Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.
140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2 அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
3 அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.
4 கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
5 அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.
6 கர்த்தாவே, நீரே என் தேவன்.
கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
7 கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
நீரே என் மீட்பர்.
போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
8 கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.
9 கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
அவர்களைக் குழியில் தள்ளும்,
அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.
12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.
16 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“உங்களில் அத்தீர்க்கதரிசிகள் சொல்பவற்றில் கவனம் செலுத்தாதீர்கள்.
அவர்கள் உங்களை முட்டாளாக்க முயல்கிறார்கள்.
அத்தீர்க்கதரிசிகள் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார்கள்.
ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அத்தரிசனங்களைப் பெறவில்லை.
அவர்களின் தரிசனங்கள் அவர்களது சொந்த மனதிலிருந்தே வருகின்றன.
17 கர்த்தரிடமிருந்து வந்த உண்மையான செய்தியைச் சிலர் வெறுக்கிறார்கள்.
எனவே, அத்தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வேறுபட்டச் செய்தியைக் கூறுகிறார்கள்.
அவர்கள், ‘உங்களுக்கு சமாதானம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்.
சில ஜனங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
அவர்கள் தாங்கள் செய்யவிரும்புவதை மட்டுமே செய்கிறார்கள்.
எனவே அத்தீர்க்கதரிசிகள், ‘உங்களுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது!’ என்று கூறுகிறார்கள்.
18 ஆனால் அத்தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள்.
அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள்.
அவர்கள் எவரும் கர்த்தருடைய செய்தியை கூர்ந்து கவனமாகக் கேட்டிருக்கமாட்டார்கள்.
19 இப்பொழுது கர்த்தருடைய தண்டனை புயலைப் போன்று வரும்.
கர்த்தருடைய கோபம் கொடிய புயலைப்போன்றிருக்கும்.
கெட்ட மனிதர்களின் தலைகளை மோதித் தள்ளவரும்.
20 கர்த்தருடைய கோபம், அவர் என்ன செய்ய வேண்டும் என்று
திட்டமிட்டிருந்தாரோ அவற்றைச் செய்து முடிக்கும்வரை நிற்காது.
அந்த நாட்களின் முடிவில்
நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள்.
21 அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை.
ஆனால், அவர்கள் செய்தியைச் சொல்ல ஓடினார்கள்.
நான் அவர்களோடு பேசவில்லை.
ஆனால் அவர்கள் என் நாமத்தில் பிரசங்கம் செய்தனர்.
22 அவர்கள் எனது பரலோகச்சபையில் நின்றிருந்தால்,
பிறகு யூதாவின் ஜனங்களுக்கு என் செய்தியைச் சொல்லியிருப்பார்கள்.
அவர்கள் தீயசெயல் செய்யாமல் ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.
அவர்கள் பாவம் செய்யாதபடி ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.”
பிரச்சனைகளைப் பற்றிய எச்சரிக்கை
(மாற்கு 13:9-13; லூக்கா 21:12-17)
16 “கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். 17 மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். 18 ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். 19 நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். 20 அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார்.
21 “சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். 22 நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். 23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
24 “ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. 25 ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள்.
2008 by World Bible Translation Center