Revised Common Lectionary (Complementary)
மூன்று பார்வையாளர்கள்
18 பிறகு, கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக் காட்சியளித்தார். ஆபிரகாம் மம்ரேயிலுள்ள ஓக் மரங்களுக்கு அருகில் வாழ்ந்தான். ஒரு நாள், வெப்பம் அதிகமான நேரத்தில் ஆபிரகாம் தனது கூடாரத்தின் வாசலுக்கருகில் இருந்தான். 2 ஆபிரகாம் மேலே ஏறிட்டுப் பார்த்தபோது முன்றுபேர் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆபிரகாம் அவர்களைப் பார்த்ததும் குனிந்து வணங்கினான். 3 ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள். 4 உங்கள் பாதங்களைக் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன். நீங்கள் மரங்களுக்கடியில் ஓய்வுகொள்ளுங்கள். 5 நான் உங்களுக்கு உணவைக் கொண்டுவருவேன். நீங்கள் விரும்புகிற அளவிற்குச் சாப்பிடலாம். பிறகு உங்களது பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அந்த மூன்று மனிதர்களும், “அது நல்லது. நீ சொன்னபடி நாங்கள் செய்கிறோம்” என்றனர்.
6 ஆபிரகாம் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவன் சாராளிடம், “சீக்கிரம் மூன்றுபடி கோதுமை மாவை எடுத்து ரொட்டிகள் தயார் செய்” என்றான். 7 பிறகு ஆபிரகாம் தனது தொழுவத்துக்கு ஓடி இளமையான கன்றுக் குட்டியைத் தேர்ந்தெடுத்து, அதனை வேலைக்காரனிடம் கொடுத்தான். அதனை விரைவில் கொன்று உணவு தயாரிக்கும்படி கூறினான். 8 ஆபிரகாம் இறைச்சியும், கொஞ்சம் பாலும், வெண்ணெயும் கொண்டு வந்து மூன்று பார்வையாளர்கள் முன்பு வைத்து அவர்கள் அருகில் பரிமாறுவதற்குத் தயாராக நின்றான். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
9 பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், “உனது மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டனர்.
அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
10 பிறகு கர்த்தர், “நான் மீண்டும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திரும்பி வருவேன். அப்போது உன் மனைவி சாராள் ஒரு மகனோடு இருப்பாள்” என்றார்.
சாராள் கூடாரத்திலிருந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
தாவீதின் பாடல்.
15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.
கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்
15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.
17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.
19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20 பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.
21 ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. 22 ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். 23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.
சபைகளுக்காக பவுலின் பணி
24 உங்களுக்காகப் பாடுபடுவதைக் குறித்து நான் மகிழ்கிறேன். சரீரமாகிய சபைக்காக கிறிஸ்து இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறார். அத்துன்பத்தில் ஒரு பங்கை நானும் பெற்றுக்கொள்கிறேன். அவரது சரீரமாகிய சபைக்காக நான் துன்புறுகிறேன். 25 ஏனென்றால் தேவன் எனக்கு இந்தச் சிறப்புக்குரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பணி உங்களுக்கு உதவுகிறது. தேவனுடைய போதனையை முழுமையாய் கூறுவதுதான் என் பணி. 26 இந்தப் போதனைதான் இரகசிய உண்மை. இது உலகம் படைக்கப்பட்ட காலம் முதல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது எல்லா மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருந்தது. இப்போது தேவனுடைய பரிசுத்தமான மக்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 27 தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். 28 எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.
மரியாளும் மார்த்தாளும்
38 இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள். 39 மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். 40 மிகுதியான வேலைகளைத் தானே செய்துகொண்டிருந்ததால் மார்த்தாள் எரிச்சலடைந்தாள். அவள் உள்ளே சென்று, “ஆண்டவரே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே தனிமையாகச் செய்வதற்கு என் சகோதரி என்னை விட்டு வைத்திருப்பதை நீர் கவனிக்கவில்லையா? எனக்கு உதவும்படியாக அவளுக்குக் கூறுங்கள்” என்றாள்.
41 ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே, மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய். 42 ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.
2008 by World Bible Translation Center