Revised Common Lectionary (Complementary)
மேம்
97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை
18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தினதையும் எத்திரோ கேள்விப்பட்டான். 2 எனவே தேவனின் மலைக்கருகில் (ஓரேப்) மோசே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். அவன் மோசேயின் மனைவியாகிய சிப்போராளையும் அழைத்து வந்திருந்தான். (மோசே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தபடியால் சிப்போராள், மோசேயோடு இருக்கவில்லை.) 3 எத்திரோ மோசேயின் இரண்டு குமாரர்களையும் அழைத்து வந்திருந்தான். முதல் குமாரனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான். 4 இன்னொரு குமாரனின் பெயர் எலியேசர். ஏனெனில் அவன் பிறந்தபோது, மோசே, “எனது முற்பிதாக்களின் தேவன் எனக்கு உதவி, எகிப்தின் மன்னனிடமிருந்து அவர் என்னைக் காத்தார்” என்றான். 5 மோசே தேவனின் மலைக்குப் (சீனாய்) பக்கத்திலுள்ள பாலைவனத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். மோசேயின் மனைவியும் அவனது இரண்டு குமாரர்களும் எத்திரோவோடிருந்தனர்.
6 எத்திரோ மோசேக்குச் செய்தி சொல்லியனுப்பினான். எத்திரோ, “உனது மாமனாராகிய எத்திரோ வந்துள்ளேன். நான் உனது மனைவியையும், உனது இரண்டு குமாரர்களையும் உன்னிடம் அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.
7 எனவே மோசே மாமனாரைப் பார்ப்பதற்கு வெளியே போனான். மோசே அவனைக் குனிந்து வணங்கி, முத்தமிட்டான். இருவரும் ஒருவருக்கொருவர் சுகசெய்திகளை விசாரித்துக்கொண்டனர். பின் மோசேயின் கூடாரத்திற்குள் மேலும் அதிகமாக உரையாடும்படிக்கு நுழைந்தனர். 8 இஸ்ரவேல் ஜனங்களினிமித்தம் கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் எதிராகச் செய்த எல்லாவற்றையும், பார்வோனுக்கும் எகிப்தின் ஜனங்களுக்கும் கர்த்தர் செய்தவற்றையும், வழியில் அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைப்பற்றியும், துன்பம் வந்தபோதெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எப்படிக் காப்பாற்றினார் என்பதையெல்லாம் மோசே தன் மாமனாரான எத்திரோவிடம் சொன்னான்.
9 கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் கேள்விப்பட்டபோது எத்திரோ மிக்க மகிழ்ச்சியடைந்தான். எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் விடுதலை செய்தார் என்பதையறிந்து அவன் மகிழ்ந்தான். 10 எத்திரோ,
“கர்த்தரை துதியுங்கள்!
எகிப்தின் வல்லமையிலிருந்து அவர் உங்களை விடுவித்தார்.
பார்வோனிடமிருந்து கர்த்தர் உங்களைக் காப்பாற்றினார்.
11 இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன்.
அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்றான்.
12 எத்திரோ சில பலிகளையும், காணிக்கைகளையும் தேவனை மகிமைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்தான். மோசேயின் மாமனாராகிய எத்திரோவோடு சேர்ந்து உண்பதற்காக ஆரோனும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் (தலைவர்களும்) வந்தார்கள். அவர்கள் எல்லோரும் தேவனுடைய சந்நிதியில் சேர்ந்து உணவு உண்டார்கள்.
27 தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். 28 எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். 29 கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.
2 உங்களுக்கு உதவ நான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். லவோதிக்கேயா மக்களுக்கும், என்னை இதுவரை காணாத ஏனைய மக்களுக்கும் நான் உதவி செய்ய முயல்கிறேன். 2 அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான். 3 கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
4 தோற்றத்தில் உண்மை போன்ற பொய்களைச் சொல்லி உங்களை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவையும் உங்களுக்கு எழுதுகிறேன். 5 அங்கே நான் உங்களோடு இல்லை. எனினும் எனது இதயம் உங்களோடு உள்ளது. உங்களது நல்ல வாழ்வைக் காணும்போதும் கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்தைக் காணும்போதும் நான் மகிழ்வடைகிறேன்.
கிறிஸ்துவில் தொடர்ந்து வாழுங்கள்
6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். 7 கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள்.
2008 by World Bible Translation Center