Revised Common Lectionary (Complementary)
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
நல்ல கிளை
14 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களுக்கு விசேஷ வாக்குறுதியைச் செய்தேன். நான் வாக்குறுதி அளித்த காரியங்களை நிறைவேற்றும் நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. 15 அந்த நேரத்தில், தாவீதின் குடும்பத்திலிருந்து ஒரு நல்ல ‘கிளை’ வளரும்படிச் செய்வேன். அந்த நல்ல ‘கிளை’ தேசத்திற்கு நல்லதும் சரியானதுமானவற்றைச் செய்யும். 16 அந்தக் கிளை இருக்கும்போது யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள். ஜனங்கள் எருசலேமில் பாதுகாப்பாக வாழ்வார்கள். அக்கிளையின் பெயர்: ‘கர்த்தர் நல்லவர்’”
17 கர்த்தர் கூறுகிறார், “தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவனே எப்பொழுதும் சிங்காசனத்தில் இருந்து இஸ்ரவேல் குடும்பத்தை ஆள்வான். 18 லேவியின் வம்சத்திலிருந்தே எப்போதும் ஆசாரியர்கள் இருப்பார்கள். அந்த ஆசாரியர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்று தகனபலியையும் தானியக் காணிக்கைகளையும், பலிகளையும் கொடுப்பார்கள்.”
19 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தது. 20 கர்த்தர் கூறுகிறார்: “பகலோடும் இரவோடும் நான் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறேன். அவை என்றென்றும் தொடர்ந்து இருக்கும் என நான் ஒப்புக்கொண்டேன். அந்த உடன்படிக்கையை உன்னால் மாற்ற முடியாது. இரவும் பகலும் எப்பொழுதும் சரியான நேரத்தில் வரும். நீ அந்த உடன்படிக்கையை மாற்ற முடியுமானால், 21 பிறகு நீ, நான் தாவீது மற்றும் லேவியோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியும். பிறகு தாவீதின் சந்ததியார் ராஜாவாகமாட்டார்கள். லேவியின் சந்ததியார் ஆசாரியானாகமாட்டார்கள். 22 ஆனால் நான் எனது வேலையாள் தாவீதிற்கு நிறைய சந்ததிகளைக் கொடுப்பேன். லேவியின் கோத்திரத்திற்கும் கொடுப்பேன். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போன்று நிறைய இருப்பார்கள். அத்தனை நட்சத்திரங்களையும் எவராலும் எண்ண முடியாது. அவர்கள் கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமாக இருப்பார்கள். அம்மணல் துண்டுகளை எவராலும் எண்ண முடியாது” என்கிறார்.
23 கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான்: 24 “எரேமியா, ஜனங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள்: ‘கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் வம்சங்களை விட்டு திரும்பிவிட்டார். அந்த ஜனங்களை கர்த்தர் தேர்ந்தெடுத்தார். ஆனால், இப்போது அவர் அதனைத் தேசமாக ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டார்.’”
25 கர்த்தர் சொல்லுகிறார்: “இரவுடனும் பகலுடனும் நான் கொண்ட உடன்படிக்கை தொடராவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை நான் அமைக்காவிட்டால், பிறகு நான் அந்த ஜனங்களை விட்டு விலகலாம். 26 பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகளையும் தாவீதின் சந்ததிகளையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.”
நம்பிக்கையான ஊழியன் யார்
(மத்தேயு 24:45-51)
41 “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான்.
42 அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? 43 எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். 44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.
45 “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். 46 அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்.
47 “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். 48 ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார்.
2008 by World Bible Translation Center