Revised Common Lectionary (Complementary)
2 எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான்.
ஞானம் மகிழ்ச்சியைக்கொண்டுவருமா?
12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலரின் ராஜாவாக இருந்தேன். 13 நான் கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். எனவே ஞானத்தைப் பயன்படுத்தி வாழ்விலுள்ள அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்பினேன். தேவன் நாம் செய்யும்படி கொடுத்த வேலைகளெல்லாம் கடினமானவை என்று நான் கற்றுக்கொண்டேன். 14 பூமியின்மேல் செய்யப்படுகிற அனைத்து செயல்களையும் நான் பார்த்தேன். அவை அனைத்தும் காலத்தை வீணாக்கும் காரியம் என்பதையும் அறிந்துகொண்டேன். இது காற்றைப் பிடிப்பது போன்றதாகும்.
18 நான் செய்த கடினமான உழைப்பு அனைத்தையும் வெறுத்தேன். நான் கடினமாக உழைத்திருக்கிறேன். ஆனால் நான் உழைத்தவற்றுக்கான பலனை எனக்குப் பின்னால் வாழ்பவர்களுக்கு வைத்துப் போக வேண்டும். நான் அவற்றை என்னோடு எடுத்துச் செல்ல இயலாது. 19 வேறு ஒருவன் நான் உழைத்ததும், கற்றதுமான அனைத்தையும் ஆளுவான். அவன் ஞானமுள்ளவனா முட்டாளா என்பதை நான் அறியேன். இதுவும் அறிவற்றதுதான்.
20 எனவே, நான் செய்த அனைத்து உழைப்பைப்பற்றியும் வருத்தம் அடைந்தேன். 21 ஒருவனால் தனது ஞானம், அறிவு, திறமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உழைக்கமுடியும். ஆனால் அவன் இறந்ததும், அவனது உழைப்பை மற்றவர்கள் பெறுகின்றனர். அவர்கள் எந்த உழைப்பையும் செய்வதில்லை. ஆனால் அனைத்தையும் பெறுகின்றனர். இது எனக்குச் சோர்வுண்டாக்குகிறது. இது நேர்மையற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் உள்ளது. 22 ஒருவனது அனைத்து உழைப்புக்கும் போராட்டங்களுக்கும் பிறகு வாழ்வில் அவனுக்கு என்ன கிடைக்கிறது? 23 அவனது வாழ்வு முழுவதும் வலியும், சலிப்பும், கடின உழைப்புமே மிஞ்சுகிறது. இரவிலும்கூட அவனது மனம் ஓய்வு பெறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதுதான்.
கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
49 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
3 ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
4 நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5 தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
6 பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
7 மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
8 ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
9 என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.
10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.
கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை
3 கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார். 2 பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். 3 உங்கள் பழைய பாவ சுபாவமானது இறந்துபோயிற்று. தேவனுக்குள் கிறிஸ்துவோடு உங்கள் புதிய வாழ்க்கை மறைந்திருக்கிறது. 4 கிறிஸ்துவே உங்கள் வாழ்க்கை. அவர் மீண்டும் வரும்போது அவரது மகிமையில் பங்கு கொள்வீர்கள்.
5 தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற உங்கள் பாவங்களை வாழ்விலிருந்து விலக்குங்கள். போலியான கடவுளுக்குச் சேவை செய்வது என்பதே இவ்விருப்பங்களின் உண்மை அர்த்தம். 6 இவை தேவனைக் கோபப்படுத்தும். 7 இவற்றை நீங்களும் உங்கள் கடந்துபோன பாவ வாழ்க்கையில் செய்தீர்கள்.
8 ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள். 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். 10 நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். 11 இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும்விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர்.
தன்னலம் கூடாது
13 கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான்.
14 ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். 15 பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.
16 பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. 17 அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான்.
18 “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். 19 அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான்.
20 “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார்.
21 “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு.
2008 by World Bible Translation Center