Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 140

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.

140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
    அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.

கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
    அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
    என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
    அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.

கர்த்தாவே, நீரே என் தேவன்.
    கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
    நீரே என் மீட்பர்.
    போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
    அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.

கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
    அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
    என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
    அவர்களைக் குழியில் தள்ளும்,
    அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
    அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.

12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
    தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
    நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.

ஆதியாகமம் 24:34-41

ரெபெக்காளைப் பெண் கேட்டுப் பேசுதல்

34 வேலையாள், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன். 35 கர்த்தர் எல்லாவகையிலும் என் எஜமானனை சிறப்பாக ஆசீர்வதித்திருக்கிறார். என் எஜமானன் பெரிய மனிதராகிவிட்டார். அவருக்கு ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளன. நிறைய வேலைக்காரர்களும் உள்ளனர். ஒட்டகங்களும் கழுதைகளும் இருக்கின்றன. 36 சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார். 37 என் எஜமானன் என்னை ஒரு வாக்குறுதி செய்யுமாறு வற்புறுத்தினார். என் எஜமானன் என்னிடம், ‘என் குமாரன் கானான் நாட்டுப் பெண்ணை மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் கானானியர்களுக்கிடையில் வாழ்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்ணை என் குமாரன் மணந்துகொள்ளக் கூடாது. 38 அதனால் எனது தந்தையின் நாட்டிலுள்ள எனது குடும்பத்தாரிடம் போய் என் குமாரனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்று சொன்னார். 39 அதற்கு நான், என் எஜமானிடம் ‘ஒருவேளை அந்தப் பெண் என்னோடு இங்கு வர மறுப்பாள்’ என்றேன். 40 உடனே அவர், ‘நான் கர்த்தருக்குச் சேவை செய்கிறேன். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன்பாக அனுப்பி உனக்கு உதவுவார். அங்கே எனது குடும்பத்தில் என் மகனுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடிப்பாய்’ என்று கூறினார். 41 ஆனால் அவர்கள் என் குமாரனுக்குப் பெண் கொடுக்க மறுத்தால் பிறகு நீ செய்த வாக்குறுதியிலிருந்து விடுதலை பெறுவாய்” என்றார்.

ஆதியாகமம் 24:50-67

50 லாபானும் பெத்துவேலும், “இது கர்த்தரிடமிருந்து வந்த காரியம் என உணர்கிறோம். ஆகையால் சொல்வதற்கு ஏதுமில்லை. 51 இதோ ரெபெக்காள் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டுபோம். அவள் உமது எஜமானனின் குமாரனை மணந்துகொள்ளட்டும். இதுவே கர்த்தரின் விருப்பம்” என்றனர்.

52 ஆபிரகாமின் வேலையாள் இதனைக் கேட்டு தரையில் விழுந்து கர்த்தரை வணங்கினான். 53 பின்னர் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களையெல்லாம் ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவன் அழகான ஆடைகளையும், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன நகைகளையும் கொடுத்தான். அவன் ரெபெக்காளின் தாய், சகோதரன் போன்றவர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். 54 பிறகு அவனும் அவனோடு வந்தவர்களும் அங்கே உண்டு இரவில் உறங்கினர். மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, “இப்போது நான் என் எஜமானனிடம் போக வேண்டும்” என்றனர்.

55 ரெபக்காளின் தாயும் சகோதரனும், “இவள் இன்னும் பத்து நாட்கள் எங்களோடு இருக்கட்டும். பிறகு அவளை அழைத்துப் போகலாம்” என்றனர்.

56 ஆனால் வேலையாளோ, “என்னைக் காத்திருக்கும்படி செய்யாதீர்கள். கர்த்தர் என் பயணத்தை வெற்றிகரமாக்கியுள்ளார். இப்போது என் எஜமானனிடம் போகவிடுங்கள்” என்றான்.

57 “ரெபெக்காளின் தாயும் சகோதரனும், நாங்கள் ரெபெக்காளை அழைத்து அவளது விருப்பத்தை அறியவேண்டும்” என்றனர். 58 அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?”

என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள்.

59 எனவே, அவர்கள் அவளை வேலையாளோடும் ஆட்களோடும் அனுப்ப அனுமதி கொடுத்தனர். ரெபெக்காளின் தாதியும் அவளோடு போனாள். 60 அவள் அவர்களை விட்டுப் போகும்போது அவளை ஆசீர்வதித்து:

“எங்கள் சகோதரியே லட்சக்கணக்கான ஜனங்களுக்கு நீ தாயாவாய்.
    உனது சந்ததியார் தங்கள் பகைவரை வெல்லுவார்கள். நகரங்களைக் கைப்பற்றுவார்கள்” என்றனர்.

61 பின் ரெபெக்காளும் அவளது தாதியும் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து வேலையாளைப் பின் தொடர்ந்து போனார்கள். அவன் அவர்களை அழைத்துக் கொண்டு போனான்.

62 ஈசாக்கு, பெயர்லகாய்ரோயியை விட்டு பாலைவனப் பகுதியில் வசித்துக்கொண்டிருந்தான். 63 ஒரு நாள் மாலை தியானம் செய்ய அவன் வயலுக்குச் சென்றான். அப்போது வெகு தூரத்திலிருந்து ஒட்டகங்கள் வருவதைப் பார்த்தான்.

64 ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள். 65 அவள் வேலைக்காரனிடம், “வயலில் நம்மை சந்திக்க வருகிறாரே அந்த இளைஞன் யார்?”

என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் குமாரன்” என்று பதில் சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டாள்.

66 ஈசாக்கிடம் வேலைக்காரன் நடந்ததை எல்லாம் விபரமாகச் சொன்னான். 67 பின் ஈசாக்கு அவளை அழைத்துக்கொண்டு அவனது தாயான சாராளின் கூடாரத்திற்குப் போனான். அன்று அவள் அவனது மனைவியானாள். ஈசாக்கு ரெபெக்காளைப் பெரிதும் நேசித்தான். அவன் தாயின் மரணத்தினால் அடைந்த துக்கம் குறைந்து அமைதியும் ஆறுதலும் பெற்றான்.

1 யோவான் 2:7-11

பிற மக்களை நேசிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டார்

எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும். இருந்த போதிலும் இக்கட்டளையை ஒரு புதிய கட்டளையாக உங்களுக்கு எழுதுகிறேன். இக்கட்டளை உண்மையானது. இதன் உண்மையை இயேசுவிலும் மற்றும் உங்களிலும் நீங்கள் காணலாம். இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன், “நான் ஒளியில் இருக்கிறேன்” என்கிறான். ஆனால் அவன் அவனது சகோதரனை வெறுக்கிறானென்றால், அவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றே பொருள்படும். 10 தன் சகோதரனை நேசிக்கிற மனிதன் ஒளியில் இருக்கிறான். பாவத்திற்குக் காரணமாக இருக்கிற எதுவும் அவனிடம் இல்லை. 11 ஆனால் சகோதரனை வெறுக்கிற ஒருவன் இருளில் இருக்கிறான். அவன் இருளில் வாழ்கிறான். அவன் எங்கு போய்க்கொண்டிருக்கிறான் என்பது அம்மனிதனுக்குத் தெரியாது. ஏன்? இருள் அவனைக் குருடனாக்கியிருக்கின்றது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center