Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
82 தேவன் தேவர்களின் சபையில்[a] நிற்கிறார்.
தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”
3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
அவர்கள் புரிந்துகொள்ளார்கள்!
அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள்.
அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
6 நான் (தேவன்),
“நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்.
7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.
8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!
தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!
தேவனுடைய பரிசுத்தப் பெட்டி திருப்பி அனுப்பப்படுகிறது
6 பெலிஸ்தர் தம் நாட்டில் பரிசுத்தப் பெட்டியை ஏழு மாதங்கள் வைத்திருந்தனர். 2 பெலிஸ்தர் தங்கள் பூசாரிகளையும், மந்திரவாதிகளையும் அழைத்து, “கர்த்தருடைய பெட்டியை என்னச் செய்யலாம்? பெட்டியை எவ்வாறு திருப்பி அனுப்பலாம்” என்று கேட்டனர்.
3 அதற்கு அவர்கள், “நீங்கள் இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைத் திருப்பி அனுப்புவதானால் வெறுமையாக அனுப்பவேண்டாம். அன்பளிப்போடு அனுப்புங்கள். அப்போது உங்கள் பாவங்களையும் இஸ்ரவேலின் தேவன் எடுத்துப் போடுவார். பின் நீங்களும் குணம் பெறுவீர்கள். நீங்களும் பரிசுத்தம் அடைவீர்கள். இதனைச் செய்தால் தேவன் உங்களைத் தண்டிப்பதையும் நிறுத்துவார்” என்றனர்.
4 பெலிஸ்தர்கள், “நம்மை மன்னிப்பதற்காக நாம் எத்தகைய காணிக்கைகளை இஸ்ரவேலரின் தேவனுக்குக் கொடுக்கவேண்டும்?” எனக்கேட்டனர்.
அதற்கு பூசாரிகளும், மந்திரவாதிகளும் பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆளுநராக, 5 பெலிஸ்திய ஆளுநர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரேவிதமானப் பிரச்சனைதான். எனவே தங்கத்தால் 5 உருவங்களை தோல் கட்டியின் சாயலிலும், 5 சுண்டெலி சாயலிலும் செய்து அனுப்பவேண்டும். 5 எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள். அத்தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார். 6 எகிப்தியர்களையும் பார்வோனையும் போன்று கடினமனம் உடையவர்களாக இராதீர்கள். தேவன் எகிப்தியர்களைத் தண்டித்தார். எனவேதான் எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை எகிப்தை விட்டுப் போகும்படி அனுமதித்தனர்.
7 “இப்போது நீங்கள் ஒரு புது வண்டியைச் செய்யவேண்டும். நுகம்பூட்டாத இரண்டு இளைய பசுக்களைப் பிடித்து வண்டியில் கட்டவேண்டும். அவற்றின் கன்றுக்குட்டிகளை அவற்றின் பின் போகவிடாமல் வீட்டில் கட்டவேண்டும். 8 கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அவ்வண்டியில் வைக்கவும். தங்க உருவங்களையும் சிலைகளையும் பெட்டியின் அருகில் பக்கத்தில் பையில் வைக்கவும். இவை உங்கள் பாவங்களை மன்னிக்கும் தேவனுக்கான அன்பளிப்புகளாகும். வண்டியை நேரான வழியில் போகவிடுங்கள். 9 வண்டியைக் கவனியுங்கள். அது நேராக இஸ்ரவேலரின் சொந்த இடமான பெத்ஷிமேசுக்குப் போனால், நமக்கு இந்த நோய்களைத் தந்தவர் கர்த்தர் தான் என அறியலாம். ஒருவேளை பெத்ஷிமேசுக்கு அப்பசுக்கள் நேராகச் செல்லவில்லை என்றால், இஸ்ரவேலரின் தேவன் நம்மைத் தண்டிக்கவில்லை, இந்த நோய் தற்செயலாக வந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்றனர்.
10 பெலிஸ்தியர் பூசாரிகளும் மந்திரவாதிகளும் சொன்னபடிச் செய்தனர். அப்போது தான் கன்றுகளை ஈன்ற இரண்டு பசுக்களைக் கண்டார்கள். அந்த இரண்டு பசுக்களை வண்டியில் பூட்டி அதன் கன்று குட்டிகளை வீட்டுத் தொழுவில் கட்டினார்கள். 11 பின் பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை வண்டியில் வைத்தனர். தங்க உருவங்களால் செய்யப்பட்ட தோல்கட்டியையும், சுண்டெலிகளையும் அதன் பக்கத்தில் வைத்தனர். 12 பசுக்கள் நேராக பெத்ஷிமேசுக்குச் சென்றன. அவை நேராகச் சாலையில் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் சென்றன. பெலிஸ்தர்கள் தொடர்ந்து நகர எல்லைவரை பின் சென்றனர்.
13 பெத்ஷிமேசின் ஜனங்கள் தங்கள் கோதுமையை பள்ளத்தாக்கிலே அறுவடை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்தப் பெட்டியைக் கண்டனர். அவர்கள் பெட்டியை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தனர். அதைப் பெற்றுக்கொள்ள ஓடினார்கள். 14-15 பெத்ஷிமேசில் யோசுவாவின் வயலுக்கு வண்டி வந்து பாறைக்கருகில் நின்றது. ஜனங்கள் வண்டி மரங்களைப் பிளந்தனர், பசுக்களைக் கொன்று கர்த்தருக்கு பலியாக செலுத்தினார்கள்.
லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். தங்க உருவங்கள் இருந்தப் பையையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அவற்றைப் பெரியப் பாறைமீது வைத்தனர். அந்த நாளில் பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருக்கு தகன பலிகளை அளித்தனர்.
16 ஐந்து பெலிஸ்திய ராஜாக்களும் பெத்ஷிமேசின் ஜனங்கள் செய்வதை எல்லாம் கவனித்தனர். அன்றே அவர்கள் எக்ரோனுக்குத் திரும்பினார்கள்.
15 “அழிவை ஏற்படுத்துகிற கொடிய காரியத்தைப்பற்றி தீர்க்கதரிசி தானியேல் கூறியுள்ளார். ‘இக்கொடியதை தேவாலயத்தில் நின்றிருக்க நீங்கள் காண்பீர்கள்.’ (இதைப் படிக்கிற நீங்கள் அது என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும்.) 16 அந்நேரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும். 17 கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஓடிவிட வேண்டும். வீட்டின் கூரையின் மீதிருப்பவன், வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுப்பதற்காக கீழே இறங்கக் கூடாது. 18 வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.
19 “கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. 20 இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள். 21 ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது.
22 “அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார்.
23 “அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன்.
மனுஷகுமாரனின் வருகை
(மாற்கு 13:24-31; லூக்கா 17:24-37)
26 “‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்,’ என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும்.
2008 by World Bible Translation Center