Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.
66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
2 அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
3 அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
4 உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.
5 தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
6 தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
7 தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.
8 ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
9 தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
யூதாவில் மனாசே தனது கெட்ட ஆட்சியைத் துவங்குகிறான்
21 மனாசே ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எப்சிபாள்.
2 கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட காரியங்களையே மனாசே செய்துவந்தான். மற்ற தேசத்தினர் செய்த பயங்கரச் செயல்களையே இவனும் செய்தான். (இஸ்ரவேலர்கள் வந்தபோது அத்தகைய தேசத்தினரைக் கர்த்தர் நாட்டைவிட்டுத் துரத்தினார்) 3 தன் தந்தை எசேக்கியா அழித்த மேடைகளை பொய்த் தெய்வங்களின் கோவில்களை இவன் மீண்டும் கட்டினான். இவன் பாகாலின் பலிபீடங்களையும் அசெரியாவின் உருவத்தூண்களையும் இஸ்ரவேல் ராஜா ஆகாப் செய்தது போன்றே கட்டினான். இவன் வானில் உள்ள நட்சத்திரங்களையும் தொழுதுகொண்டு வந்தான். 4 கர்த்தருக்கான ஆலயங்களில் இவன் (பொய்த் தெய்வங்களுக்கான) பலிபீடங்களைக் கட்டினான். (“என் நாமத்தை எருசலேமில் வைப்பேன்” என்று இந்த இடத்தைத்தான் கர்த்தர் சொல்லியிருந்தார்) 5 கர்த்தருடைய ஆலயத்தின் இரு முற்றங்களிலும் வானில் உள்ள கோளங்களுக்கு (நட்சத்திரங்களுக்கு) பலி பீடங்களைக் கட்டினான். 6 தன் சொந்த குமாரனைப் பலியிட்டு நெருப்பில் தகனம் செய்தான். இவன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பலவழிகளில் முயன்றான். அவன் மத்திரவாதிகளையும் குறிச் சொல்லுகிறவர்களையும் அணுகினான்.
இவ்வாறு கர்த்தர் தவறென்று சொன்ன பல செயல்களை மனாசே செய்துவந்தான். இது கர்த்தருக்கு கோபத்தைக் கொடுத்தது. 7 அசெராவின் உருவம் செதுக்கிய சிலை ஒன்றை அவன் உருவாக்கினான். அதனை ஆலயத்தில் நிறுவினான். கர்த்தர் இந்த ஆலயத்தைப்பற்றி தாவீதிடமும் அவன் குமாரன் சாலொமோனிடமும், “இஸ்ரவேலிலுள்ள மற்ற நகரங்களை எல்லாம் விட்டு, விட்டு எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். இந்நகரத்திலுள்ள ஆலயத்தில் என் பெயரை எப்போதும் விளங்கவைப்பேன். 8 இஸ்ரவேலர்கள் தங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேற வைக்கமாட்டேன். எனது கட்டளைகளுக்கும் என் தாசனாகிய மோசே மூலம் கொடுத்த போதனைகளின்படியும் கீழ்ப்படிந்து நடப்பவர்களை இங்கே தங்கச் செய்வேன்” என்று சொல்லியிருந்தார். 9 ஆனால் ஜனங்கள் தேவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வருவதற்கு முன்னதாக கானானில் வாழ்ந்த தேசத்தவர்கள் செய்ததைவிடவும் மனாசே அதிகமாகத் தீய காரியங்களைச் செய்தான். இஸ்ரவேலர்கள் தங்கள் நிலத்திற்கு வந்தபொழுது கர்த்தர் அந்த தேசத்தவர்களை அழித்தார்.
10 தனது ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட செய்தியை கர்த்தர் சொல்லச்செய்தார்: 11 “யூத ராஜாவாகிய மனாசேயின் செயல்கள் வெறுக்கத்தக்கவை (மிக அருவருப்பானவை) இவன் இவனுக்கு முன்பு செய்த எமோரியர்களைவிட கெட்ட செயல்களைச் செய்கிறான். தனது விக்கிரகங்கள் மூலம் யூதர்களையும் பாவத்துக்குள்ளாக்குகிறான். 12 எனவே இஸ்ரவேலர்களின் கர்த்தர், ‘பார்! நான் எருசலேமிற்கும் யூதாவிற்கும் எதிராகப் பெருந்துன்பத்தைத் தருவேன். இதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். 13 எனவே எருசலேமின் மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன். ஒருவன் ஒரு தட்டை கழுவி துடைத்து கவிழ்த்து வைப்பது போன்று எருசலேமைச் செய்வேன். 14 இங்கே இன்னும் எனக்கு வேண்டிய சிலர் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விட்டுவிடுவேன். மற்றவர்களைப் பகைவர்களிடம் ஒப்படைப்பேன். பகைவர்கள் அவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்துச் செல்வார்கள். போரில் வீரர்கள் எடுத்துச்செல்லும் விலைமதிப்புடைய பொருட்களைப்போல அவர்கள் இருப்பார்கள். 15 ஏனென்றால் என்னுடைய ஜனங்களாகிய இவர்கள் நான் தவறென்று சொன்னவற்றைச் செய்தார்கள். இவர்களின் முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதலாகவே எனக்குக் கோபமூட்டும்படி செய்து வருகிறார்கள்.
மனிதனுக்குள் முரண்பாடு
14 சட்டவிதி ஆவிக்குரியது என நாம் அறிகிறோம். ஆனால் நான் அல்ல. ஒரு அடிமையின் மேல் ஆட்சி செலுத்துவதைப்போல பாவம் என்னை ஆளுகிறது. 15 நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். 16 நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும். 17 உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. 18 என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. 19 எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன். 20 அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.
21 அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். 22 என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 23 ஆனால் வேறொரு விதியும் என் சரீரத்திற்குள் இயங்குவதை அறிகிறேன். என் மனம் ஒத்துக்கொள்ளும் விதிக்கு எதிராக அது ஒரு போரையே நிகழ்த்துகிறது. அதுதான் பாவம் பற்றிய விதி ஆகும். அது என் உடலை அடக்கி, அதன் கைதியாக்கிக்கொள்கின்றது. 24 நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? 25 தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.
ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.
2008 by World Bible Translation Center