Revised Common Lectionary (Complementary)
கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
49 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
3 ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
4 நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5 தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
6 பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
7 மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
8 ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
9 என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.
10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.
—6—
23 ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார். 2 எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே. 3 அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம்.
—7—
4 செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு. 5 ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.
—8—
6 கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு. 7 எப்பொழுதும் அவன் அதன் விலையையே நினைத்துக்கொண்டிருக்கும் தன்மையுடையவன். அவன் உன்னிடம், “உண்ணு, பருகு” என்று கூறலாம். ஆனால் அவனது விருப்பம் உண்மையானது அல்ல. 8 அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும்.
—9—
9 முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான்.
—10—
10 பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. 11 கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார்.
தேவனுக்கு மகிமை
33 ஆமாம். தேவனுடைய செல்வம் மிகவும் பெருமை மிக்கது. அவரது அறிவுக்கும் ஞானத்துக்கும் எல்லை இல்லை. தேவன் தீர்மானிப்பதை ஒருவராலும் விளக்க முடியாது. தேவனுடைய வழிகளை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.
34 “கர்த்தரின் மனதை அறிந்தவன் யார்?
தேவனுக்கு அறிவுரைகளைத் தரத் தகுந்தவர் யார்?”(A)
35 “தேவனுக்கு யாரேனும் எதையேனும் கொடுத்ததுண்டா?
மற்றவர்க்கு எதையும் தேவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை”(B)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
36 ஆமாம். தேவனே அனைத்தையும் உருவாக்கினார். தேவனாலும், தேவனுக்காகவும் தொடர்ச்சியாய் எல்லாம் இயங்குகின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
2008 by World Bible Translation Center