Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.
லோத்து பிடிக்கப்படுதல்
14 அம்ராப்பேல் சிநெயாரின் ராஜா. அரியோகு ஏலாசாரின் ராஜா. கெதர்லாகோமேர் ஏலாமின் ராஜா. திதியால் கோயம் தேசத்தின் ராஜா. 2 இவர்கள் அனைவரும் மற்ற ராஜாக்களோடு சண்டையிட்டனர். சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும் பேலாவின் ராஜாவோடும் (பேலா சோவார் என்றும் அழைக்கப்பட்டான்) அவர்கள் போர் செய்தனர்.
3 சித்தீம் பள்ளத்தாக்கில் எல்லா ராஜாக்களும் தம் படைகளோடு கூடினர். (சித்தீம் பள்ளத்தாக்கு இப்போது உப்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.) 4 இந்த ராஜாக்கள் 12 ஆண்டுகள் கெதர்லாகோமேருக்குச் சேவைசெய்து 13ஆம் ஆண்டில் கலகம் செய்தார்கள். 5 14ஆம் ஆண்டிலே கெதர்லாகோமேரும் அவனோடு இருந்த ராஜாக்களும் போருக்கு வந்தனர். இவர்கள் அஸ்தரோத் கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும் காமிலிருந்த சூசிமியரையும், சாவேகீரியத் தாயீமிலே இருந்த ஏமியரையும், 6 சேயீர் மலைகளில் இருந்த ஒசரியரையும் வனாந்தரத்திற்கு அருகிலே இருந்த எல்பாரான் மட்டும் தோற்கடித்தனர். 7 அதன்பிறகு ராஜா கெதர்லாகோமேர் வடதிசையில் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து அமலேக்கியரின் நாடுகளையும் அத்சாத்சோன் தாமாரிலே இருந்த எமோரியரையும் அழித்து ஒழித்தான்.
8 அப்போது சோதோம், அத்மா, கொமோரா, செபோயீம், சோவார் என்னும் பேலா ஆகிய நாடுகளின் ராஜாக்கள் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், கோயம் ராஜாவாகிய திதியாலோடும் சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம் செய்தார்கள். 9 எனவே நான்கு ராஜாக்கள் ஐந்து பேருக்கு எதிராக இருந்தனர்.
10 அந்த சித்தீம் பள்ளத்தாக்கு முழுவதும் தார் நிறைந்த குழிகள் இருந்தன. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தோற்றோடி வந்து அதில் விழுந்தார்கள். இன்னும் பலர் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
11 எனவே, சோதோம் மற்றும் கொமோராவினருக்கு உரிய பொருட்களை எல்லாம் அவர்களின் பகைவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களது அனைத்து உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆபிராமின் சகோதரனுடைய குமாரனான லோத்து சோதோமில் வசித்துக்கொண்டிருந்தான். 12 அவனையும் எதிரிகள் பிடித்துக்கொண்டார்கள். மேலும் அவனுடைய உடமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு எதிரிகள் ஓடினார்கள். 13 பிடிபடாதவர்களில் ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஆபிராம் மம்ரே என்னும் எமோரியனுடைய பூமியில் குடியிருந்தான். மம்ரே, எஸ்கோல், ஆநேர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் உதவுவதாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் ஆபிராமுக்கு உதவுவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
ஆபிராம் லோத்தை மீட்கிறான்
14 லோத்து கைதுசெய்யப்பட்டதை ஆபிராம் அறிந்துகொண்டான். அவன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்தான் அவர்களிடம் 318 பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர். அவன் அவர்களோடு தாண் நகரம்வரை பகைவர்களைத் துரத்திக்கொண்டு போனான். 15 அன்று இரவு அவனும் அவனது வீரர்களும் பகைவரைத் திடீரென்று தாக்கினர். அவர்களைத் தோற்கடித்து தமஸ்குவின் வடக்கேயுள்ள கோபாவரை துரத்தினர். 16 பிறகு, பகைவர்கள் எடுத்துசென்ற அனைத்து பொருட்களையும் ஆபிராம் மீட்டுக்கொண்டான். பெண்கள், வேலைக்காரர்கள், லோத்து, அவனது பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.
விதைத்தலின் உவமை
(மத்தேயு 13:1-17; மாற்கு 4:1-12)
4 கூட்டமாகப் பலர் சேர்ந்து வந்தனர். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் மக்கள் இயேசுவிடம் வந்தனர். இயேசு பின்வரும் உவமையை மக்களுக்குக் கூறினார்.
5 “ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன. 6 சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. 7 முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன.”
இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள்” என்றார்.
9 இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர்.
10 இயேசு, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், நான் பிற மக்களோடு பேசுவதற்கு உவமைகளைப் பயன்படுத்துகிறேன். நான் இவ்வாறு செய்வது ஏனென்றால்:
“‘அவர்கள் பார்ப்பார்கள்,
ஆனால் எதையும் காணமாட்டார்கள்.
அவர்கள் கவனிப்பார்கள்:
ஆனால் எதையும் புரிந்துகொள்ளமாட்டார்கள்’”(A)
என்றார்.
2008 by World Bible Translation Center