Revised Common Lectionary (Complementary)
16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
நித்திய ராஜா எனக்கு உதவுவார்.
20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.
22 உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.
எஸ்தர் ராஜாவிடம் பேசுகிறாள்
5 மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் ராஜாவின் அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி ராஜாவின் சபைக்கு முன்னால் இருந்தது. ராஜா தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான். 2 பிறகு, ராஜா எஸ்தர் இராணி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று ராஜா அருகில் போனாள். பிறகு அவள் ராஜாவின் பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.
3 பிறகு ராஜா, “எஸ்தர் இராணியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.
4 அதற்கு எஸ்தர், “நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?” என்று கேட்டாள்.
5 பிறகு ராஜா, “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான்.
எனவே, ராஜாவும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள். 6 அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது ராஜா மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான். 7 எஸ்தர், “இதுதான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது. 8 ராஜா, எனக்கு ஆதரவு கொடுத்தால், ராஜா என்னிடம் தயவாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை ராஜாவுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.
மொர்தெகாய் மீது ஆமானின் கோபம்
9 அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை ராஜாவின் வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று. 10 ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான். 11 தான் எவ்வளவு செல்வமுடையவன் என்ற பெருமையோடு பேச ஆரம்பித்தான். அவன் தனது பல குமாரர்களைப் பற்றியும் ராஜா எவ்வழியில் எல்லாம் தன்னை பெருமைபடுத்துக்கிறான் என்பதைப் பற்றியும் பெருமையோடு பேசினான். மற்ற அதிகாரிகளைவிட தன்னை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறான் என்பதையும் பெருமையோடு பேசினான். 12 ஆமான், “அதுமட்டுமல்ல, இராணி எஸ்தர் ராஜாவுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள். 13 ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் ராஜாவின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.
14 பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை, அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு ராஜாவை கேள். பிறகு, ராஜாவோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர்.
ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.
மனிதனின் சட்டத்தைப் பின்பற்றாதீர்கள்
16 ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள் 17 கடந்த காலத்தில், இவை நிழலாக இருந்து எதிர்காலத்தில் வருவதைச் சுட்டிக் காட்டியது. ஆனால் புதிதாக வந்தவை கிறிஸ்துவில் காணப்படுகின்றன. 18 சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. 19 அவர்கள், தலையாகிய கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. முழு சரீரமும் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளது. அவரால் நம் சரீரத்தின் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று அக்கறை கொள்கிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று உதவியும் செய்கிறது. இது சரீரத்தை வலிமைப்படுத்தி ஒன்றாய்ச் சேர்க்கிறது. தேவன் விரும்புகிற விதத்திலேயே சரீரம் வளருகின்றது.
20 நீங்கள் கிறிஸ்துவோடு இறந்தீர்கள். உலகத்தின் பயனற்ற சட்டதிட்டங்களில் இருந்தும் விடுதலை பெற்றீர்கள். எனினும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களைப் போன்று நடித்து வருகிறீர்கள். 21 “இதனை உண்ணக்கூடாது.” “அதனைச் சுவைபார்க்கக்கூடாது” “அதனைத் தொடக்கூடாது” என்கிறீர்கள். 22 ஏன் இன்னும் இது போன்ற சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள்? இவை பயன்படுத்தப்பட்டவுடன் போய்விடும். இச்சட்டதிட்டங்கள் பூலோகத்தைப் பற்றியவை. இவை மனிதர்களின் கட்டளைகளும், போதனைகளுமேயாகும். தேவனுடையவை அல்ல. 23 இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது.
கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை
3 கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார்.
2008 by World Bible Translation Center