Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 66:10-14

10 எருசலேமே மகிழ்ச்சிகொள்!
    எருசலேமை நேசிக்கிற ஜனங்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்!
எருசலேமிற்கு துன்பங்கள் ஏற்பட்டன.
    எனவே, ஜனங்களில் சிலர் வருத்தமாய் இருந்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம்!
11 ஏனென்றால், மார்பிலிருந்து பால் வருவது போன்று நீங்கள் இரக்கத்தைப் பெறுவீர்கள்.
    அந்தப் பால் உண்மையில் உங்களைத் திருப்திப்படுத்தும்.
நீங்கள் அந்தப் பாலைக் குடிப்பீர்கள்.
    நீங்கள் உண்மையில் எருசலேமின் மகிமையை அனுபவிப்பீர்கள்.

12 கர்த்தர் கூறுகிறார், “பார், நான் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பேன்.
    இந்தச் சமாதானம் உங்களுக்குப் பெருக்கெடுத்து வரும் ஆற்றினைப்போல் பாயும்.
அனைத்து நாடுகளில் உள்ள செல்வங்களும் உன்னிடம் பாய்ந்து வரும்.
    அந்தச் செல்வம் வெள்ளம்போல் வரும்.
நீங்கள் சிறு குழந்தைகளைப்போன்று இருப்பீர்கள். நீங்கள் பாலைக் (செல்வம்) குடிப்பீர்கள்!
    நான் உங்களைத் தூக்கி எனது கைகளில் வைத்துக்கொள்வேன்.
    நான் உங்களை எனது முழங்காலில் வைத்து தாலாட்டுவேன்.
13 ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன்!
    நீங்கள் எருசலேமில் ஆறுதல் செய்யப்படுவீர்கள்.”

14 நீங்கள் உண்மையில் மகிழ்ச்சியடைகிறவற்றைப் பார்ப்பீர்கள்.
    நீங்கள் விடுதலை பெற்று புல்லைப்போல வளருவீர்கள்.
கர்த்தருடைய ஊழியர்கள் அவருடைய வல்லமையைக் காண்பார்கள்.
    ஆனால், கர்த்தருடைய பகைவர்கள் அவரது கோபத்தைப் பார்ப்பார்கள்.

சங்கீதம் 66:1-9

இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.

66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
    துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
    தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
    அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
    ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.

தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
    அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
    மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
    எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
    ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.

ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
    உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
    தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.

கலாத்தியர் 6:1-6

ஒருவருக்கொருவர் உதவுக

சகோதர சகோதரிகளே, உங்கள் குழுவில் உள்ள ஒருவன் தவறு செய்யலாம். ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனிடம் போக வேண்டும். அவன் நல்ல வழிக்கு வர சாந்தத்தோடு உதவ வேண்டும். ஆனால் கவனமாக இருங்கள். நீங்கள் பாவம் செய்யத் தூண்டப்படலாம். உங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள். முக்கியத்துவம் இல்லாத ஒருவன் தன்னைப் பெரிதும் முக்கியத்துவம் கொண்டவனாக நினைத்துக்கொள்வானேயானால், அது தன்னைத் தானே முட்டாளாக்கிக்கொள்ளும் காரியமாகும். ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது வயலில் நடுவது போன்றது

வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக.

கலாத்தியர் 6:7-16

புத்தியற்றவர்களாகாதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். பாவம் நிறைந்த தன் சுயத்தை திருப்தி செய்யும் பொருட்டு வாழத் தொடங்குவானேயானால், பாவம் நிறைந்த அவன் சுயமானது நிலையான மரணத்தையே தரும். ஆனால் பரிசுத்த ஆவியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு ஒருவன் வாழத் தொடங்குவானேயானால், அழிவற்ற வாழ்வை ஆவியானவரிடமிருந்து பெறுவான். நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது. 10 எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், நாம் செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

பவுல் தன் நிருபத்தை முடித்தல்

11 இதை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். கடிதங்கள் எவ்வளவு பெரியவை என்று பாருங்கள். 12 சிலர் உங்களை விருத்தசேதனம் செய்யுமாறு கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சில மக்கள் தம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்பதன் பொருட்டு அவர்கள் இதனைச் செய்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை பிரசங்கித்தால் துன்பப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். 13 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களோ சட்டத்தை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களைச் செய்ய வைப்பதில் பெருமைப்பட மட்டும் விரும்புகிறார்கள்.

