Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 55:16-23

16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
    கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
    என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
    ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
    நித்திய ராஜா எனக்கு உதவுவார்.

20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
    அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
    அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
    அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
    ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.

22 உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
    அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
    உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.

எஸ்தர் 6:1-7:6

மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்

அதே இரவில், ராஜாவால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். (ராஜாக்களது வரலாற்று புத்தகத்தில் ராஜாக்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.) வேலைக்காரன் ராஜாவிடம் அதை வாசித்தான். அவன் ராஜா அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் ராஜாவின் வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் ராஜாவைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.

அதற்கு ராஜா, “என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?” என்ற கேட்டான்.

வேலைக்காரர்கள் ராஜாவிடம், “மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை” என்றனர்.

அப்போது, ராஜாவின் அரண்மனையில் வெளிப் பகுதியில் ஆமான் நுழைந்தான் அவன் தான் கட்டிய தூக்கு மரத்தில் மொர்தெகாய்யைத் தூக்கில் போடுவதற்காக ராஜாவைக் கேட்க வந்தான். அவன் முற்றத்தில் வரும்போது ராஜா, “இப்போது முற்றத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். ராஜாவின் வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள்.

எனவே ராஜா, “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனிடம், “ஆமான், ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?” என்று கேள்விக் கேட்டான்.

ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், “என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி ராஜா விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? ராஜா என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்.”

ஆகையால், ஆமான் ராஜாவுக்கு, “ராஜா பெருமைப்படுத்தவேண்டும் என விரும்புகிறவனுக்கு இதனைச் செய்யும். ராஜா அணிகிற உயர்ந்த ஆடையைக் கொண்டுவாருங்கள். ராஜா ஏறிச் செல்கிற குதிரையையும் கொண்டு வாருங்கள். அவர் தலையில் வைக்கிற அரசமுடியையும் கொண்டு வாருங்கள். பிறகு அந்த ஆடையையும், குதிரையையும் ராஜாவின் முக்கியமான தலைவனின் கையில் கொடுக்கப்படவேண்டும். ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்து குதிரையின் மேலேற்றி நகர வீதியில் உலா வரும்படி விடவேண்டும். ராஜாவின் முக்கிய தலைவன் அந்த மனிதனை குதிரை மீது நகர வீதியில் அழைத்து வரும்போது, ‘இதுபோலவே ராஜா பெருமைப்படுத்த விரும்புகிறவன் நடத்தப்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்’” என்ற பதில் சொன்னான்.

10 ராஜா ஆமானிடம், “வேகமாகப் போ” என கட்டளையிட்டு, “ஆடையையும், குதிரையையும் கொண்டுவா. இதனை நீ சொன்னபடி யூதனான மொர்தெகாய்க்குச் செய். மொர்தெகாய் ராஜாவின் வாசலருகில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிறான். நீ சொன்னபடி எல்லாவற்றையும் செய்” என்றான்.

11 எனவே ஆமான் ஆடையையும், குதிரையையும் எடுத்தான். ஆடையை மொர்தெகாய்க்கு அணிவித்தான். பிறகு அவனை குதிரையில் உட்கார வைத்து நகர வீதிகளில் உலாகொண்டுபோனான். ஆமான் மொர்தெகாய் பற்றி, “இதுபோல் தான் ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற மனிதன் நடத்தப்பட வேண்டும்” என்று அறிவித்தான்.

12 பிறகு மொர்தெகாய் ராஜாவின் வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆனால் ஆமான் வீட்டிற்கு விரைவாகப் போனான். அவன் தன் தலையை மூடிக்கொண்டான். ஏனென்றால், அவன் சஞ்சலமும் அவமானமும் அடைந்தான். 13 பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.

14 இவ்வாறு அவர்கள் ஆமானுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ராஜாவின் பிரதானிகள் ஆமானின் வீட்டிற்கு வந்தார்கள். எஸ்தர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வரும்படி ஆமானை அவர்கள் விரைவுபடுத்தினார்கள்.

ஆமான் தூக்கிலிடப்படுகிறான்

எனவே ராஜாவும், ஆமானும் இராணி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, ராஜா மீண்டும் இராணியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் இராணியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.

பிறகு, எஸ்தர் இராணி, “ராஜாவே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது ராஜாவைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.

பிறகு ராஜா அகாஸ்வேரு எஸ்தர் இராணியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.

எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.

பிறகு, ராஜா மற்றும் இராணி முன்னால் ஆமான் திகில் அடைந்தான்.

ரோமர் 9:30-10:4

30 இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை. எனினும் நீதிமான்களாக ஆனார்கள். காரணம் அவர்களது விசுவாசமே. 31 ஆனால் இஸ்ரவேல் மக்கள் சட்டவிதிகளின்படி வாழ்ந்து தேவனுக்கேற்ற நீதிமான்களாக விரும்பினார்கள். ஆனால் அவர்கள் வெல்லவில்லை. 32 காரணம் அவர்கள் அதனை தேவனில் நம்பிக்கை வைக்காமல், தங்கள் செயல்கள் மூலம் தேடினர். தடுக்கி விழத்தக்க கல்லிலேயே தடுக்கி விழுந்தார்கள். 33 அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.

“பாருங்கள்! நான் கல்லை சீயோனில் வைத்திருக்கிறேன்.
    அது மக்களைத் தடுக்கி விழச் செய்யும்.
    அந்தப் பாறை மக்களைத் தடுமாறி விழ அனுமதிக்கும்.
ஆனால் அக்கல்லிடம் நம்பிக்கைக்கொண்ட எவனும் அவமானம் அடைவதில்லை.”(A)

10 சகோதர சகோதரிகளே, அனைத்து யூதர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அதைத் தான் தேவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். யூதர்களைப் பற்றி என்னால் இவ்வாறு கூற முடியும். அவர்கள் உண்மையில் தேவனைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழி தெரியவில்லை. தேவனுக்கேற்ற நீதிமான்களாகும் தேவனுடைய வழி அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தம் சொந்த வழியிலேயே நீதிமான்களாக முயன்றனர். எனவே அவர்கள் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center