Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
7 அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது). 8 பிறகு, ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு ராஜாவே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது ராஜாவாகிய உமக்கு நல்லதல்ல.
9 “இது ராஜாவுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை ராஜாவின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.
10 எனவே, ராஜா தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரன். ஆமான் யூதர்களின் எதிரி. 11 பிறகு ராஜா ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான்.
12 பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் ராஜாவின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் ராஜாவின் நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். ராஜா அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
13 தூதுவர்கள் ராஜாவின் அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் ராஜாவின் கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது.
14 கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள். 15 ராஜாவின் கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. ராஜாவும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது.
22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:
“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27 ஏனெனில் மரணத்தின் இடத்தில்[a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’(A)
29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.
“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’
தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,
“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’(B)
36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.
2008 by World Bible Translation Center