Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
மொர்தெகாய் ஒரு தீய திட்டத்தைப் பற்றி அறிகிறான்
19 மொர்தெகாய் ராஜாவின் வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான். 20 எஸ்தர் தான் யூதகுலத்தை சேர்ந்தவள் என்பதை அதுவரை இரகசியமாக வைத்திருந்தாள். அவள் தனது குடும்பத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. அவ்வாறு செய்யும்படி மொர்தெகாய் அவளுக்குச் சொல்லியிருந்தான். அவள் மொர்தெகாய்க்குக் கீழ்ப்படிந்தாள்.
21 மொர்தெகாய் ராஜாவின் வாசலை அடுத்து உட்கார்ந்திருந்தபோது, இது நடந்தது. பிக்தான், தேரேசு எனும் இரண்டு ராஜாவின் வாசல் காவல் அதிகாரிகள் ராஜா மீது கோபங்கொண்டனர். அவர்கள் ராஜா அகாஸ்வேருவை கொல்ல சதித் திட்டமிட ஆரம்பித்தனர். 22 ஆனால், மொர்தெகாய் அவர்களது திட்டத்தை அறிந்துக்கொண்டு எஸ்தர் இராணியிடம் கூறினான். பிறகு, இராணி எஸ்தர் அதனை ராஜாவிடம் கூறினாள். அவள் இத்தீய திட்டத்தை அறிந்து சொன்னவன் மொர்தெகாய் என்றும் கூறினாள். 23 பிறகு இந்த காரியம் சோதிக்கப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மையென அறியப்பட்டது. ராஜாவைக் கொல்ல சதித்திட்டமிட்ட இரு காவலர்களும் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டனர். இவை அனைத்தும் ராஜாவுக்கு முன்பாக ராஜாவின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டது.
யூதர்களை அழிப்பதற்கான ஆமானின் திட்டம்
3 இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு ராஜா ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் குமாரன். இவன் ஆகாகியன். ராஜா ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான். 2 ராஜாவின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று ராஜா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான். 3 பிறகு, அரச வாசலில் உள்ள ராஜாவின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர்.
4 நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான். 5 மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான். 6 மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான்.
15 சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று, 16-17 “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.
18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)
20 “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,
யாரும் அங்கு வாழலாகாது.’(A)
மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’(B)
2008 by World Bible Translation Center