Revised Common Lectionary (Complementary)
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன்.
ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.
12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால்
அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான்.
தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
14 தன்னைப் பின்பற்றுவோருக்கு கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார்.
அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார்.
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன்.
தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.
16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன்.
என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும்.
என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும்.
நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
19 என் பகைவர்களையெல்லாம் பாரும்.
அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும்.
நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.
19 ஒரு முட்டாளாக இருந்து பிறரை ஏமாற்றிப் பொய் சொல்கிறவனாக இருப்பதைவிட ஏழையாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது நல்லது.
2 சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.
3 ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.
4 ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.
5 இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.
6 ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
7 ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர்களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள்.
8 ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான்.
9 பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான்.
10 ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.
11 ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.
12 ஒரு ராஜா கோபத்தோடு இருக்கும்போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.
13 ஒரு முட்டாள் குமாரன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.
14 ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.
15 ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.
16 ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான்.
17 ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார்.
நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும்
11 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்கிற போதனை இது. நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். 12 காயீனைப்போல இராதீர்கள். காயீன் தீயவனுக்கு உரியவனாக இருந்தான். காயீன் அவனது சகோதரனைக் கொன்றான். ஆனால் காயீன் அவனது சகோதரனை ஏன் கொன்றான்? காயீன் செய்தவை தீயனவாக இருந்ததாலும், அவன் சகோதரன் செய்தவை நல்லனவாக இருந்ததாலுமே.
13 சகோதர சகோதரிகளே, இவ்வுலகத்தின் மக்கள் உங்களை வெறுக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள். 14 நாம் மரணத்தை விட்டு, ஜீவனுக்குள் வந்திருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்துவில் நமது சகோதரரையும் சகோதரிகளையும் நாம் நேசிப்பதால் இதனை அறிவோம். சகோதரனை நேசிக்காத மனிதன் இன்னும் மரணத்தில் இருக்கிறான். 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒருவன் கொலையாளி ஆவான். எந்த கொலையாளிக்கும் தேவன் தரும் நித்திய வாழ்வு இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
16 உண்மையான அன்பு எதுவென்பதை இவ்வாறே நாம் அறிவோம். இயேசு அவரது ஜீவனை நமக்காகக் கொடுத்தார். எனவே நாம் நமது ஜீவனைக் கிறிஸ்துவில் நமது சகோதரருக்காகவும் சகோதரிகளுக்காகவும் கொடுக்க வேண்டும். 17 தேவைப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் பெறுகிற அளவுக்குப் போதுமான செல்வந்தனாக ஒரு விசுவாசி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஏழையானவனும் தேவையான பொருள்கள் கிடைக்காதவனுமாகிய கிறிஸ்துவில் சகோதரனை அவன் பார்க்கிறான். தேவையானவற்றைப் பெற்ற சகோதரன் ஏழை சகோதரனுக்கு உதவாமலிருந்தால் பயன் என்ன? அவன் இதயத்தில் தேவனின் அன்பு இல்லை.
2008 by World Bible Translation Center