Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 55:16-23

16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
    கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
    என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
    ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
    நித்திய ராஜா எனக்கு உதவுவார்.

20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
    அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
    அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
    அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
    ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.

22 உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
    அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
    உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.

எஸ்தர் 7:7-8:17

ராஜா மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் இராணியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே ராஜா முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். ராஜா தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, இராணி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். ராஜா மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ இராணியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான்.

ராஜா இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். பிரதானிகளில் ஒருவனான ராஜாவுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் ராஜாவிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.

ராஜா, “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.

10 எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.

யூதர்களுக்கு உதவும்படியான அரசக் கட்டளை

அதே நாளில், அகாஸ்வேரு ராஜா, எஸ்தர் இராணியிடம் யூதரின் எதிரியாக இருந்த ஆமானின் அத்தனை உடமைகளையும் கொடுத்தான். எஸ்தர், ராஜாவிடம் மொர்தெகாய் தனது உறவினன் என்று சொன்னாள். பிறகு மொர்தெகாய் ராஜாவைப் பார்க்க வந்தான். ராஜா ஆமானிடமிருந்து தனது மோதிரத்தை வாங்கி வைத்திருந்தான். அவன் தன் விரலிலிருந்து மோதிரத்தை எடுத்து மொர்தெகாயிடம் கொடுத்தான். பிறகு எஸ்தர், ஆமானுக்குச் சொந்தமான அனைத்துக்கும் மொர்தெகாயைப் பொறுப்பாளியாக நியமித்தாள்.

பிறகு எஸ்தர் மீண்டும் ராஜாவிடம் பேசினாள். அவள் ராஜாவின் காலில் விழுந்து, அழத்தொடங்கினாள். ஆகாகியான ஆமானின் தீயத்திட்டத்தை நீக்கும்படி அவள் மன்றாடினாள். ஆமான் யூதர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தான்.

பிறகு ராஜா தனது பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான். எஸ்தர் எழுந்து ராஜா முன்னாள் நின்றாள். பிறகு எஸ்தர், “ராஜாவே, நீர் என்னை விரும்புவதானால், உமக்கும் மகிழ்ச்சியானால் எனக்காக இதனைச் செய்யும். இது நல்ல யோசனை என்று நீர் நினைத்தால் இதனைச் செய்யும். ராஜா என்னோடு சந்தோஷமாக இருக்கிறதானால், ஆமான் அனுப்பிய கட்டளையை விலக்கும்படி ஒரு கட்டளை எழுதி அனுப்பும். ராஜாவின் அனைத்து நாடுகளிலும் உள்ள யூதர்களை அழித்துவிட வேண்டுமென்று ஆகாகியானான ஆமான் ஒரு திட்டம் வைத்து அதை நடத்திட கட்டளை அனுப்பினான். நான் அரசரை மன்றாடிக் கேட்கிறேன். ஏனெனில் என் ஜனங்களுக்கு இத்தகைய பயங்கரம் ஏற்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. எனது குடும்பம் கொல்லப்படுவதை என்னால் பார்க்க முடியாது” என்றாள்.

அகாஸ்வேரு ராஜா எஸ்தர் இராணிக்கும், யூதனான மொர்தெகாய்க்கும் பதில் சொன்னான். ராஜா, “ஆமான் யூதர்களுக்கு எதிரியாக இருந்ததால், நான் அவனது சொத்துக்களை எஸ்தருக்கு கொடுத்திருக்கிறேன். என் வீரர்கள் ஆமானைத் தூக்கு மரத்தில் தொங்கப்போட்டனர். இப்பொழுது ராஜாவின் அதிகாரப்படி இன்னொரு கட்டளையை எழுதுங்கள். யூதர்களுக்கு உதவ எது சிறப்பான வழியாகத் தோன்றுகிறதோ அப்படி எழுதி, அந்த கட்டளையை ராஜாவின் சிறப்பு மோதிரத்தில் முத்திரையிடு. ராஜாவின் அதிகாரத்துடன் எழுதப்பட்டு அவனது சிறப்பு மோதிரம் முத்திரை பொறிக்கப்பட்ட எந்தக் கடிதமும் ரத்து செய்யப்படக் கூடாது” என்றான்.

