Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்.
127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.
2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.
3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
4 ஒரு இளைஞனின் குமாரர்கள்
ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
5 தன் அம்புகள் வைக்கும் பையை குமாரர்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது குமாரர்கள் அவனைக் காப்பார்கள்.
16 நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில் பார்த்தேன். வழக்குமன்றமானது நன்மையாலும் நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது. 17 எனவே நான் எனக்குள்ளே: “தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார். ஜனங்களின் செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தை தேவன் திட்டமிட்டுள்ளார். தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார்” என்கிறேன்.
ஜனங்கள் விலங்குகளைப் போன்றவர்கள்தானா?
18 ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் எனக்குள்ளே, “ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப்போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார்” என்று சொல்லிக்கொண்டேன். 19 மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர் மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுபோல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா? 20 மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்றுபோலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன. 21 ஒரு மனிதனின் ஆவிக்கு என்ன நிகழும் என்பதை யார் அறிவார்? மனிதனின் ஆவி மேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழே பூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார்?
22 எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற்செயல் என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான் என்று நான் கண்டுகொண்டேன். அதையே அவன் அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்ல யாராலும் முடியாது.
மரித்துப்போவது நல்லதா?
4 ஏராளமான ஜனங்கள் மோசமாக நடத்தப்படுவதை மீண்டும் நான் பார்த்தேன். அவர்களது கண்ணீரைப் பார்த்தேன். துக்கப்படும் அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான் பார்த்தேன். கொடுமையானவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன். புண்பட்ட அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் நான் பார்த்தேன். 2 இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன். 3 பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.
ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்யவேண்டும்?
4 பிறகு நான் “ஏன் ஜனங்கள் இவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள்?” என்று நினைத்தேன். ஜனங்கள் வெற்றிபெறவும் மற்றவர்களை விடச் சிறப்புபெறவும் முயற்சி செய்வதை நான் பார்த்தேன். ஏனென்றால் ஜனங்கள் அனைவரும் பொறாமை உடையவர்கள். அவர்கள் தம்மைவிட மற்றவர் அதிகம் பெறுவதை விரும்பமாட்டார்கள். இது அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப்போன்றது என எண்ணினேன்.
5 சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள். 6 அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும் அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து திருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன்.
7 மீண்டும், அர்த்தமில்லாத சிலவற்றை நான் பார்த்தேன். 8 ஒருவனுக்குக் குடும்பம் இல்லாமல் இருக்கலாம். அவனுக்கு ஒரு மகனோ அல்லது சகோதரனோகூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் அவன் தொடர்ந்து கடினமாக உழைக்கிறான். அவன் தன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதில்லை. அவன் மிகுதியாக உழைக்கிறான். அவன் வேலைசெய்வதை நிறுத்தி, “நான் யாருக்காகக் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏன் வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது?” என்று தன்னைத்தான் கேட்பதில்லை. இதுவும் மிக மோசமானதும், அர்த்தமற்றதுமான ஒன்றாகும்.
கிறிஸ்தவர்களுக்குப் போதித்த கருத்துக்கள்
2 தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, மனதைத் தயார் நிலையில் வைத்திருங்கள். மேலும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். 3 எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். தேவனுடைய செய்தியை நாங்கள் மக்களிடம் பரப்பிட வாய்ப்பு அளிக்குமாறு அவரை வேண்டுங்கள். கிறிஸ்துவைப் பற்றி தேவன் வெளிப்படுத்தியிருக்கிற இரகசிய உண்மையை நாங்கள் பிரச்சாரம் செய்ய பிரார்த்தனை செய்யுங்கள். இதனைப் பிரச்சாரம் செய்ததால் நான் சிறையில் இருக்கிறேன். 4 இந்த உண்மையை நான் மக்களிடம் தெளிவுபடுத்த முடியும். இதுவே நான் செய்ய வேண்டியதாகும்.
5 கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோடு சேர்ந்து வாழும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதில் ஞானமுடையவர்களாக இருங்கள். உங்களால் முடிந்தவரை நல்வழியில் உங்கள் காலத்தைச் செலவு செய்யுங்கள். 6 நீங்கள் பேசும்போது கருணையுடனும், ஞானத்துடனும் இருங்கள். பிறகு, உங்களால் எவருக்கும் பதில் சொல்ல இயலும்.
2008 by World Bible Translation Center