Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 16

தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.

16 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர்,
    என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
பூமியிலுள்ள தன் சீடருக்கு கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார்.
    அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதை கர்த்தர் காட்டுகிறார்.
பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள்.
    அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன்.
    அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.

என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும்.
    கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
என் பரம்பரைச் சொத்து அற்புதமானது.
    நான் பெற்ற பங்கு மிக அழகானது.

எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
    இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
    அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும்.
    என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர்.
    உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர்.
    கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும்.
    உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.

உபாகமம் 32:15-27

15 “ஆனால் யெஷுரன் கொழுத்துப்போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான்
    (ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.)
அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான்.
    தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான்.
16 கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர்.
    கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
17 அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர்.
    அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும்.
    அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும்.
18 நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய்.
    உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.

19 “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார்.
    ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்!
20 அதனால் கர்த்தர் கூறினார்,
‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன்.
    அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்!
அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர்.
அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள்.
21 அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர்.
    இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர்.
    எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன்.
22 எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது.
    அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது.
    அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது.
    அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!

23 “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன்.
    நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன்.
24 அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள்.
    பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும்.
நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன்.
    விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும்.
25 வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள்.
அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள்.
    படைவீரர்கள் இளைஞர்களையும்,
இளம் பெண்களையும் கொல்வார்கள்.
    அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.

26 “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன்.
    எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்!
27 அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன்.
    பகைவருக்கு அது புரியாது,
அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள்:
    “கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’

உபாகமம் 32:39-43

39 “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்!
    வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன்.
நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன்.
    நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும்.
நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும்.
    எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது.
40 நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்.
    நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்!
41 நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன்.
    எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன்.
    அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன்.
42 எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள்.
கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள்.
எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும்.
அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’

43 “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார்.
    அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார்.
அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார்.
அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.”

லூக்கா 9:21-27

21 பிறருக்கு இதனைச் சொல்லாதபடிக்கு இயேசு அவர்களை எச்சரித்தார்.

இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்

(மத்தேயு 16:21-28; மாற்கு 8:31–9:1)

22 பின்பு இயேசு, “மனிதகுமாரன் பல விஷயங்களில் துன்புற வேண்டும். மூத்த யூதத் தலைவர்களும், முக்கியமான போதகர்களும், வேதபாரகரும் அவரை நிராகரிப்பர். மனித குமாரன் கொல்லப்படுவார். ஆனால் மூன்று நாட்களுக்குப் பின்னர் மரணத்தினின்று உயிர்த்தெழுவார்” என்றார்.

23 தொடர்ந்து அவர்களிடம் இயேசு, “என்னைப் பின்பற்றிவர யாரேனும் விரும்பினால், அவன் தனக்கு விருப்பமான செயல்களுக்கு மறுப்புச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் துயரங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும். 24 தனது உயிரைக் காப்பாற்ற விரும்பும் மனிதன் அதை இழந்துபோவான். தனது உயிரை எனக்காகக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும் அதைக் காப்பாற்றிக்கொள்வான். 25 ஒருவன் அழிந்துபோன நிலையில் இருந்தால் உலகம் முழுவதும் அவனுடையதாக இருந்தாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. 26 ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன். 27 உங்களுக்கு நான் உண்மையைச் சொல்கின்றேன். இங்கு நிற்பவர்களில் சிலர் தாம் மரணமடைவதற்கு முன் தேவனுடைய இராஜ்யத்தைக் காண்பார்கள்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center