறுதியாக ஓய்வுநாளில் எருசலேமிற்குள் எந்த சுமையையும் கொண்டு வரக்கூடாது என்று ஆணையிட்டேன்.
20 ஒன்று அல்லது இரண்டு தடவை வியாபாரிகளும் விற்பனையாளர்களும் எருசலேமிற்கு வெளியே இரவில் தங்கும்படி ஏற்பட்டது. 21 ஆனால் நான் அந்த வியாபாரிகளையும், விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், “இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்” என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.
22 பிறகு நான் லேவியர்களிடம் தங்களை பரிசுத்தமாக்க கட்டளையிட்டேன். அதனைச் செய்தபிறகு அவர்கள் வாயில்களைக் காக்கச் செல்லவேண்டும். ஓய்வுநாள் பரிசுத்தமான நாளாக அனுசரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த இது செய்யப்பட்டது. “தேவனே, நான் இவற்றையெல்லாம் செய்ததற்காக என்னை நினைத்துப்பாரும், என்னிடம் இரக்கமாக இரும். உமது பெரும் அன்பை என்னிடம் காட்டும்.”
ஓய்வு நாளும் இயேசுவும்
(மத்தேயு 12:1-8; மாற்கு 2:23-28)
6 ஓய்வு நாளாகிய ஒரு தினத்தில் இயேசு தானியங்கள் விளைந்திருந்த நிலத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் தானியத்தைக் கொய்து, தங்கள் கைகளினால் நசுக்கி அதைச் சாப்பிட்டனர். 2 சில பரிசேயர்கள், “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? ஓய்வு நாளன்று இவ்வாறு செய்வது மோசேயின் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினர்.
3 இயேசு, “தாவீதும் அவனது மக்களும் பசியுடன் இருந்தபோது செய்ததைக்குறித்து நீங்கள் படித்திருக்கிறீர்கள். 4 தாவீது தேவாலயத்திற்குச் சென்றான். தாவீது, தேவனுக்குப் படைக்கப்பட்ட தேவனின் அப்பத்தை எடுத்து, அதைச் சாப்பிட்டான். தன்னோடு இருந்தவர்களுக்கும் சில அப்பத்தைக் கொடுத்தான். இது மோசேயின் சட்டத்திற்கு மாறானது. ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்க முடியும் என்று அச்சட்டம் கூறுகின்றது” என்று பதில் சொன்னார். 5 பின்பு இயேசு பரிசேயரை நோக்கி, “ஓய்வு நாளுக்கும் மனித குமாரன் ஆண்டவராக இருக்கிறார்” என்றார்.
2008 by World Bible Translation Center