Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.
66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
2 அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
3 அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
4 உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.
5 தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
6 தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
7 தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.
8 ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
9 தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
47 நேரம் நிச்சயம் வரும்.
பாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன்.
பாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும்.
ஏராளமாக மரித்த ஜனங்கள்
அந்நகரத் தெருக்களில் கிடப்பார்கள்.
48 பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும்.
அவர்கள் சத்தமிடுவார்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து
பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிட்டது”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
49 “இஸ்ரவேலில் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
பூமியின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
எனவே பாபிலோன் விழவேண்டும்!
50 வாளுக்குத் தப்பியவர்களே,
வேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள்.
காத்திருக்காதீர்கள்!
நீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள்.
எருசலேமை நினையுங்கள்.
51 “யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம்.
நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம்.
ஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின்
பரிசுத்தமான இடங்களுக்குள் போயிருக்கிறார்கள்.”
52 கர்த்தர் கூறுகிறார்: “நேரம் வந்துக்கொண்டிருக்கிறது,
நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிப்பேன்.
அப்போது, புண்ப்பட்ட ஜனங்கள் வலியுடன்
நாட்டின் எல்லா இடங்களிலும் அழுவார்கள்.
53 பாபிலோன் வானத்தைத் தொடுகின்றவரை வளரலாம்.
பாபிலோன் தனது கோட்டைகளைப் பலப்படுத்தலாம்.
ஆனால் அந்நகரத்தை எதிர்த்து போரிடுமாறு நான் ஜனங்களை அனுப்புவேன்.
அந்த ஜனங்கள் அவளை அழிப்பார்கள்”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.
54 “பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும்.
பாபிலோன் தேசத்தில் ஜனங்கள் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்கமுடியும்.
55 விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார்.
அந்த நகரில் உள்ள உரத்த ஓசைகளை அவர் நிறுத்துவார்.
பகைவர்கள் இரைகின்ற அலைகளைப்போன்று வருவார்கள்.
சுற்றிலும் உள்ள ஜனங்கள் அந்த இரைச்சலைக் கேட்பார்கள்.
56 படை வந்து பாபிலோனை அழிக்கும்.
பாபிலோனின் வீரர்கள் கைப்பற்றப்படுவார்கள்.
அவர்களின் அம்புகள் உடைக்கப்படும்.
ஏனென்றால், கர்த்தர் ஜனங்கள் செய்த தீயசெயல்களுக்கு தண்டனையைக் கொடுக்கிறார்.
கர்த்தர் அவர்களுக்கேற்ற முழு தண்டனையையும் கொடுக்கிறார்.
57 நான் பாபிலோனின் ஞானிகளையும்
முக்கியமான அதிகாரிகளையும் குடிமயக்கத்துக்குள்ளாக்குவேன்.
நான் ஆளுநர்களையும் அதிகாரிகளையும்
வீரர்களையும்கூடக் குடிக்கச்செய்வேன்.
பிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள்.
அவர்கள் எப்பொழுதும் எழமாட்டார்கள்”
ராஜா இவற்றைச் சொன்னார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
58 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“பாபிலோனின் அகலமான வலிமையான சுவர் கீழேத்தள்ளப்படும்.
அவளது உயர்ந்த வாசல்கள் எரிக்கப்படும்.
பாபிலோன் ஜனங்கள் கடினமான வேலை செய்வார்கள்.
ஆனால் அது உதவாது.
அவர்கள் நகரைக் காப்பாற்ற முயல்வதில்
சோர்ந்து போவார்கள்.
ஆனால் அவர்கள் எரியும் நெருப்புக்கு எண்ணெய் போன்று ஆவார்கள்.”
கிறிஸ்தவர்களின் கொடுக்கும் தன்மை
8 சகோதர சகோதரிகளே இப்போது மக்கதோனியா சபைகளுக்கு தேவன் காட்டிய கிருபையைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். 2 அந்த விசுவாசிகள் பெருந்தொல்லைகளால் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஏழை மக்கள். ஆனால் தமக்குண்டான மிகுந்த மகிழ்ச்சியால் அவர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள். 3 தம்மால் முடிந்த அளவு அவர்கள் கொடுத்தார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அந்த விசுவாசிகள் தங்களால் முடிந்த அளவுக்கும் மீறி கொடுத்தார்கள். இதனை அவர்கள் சுதந்தரமாகச் செய்தனர். எவரும் அவர்களை அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. 4 ஆனால் அவர்கள் மீண்டும், மீண்டும் எங்களைக் கேட்டார்கள். தேவனுடைய மக்களுக்கான சேவையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப வேண்டினர். 5 நாம் எதிர்பார்த்திராத வகையில் அவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் தம் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால் கர்த்தருக்கும் எங்களுக்கும் தம்மையே கொடுத்தார்கள். இதைத்தான் தேவனும் விரும்புகிறார்.
6 எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். 7 நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center