14 இது போன்றவற்றைக் குறித்து நான் பெருமையடித்துக்கொள்ளமாட்டேன் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சிலுவை ஒன்றே நான் பெருமைப்படத்தக்கது. சிலுவையில் இயேசு இறந்து போனதால் எனக்கு இந்த உலகமே செத்துப்போனது. இந்த உலகத்துக்கு நான் செத்துப்போனேன். 15 ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம். 16 இந்தச் சட்டத்தின் முறைப்படி வாழ்கிற தேவனுடைய இஸ்ரவேலர்களுக்கு சமாதானமும் கிருபையும் உண்டாவதாக.

லூக்கா 10:1-11

எழுபத்திரண்டு பேரை அனுப்புதல்

10 இதன் பின்பு இயேசு கூடுதலாக எழுபத்திரண்டு[a] மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு, இரண்டு பேராக இயேசு அவர்களை அனுப்பினார். தான் போக விரும்பிய ஒவ்வொரு நகருக்கும், இடத்துக்கும் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினார். இயேசு அவர்களுக்கு, “அறுவடைக்கு மிக அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள். அறுவடை செய்வதற்கு உதவியாக மிகக் குறைவான வேலையாட்களே உள்ளனர். தேவன் அறுவடைக்கு (மக்களுக்கு) எஜமானர். அறுவடை செய்வதற்கு ஏற்ற அதிகமான வேலைக்காரர்களை அனுப்பும்படியாக தேவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

“நீங்கள் இப்போது போகலாம். ஆனால் கேளுங்கள். நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கு நடுவில் சிக்கிய ஆடுகளைப்போல் காணப்படுவீர்கள். பணப் பையையோ, பையையோ, காலணிகளையோ எடுத்துச்செல்லாதீர்கள். வழியிலே மக்களோடு பேசுவதற்காக நிற்காதீர்கள். ஒரு வீட்டினுள் நுழையும் முன்பே, ‘இவ்வீட்டில் அமைதி நிலவட்டும்’ என்று வாழ்த்துங்கள். அமைதிக்குத் தகுதியுள்ள மனிதன் அங்கு வாழ்ந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி அவனோடு தங்கட்டும். அமைதிக்குத் தகுதியற்ற மனிதன் அங்கிருந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி உங்களுக்கே திரும்பட்டும். அமைதியான வீட்டில் தங்குங்கள். அவ்வீட்டிலுள்ள மக்கள் தரும் உணவை உண்டு, பானத்தைப் பருகுங்கள். ஒரு வேலைக்காரனுக்குச் சம்பளம் தரப்படவேண்டும். இன்னொரு வீட்டில் தங்கும்பொருட்டு அந்த வீட்டைவிட்டுச் செல்லாதீர்கள்.

“ஒரு நகரத்தில் நுழையும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்றால் அவர்கள் உங்கள் முன் வைக்கும் உணவை சாப்பிடுங்கள். அங்கு வாழும் நோயுற்ற மக்களைக் குணப்படுத்துங்கள். பின்னர், ‘தேவனின் இராஜ்யம் உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறுங்கள்.

10 “ஒரு நகரத்துக்குப் போகும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், அந்நகரத்தில் உள்ள தெருக்களுக்குச் சென்று, 11 ‘எங்கள் கால்களில் பட்டிருக்கும் உங்கள் நகரத்தின் தூசியைக் கூட உங்களுக்கு எதிராகத் தட்டி விடுகிறோம். ஆனால் தேவனின் இராஜ்யம் சீக்கிரமாக வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள்.

லூக்கா 10:16-20

16 “ஒருவன் நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது அவன் உண்மையாகவே எனக்குச் செவிசாய்க்கிறான். ஆனால் ஒருவன் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவன் என்னை அனுப்பியவராகிய தேவனை ஏற்க மறுக்கிறான்” என்றார்.

சாத்தான் விழுதல்

17 எழுபத்திரண்டு மனிதர்களும் தங்கள் பயணத்தை முடித்துத் திரும்பியபோது மிக்க மகிழ்வோடு காணப்பட்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, உங்கள் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப்படிந்தன” என்றார்கள்.

18 அம்மனிதர்களை நோக்கி இயேசு, “வானிலிருந்து மின்னலைப்போன்று சாத்தான் வீழ்வதை நான் கண்டேன். 19 கேளுங்கள். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை நான் உங்களுக்குக் கொடுத்தேன். பகைவனின் (பிசாசின்) வல்லமையைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களை எதுவும் காயப்படுத்துவதில்லை. 20 ஆம், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகின்றன. மகிழ்ச்சியாக இருங்கள். ஏன், உங்களுக்கு இந்த வல்லமை இருப்பதால் அல்ல, உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதால் சந்தோஷப்படுங்கள்” என்று கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center