Revised Common Lectionary (Complementary)
ஆபிராமோடு தேவனின் உடன்படிக்கை
15 இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார்.
2 ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். 3 மேலும் ஆபிராம், “நீர் எனக்கு குமாரனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான்.
4 கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு குமாரன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார்.
5 பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார்.
6 ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 ராஜா தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.
விசுவாசம்
11 நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம். 2 முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.
3 தேவன் தமது ஆணையால் இந்த முழு உலகையும் படைத்தார் என்று நாம் நம்ப விசுவாசம் உதவுகிறது. அதாவது நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் பார்க்கப்படாத ஒன்றால் உருவாக்கப்பட்டதை உணர்ந்துகொள்கிறோம்.
8 தேவன் ஆபிரகாமை அழைத்தார். அவர் வாக்களித்தப்படி ஒரு இடத்துக்குப் பயணம் போகச் சொன்னார். அவனுக்கு அந்த இடம் எங்கே உள்ளது என்று தெரியாது. எனினும் அவனுக்கு விசுவாசம் இருந்ததால், தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்னபடி பயணம் செய்தான். 9 தேவன் தருவதாக வாக்களித்த நாட்டில் ஆபிரகாம் வாழ்ந்தான். அங்கே ஒரு பரதேசியைப் போல அலைந்தான். எனினும் அவன் விசுவாசம் வைத்திருந்தான். ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரோடு கூடாரத்தில் குடியிருந்தான். அவர்களும் தேவனுடைய வாக்குறுதியைப் பெற்றார்கள். 10 ஆபிரகாம், உண்மையான அஸ்திபாரம் இடப்பட்ட தேவனுடைய நகரத்துக்காகக்[a] காத்திருந்தான்.
11 ஆபிரகாம் மிகவும் முதியவன். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இல்லாதவன். சாராளும் அப்படியே. ஆபிரகாம் தேவனிடம் விசுவாசம் வைத்ததால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. 12 அவன் ஏறக்குறைய இறந்து போகின்றவனைப் போன்று இருந்தான். ஆனால் அவனிடமிருந்து முதுமைப் பருவத்தில் ஒரு பரம்பரை தோன்றி வானத்து நட்சத்திரங்களைப் போன்று விளங்கியது. கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமான மக்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டனர்.
13 இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர். 14 அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள். 15 அவர்கள் தாங்கள் விட்டுவந்த நாட்டைப் பற்றி நினைத்திருந்தார்களேயானால் அவர்கள் அதற்குத் திரும்பிப் போக சமயம் கிடைத்திருக்குமே. 16 ஆனால் அவர்கள் பரலோகம் என்னும் சிறப்பான நாட்டிற்குப் போகக் காத்திருக்கிறார்கள். எனவே தேவன் தன்னை அவர்களது தேவன் என்று அழைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. தேவன் அவர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்.
பணத்தை நம்பாதீர்கள்
32 “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். 33 உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”
எப்போதும் ஆயத்தமாக இருங்கள்
(மத்தேயு 24:42-44)
35 “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். 36 திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். 37 எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். 38 அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.
39 “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். 40 எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார்.
2008 by World Bible Translation Center