மிக விரைவாக ராஜாவின் செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். இது சீவான் என்னும் மூன்றாவது மாதத்தின் 23வது நாளில் நடந்தது அச்செயலாளர்கள் மொர்தெகாயின் அனைத்து கட்டளைகளையும் யூதர்கள், தலைவர்கள், ஆளுநர்கள், 127 மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் என அனைவருக்கும் எழுதினார்கள். அம்மாகாணங்கள் இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்தது. இந்த கட்டளை ஒவ்வொரு மாகாணத்தின் மொழியிலும் எழுதப்பட்டது. ஒவ்வொரு குழு ஜனங்களின் மொழியிலும் இந்த கட்டளை மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கட்டளை யூதர்களின் சொந்த மொழியிலும் சொந்த எழுத்திலும் எழுதப்பட்டது. 10 மொர்தெகாய் ராஜா அகாஸ்வேருவின் அதிகாரத்தால் கட்டளைகளை எழுதினான். பிறகு அவன் ராஜாவின் முத்திரை மோதிரத்தால் கடிதங்களை முத்திரையிட்டான். பிறகு தூதர்களை குதிரைகளின் மேல் அனுப்பினான். அவர்கள் ராஜாவுக்காக வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாக போனார்கள்.

11 ராஜாவின் கட்டளைகளாகக் கடிதங்களில் சொல்லப்பட்டவை இதுதான்: ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள யூதர்கள் அனைவரும் கூடி சேர்ந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்ற உரிமையுடையவர்கள். அவர்களுக்கு தங்களையோ, தங்கள் பெண்களையோ, பிள்ளைகளையோ தாக்கும் எதிரிகளைத் தாக்கவோ, கொல்லவோ, அழிக்கவோ உரிமை உண்டு. யூதர்களுக்கு தங்கள் பகைவர்களின் சொத்தை அபகரிக்கவோ, அழிக்கவோ உரிமை உண்டு.

12 இதைச் செய்வதற்காக யூதர்களுக்கு பன்னிரண்டாவது மாதமான ஆதார் மாதத்தின் 13வது நாள் நியமிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் இதனை அகாஸ்வேரு ராஜாவின் இராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 13 ராஜாவின் கட்டளைப் பிரதி ஒன்று அனுப்பப்பட்டு அது சட்டமாயிற்று. எல்லா மாகாணங்களிலும் அது சட்டமானது. இராஜ்யத்திலுள்ள எல்லா நாடுகளின் ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டதால் யூதர்கள் அந்த சிறப்பு நாளுக்காகத் தயாராக இருந்தனர். யூதர்கள் தம் எதிரிகளுக்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். 14 தூதுவர்கள் ராஜாவின் குதிரையில் மிக வேகமாகச் சென்றனர். ராஜா அவர்களிடம் வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான். இந்த கட்டளை, தலைநகரமான சூசானிலும் அறிவிக்கப்பட்டது.

15 மொர்தெகாய் ராஜாவைவிட்டு போனான். அவன் ராஜாவிடமிருந்து பெற்ற சிறப்பான ஆடையை அணிந்திருந்தான். அவனது ஆடை வெண்மையும், நீலமுமாய் இருந்தது. பெரிய பொற் கிரீடமும், சிறந்த பட்டும், இரத்தாம்பரமும் அணிந்திருந்தான். சூசானின் சிறப்பு விழா நடைபெற்றது. ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். 16 யூதர்களுக்குத் தனி மகிழ்ச்சியுடைய நாளாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் உரியநாளாக இருந்தது.

17 ராஜாவின் கட்டளை எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் சென்றனவோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் யூதர்களிடையே ஏற்பட்டன. யூதர் விருந்துடன் அதனைக் கொண்டாடினர். யூதர்களுக்குப் பயந்ததினால் மற்ற குழுவிலுள்ள ஜனங்களும் யூதர்களாகினர்.

மத்தேயு 5:43-48

அனைவரையும் நேசியுங்கள்

(லூக்கா 6:27-28,32-36)

43 “‘உன் சினேகிதனை நேசி.(A) உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center