Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.
எகிப்தில் ஆபிராம்
10 அந்நாட்களில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் உணவுப் பொருட்களும் விளையாமல் இருந்தது. எனவே ஆபிராம் எகிப்திற்கு பிழைப்பதற்காகப் போனான். 11 தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும். 12 எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள். 13 அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம்” என்றான்.
14 எனவே ஆபிராம் எகிப்துக்குப் போனான். அங்குள்ள ஜனங்கள் சாராய் மிகவும் அழகானவளாக இருப்பதைப் பார்த்தனர். 15 சில எகிப்தின் தலைவர்களும் அவளைப் பார்த்தனர். அவள் மிகவும் அழகான பெண் என்று அவர்கள் பார்வோனிடம் கூறினர். அவர்கள் அவளை பார்வோனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 16 ஆபிராமை சாராயின் சகோதரனாக எண்ணி பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான்.
17 பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார். 18 எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல், 19 அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான். 20 பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.
5 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான். 2 அறியாமை உடையவர்களிடமும், தவறு செய்கிறவர்களிடமும் அந்தப் பிராதான ஆசாரியனால் மென்மையாக இருக்க முடிகிறது. ஏனெனில் அவனும் பலவீனத்துக்குட்பட்டவனே ஆவான். 3 இதனால் தான், மற்றவர்களுக்காகக் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு முன்னால், தன் சொந்தப் பாவங்களுக்காக அவன் காணிக்கை செலுத்த வேண்டும்.
4 பிரதான ஆசாரியனாக இருப்பது ஒரு கௌரவமாகும். ஆனால் தன்னைத் தானே யாரும் பிரதான ஆசாரியனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் ஆரோனைத்[a] தேர்ந்தெடுத்ததைப் போல், தேவனே அவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 5 கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம்,
“நீர் எனது குமாரன்.
இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார்.(A)
6 இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்,
“நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப்
போன்று ஆசாரியராக இருப்பீர்”(B)
2008 by World Bible Translation Center