Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
2 என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
3 ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
4 கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
உமது வழிகளை எனக்குப் போதியும்.
5 எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
நீரே என் தேவன், என் மீட்பர்.
அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
6 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
7 எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.
8 கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
9 தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
37 இந்த விளக்கம் பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதோடு 38 பார்வோன் அவர்களிடம், “யோசேப்பைவிடப் பொருத்தமானவன் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவ ஆவியானவர் அவன் மேல் இருக்கிறார். அவனை மிக ஞானமுள்ளவனாக ஆக்கியிருக்கிறார்!” என்றான்.
39 எனவே, பார்வோன் யோசேப்பிடம், “தேவன் இவற்றை உனக்குத் தெரியச் செய்தார். உன்னைப்போல் அறிவுக் கூர்மையும், ஞானமும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. 40 உன்னை என் நாட்டிற்கு அதிகாரியாய் ஆக்குகிறேன். உன் கட்டளைகளுக்கு என் ஜனங்கள் அடங்கி நடப்பார்கள். நான் மட்டுமே உன்னைவிட மிகுந்த அதிகாரம் பெற்றவனாக இருப்பேன்” என்று கூறினான்.
41 யோசேப்பை ஆளுநர் ஆக்குவதற்குரிய விசேஷச் சடங்கும், ஊர்வலமும் சிறப்பான முறையில் நடந்தன. “உன்னை எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆக்குகிறேன்” என்றான். 42 பார்வோன் யோசேப்புக்கு தனது விசேஷ மோதிரத்தைக் கொடுத்தான். அம்மோதிரத்தில் ராஜமுத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இத்தோடு அழகான ஆடைகளையும், அவன் கழுத்தில் பொன்மாலையும் அணிவித்தான். 43 யோசேப்பைத் தனது இரண்டாவது இரதத்தில் ஏற்றி ஊர்வலமாகப் போகச் செய்தான். காவல் அதிகாரிகள் அவன் முன்னே போய் ஜனங்களிடம், “யோசேப்புக்கு அடிபணியுங்கள்” என்றனர். இவ்வாறு யோசேப்பு எகிப்து முழுவதற்கும் ஆளுநர் ஆனான்.
44 பார்வோன் யோசேப்பிடம், “நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன். எனக்கு விருப்பமான முறையில் நான் நடந்துகொள்வேன். வேறுயாரும் இந்நாட்டில் உன் அனுமதி இல்லாமல் கையைத் தூக்கவோ காலை நகர்த்தவோ முடியாது” என்றான். 45 பார்வோன் யோசேப்புக்கு சாப்னாத்பன்னேயா என்று வேறு பெயர் சூட்டினான். அவனுக்கு ஆஸ்நாத் என்ற மனைவியையும் கொடுத்தான். அவள் ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தி. இவ்வாறாக யோசேப்பு எகிப்து தேசத்து ஆளுநரானான்.
46 யோசேப்புக்கு அப்போது 30 வயது. அவன் நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டான். 47 ஏழு ஆண்டுகளாக எகிப்தில் நல்ல விளைச்சல் இருந்தது. 48 யோசேப்பு அவற்றை நன்கு சேமித்து வைத்தான். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தான். 49 யோசேப்பு ஏராளமாக கடற்கரை மணலைப்போன்று தானியங்களைச் சேமித்து வைத்தான். அவன் சேமித்த தானியமானது அளக்கமுடியாத அளவில் இருந்தது.
9 “இந்தத் தந்தையர் யோசேப்பைக் (அவர்களது இளைய சகோதரன்) கண்டு பொறாமை கொண்டனர். எகிப்தில் ஒரு அடிமையாக யோசேப்பை அவர்கள் விற்றனர். ஆனால் தேவன் யோசேப்போடு இருந்தார். 10 யோசேப்புக்கு அங்கு பல தொல்லைகள் நேர்ந்தாலும், தேவன் அத்தொல்லைகள் எல்லாவற்றிலிருந்தும் அவரைக் காப்பாற்றினார். பார்வோன் எகிப்தின் ராஜாவாக இருந்தான். அவன் யோசேப்புக்கு தேவன் கொடுத்த ஞானத்தைக் கண்டு அவரை விரும்பவும் நேசிக்கவும் செய்தான். எகிப்தின் ஆளுநர் வேலையைப் பார்வோன் யோசேப்புக்குக் கொடுத்தான். பார்வோனின் வீட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆளுவதற்கும் யோசேப்பை பார்வோன் அனுமதித்தான். 11 ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை.
12 “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) 13 பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது. 14 பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். 15 எனவே யாக்கோபு எகிப்திற்குப் போனார். யாக்கோபும் நமது தந்தையரும் அவர்களின் மரணம் மட்டும் அங்கு வாழ்ந்தனர். 16 பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் குமாரர்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.)
2008 by World Bible Translation Center