Revised Common Lectionary (Complementary)
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன்.
ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.
12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால்
அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான்.
தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
14 தன்னைப் பின்பற்றுவோருக்கு கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார்.
அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார்.
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன்.
தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.
16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன்.
என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும்.
என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும்.
நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
19 என் பகைவர்களையெல்லாம் பாரும்.
அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும்.
நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.
ஞானத்தின் வல்லமை
13 இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச் செய்வதை நான் பார்த்தேன். எனக்கு அது மிக முக்கியமாகப்பட்டது. 14 மிகக் குறைந்த எண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம் இருந்தது. ஒரு ராஜா அதனைச் சுற்றி தன் படை வீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான். 15 ஆனால் அந்நகரில் ஒரு ஞானி இருந்தான். அவன் ஏழை. ஆனால் அந்நகரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப் பயன்படுத்தினான். எல்லாம் நடந்து முடிந்தபிறகு, அந்த ஏழையை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். 16 எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
17 ஒரு முட்டாள் ராஜாவால் மிகச் சத்தமாகச் சொல்லப்படுகிற வார்த்தைகளைவிட
ஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள் சிறந்தவை.
18 போரில் ஞானமானது வாள்களையும் ஈட்டிகளையும்விடச் சிறந்தவை.
ஆனால் ஒரு முட்டாளால் பல நல்லவற்றை அழிக்க முடியும்.
மனிதகுமாரனின் நியாயத்தீர்ப்பு
31 “மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். ராஜாவாகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார்.
34 “பின் ராஜாவானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. 35 நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். 36 நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார்.
37 “அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? 38 எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? 39 எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள்.
40 “பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார்.
41 “பின் ராஜா தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டார். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. 42 நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. 43 நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.
44 “அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள்.
45 “அப்போது ராஜா, ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார்.
46 “பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.”
2008 by World Bible Translation Center